நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

அமெரிக்க - சீன வணிக யுத்தம்... சிக்கிச் சிதையும் வாவே!

அமெரிக்க - சீன வணிக யுத்தம்... சிக்கிச் சிதையும் வாவே!
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்க - சீன வணிக யுத்தம்... சிக்கிச் சிதையும் வாவே!

அமெரிக்க - சீன வணிக யுத்தம்... சிக்கிச் சிதையும் வாவே!

லகம் இதுவரை பார்த்திராத வணிக யுத்தத்தில் சீனாவும் அமெரிக்காவும் தற்போது ஈடுபட்டிருக்கின்றன. இதன் ஒருபகுதியாக உலக அளவில் அதிகமான ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் இரண்டாவது பெரிய நிறுவனமான வாவே-வை (Huawei) அமெரிக்கா தனது தடை பட்டியலில் (Entity list) சேர்த்துள்ளது. இனி எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் இந்தப் பட்டியலில் இருக்கும் நிறுவனங்களுடன் வணிகம் நடத்த முடியாது.  

அமெரிக்க - சீன வணிக யுத்தம்... சிக்கிச் சிதையும் வாவே!

தொடரும் கைவிரிப்புகள்

இதனால் வாவே நிறுவனத்திற்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது கூகுள். வாவே போன்கள் இனி ஓப்பன் சோர்ஸ் ஆண்ட்ராய்டை மட்டுமே பயன்படுத்த முடியும். கூகுள் ப்ளே, கூகுள் ப்ளே புராடக்ட், யூடியூப், கூகுள் மேப்ஸ் போன்ற சேவை நிறுவனங்களும் தங்களது நேரடி சப்போர்ட்டைத் துறந்து, கைவிரித்திருக்கிறது. சீனாவுக்கு வெளியே வாவேவுக்கு இது மிகப் பெரிய பின்னடைவுதான்.  

ஹார்டுவேர் பக்கமும் வாவேவுக்கு பெரிய அடிதான். இன்டெல், நிவிடியா (Nvidia) போன்ற நிறுவனங்களின் உதவியில்லாமல் லேப்டாப் தயாரிப்பிலும் வாவே சிக்கலைச் சந்திக்க நேரும்.

வாவேவுக்கு மட்டும் ஏன் தடை?

எந்தச் சீன டெக் நிறுவனத்திற்கும் இல்லாத ஒரு தடையானது வாவேமீது மட்டும் ஏன் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

வாவே வெறும் ஸ்மார்ட்போன் தயாரிப்புடன் நின்றுவிடவில்லை; தொலைத்தொடர்புச்  சந்தையில் வாவேவின் பங்களிப்பு மிகப் பெரியது. அடுத்த பெரியத் தொழில்நுட்பப் புரட்சியாக பார்க்கப்படும் 5ஜி-யை உலகம் முழுக்க செயல் படுத்துவதில் வாவேவுக்கு மிகப் பெரிய பங்குண்டு.

இப்படித் தொலைத்தொடர்பு ஆதிக்கம் செலுத்துவதன்மூலம் சீன அரசிற்காக உளவு பார்க்கிறது வாவே. இந்த நிறுவனம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பினாமி நிறுவனம் என்கிறது அமெரிக்கா. நட்பு நாடுகளிடம் 5ஜி-யில் வாவேவை உள்ளே விடாதீர்கள் என அறிவுறுத்துகிறது. ஆனால், அமெரிக்காவின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறது வாவே.

வரலாற்றைப் பார்த்தால்...

தொழில்நுட்பத் துறையில் அமெரிக்க - சீன உறவு எவ்வளவு முக்கியம் என்பது 1980-களுக்குப் பின்னோக்கிப் பயணம் செய்தால் புரியும். ஆப்பிள் போன்ற நிறுவனங்களின்மூலம் அமெரிக்கா புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு களில் சிறந்து விளங்கியது. சீனா தொழிற் சாலைகளை அமைத்து, அமெரிக்காவின் தேவைகளை நிறைவேற்றியது. இதனால் சீனாவின் பொருளாதாரம் வெகுவாக வளர்ந்தது. 

காலப்போக்கில் சீனாவும் தொழில்நுட்ப வடிவமைப்பிலும் களம்கண்டது. இதைப் பார்த்து தங்களது தொழில்நுட்பத்தை சீனா திருடுவதாகக் குற்றம்சாட்டியது அமெரிக்கா.

இப்படி ஆரம்பித்த மோதல், தடைவரை வந்துவிட்டது. ஆனால், தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, இரு நாடுகளும் தனித்தனியே இயங்குவது மிகவும் கடினம். உதாரணமாக, வாவேவையே எடுத்துக்கொண்டால், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக ஓஎஸ் ஒன்றை வெளி யிடுவோம் என அறிவித்தது. ஆனால், இதற்காகத் தனி ஆப் ஸ்டோரைத் தயார் செய்ய வேண்டும். அதற்கு அனைத்து முன்னணி சேவைகளும் புதிய இயங்குதளத்திற்கு ஏற்றாற்போல ஒரு ஆப்பினை உருவாக்கவேண்டும். இதெல்லாம் இன்று தொடங்கி, நாளைக்குச் செய்துமுடித்துவிடக்கூடிய விஷயங்களல்ல.

இப்போது பார்க்க நல்ல நிலையில் இருப்பது போலத் தெரிந்தாலும், அமெரிக்காவும் இதில் பெரும் சரிவைச் சந்திக்கும். வாவேகூட மற்ற நாடு களில் இருக்கும் இரண்டாம்பட்ச மாற்று நிறுவனங்களிடம் சென்றுவிடும். அமெரிக்காவிற்கு அப்படியில்லை; சீனா இல்லையென்றால் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளில் விலையேற்றம் இருக்கும். சீனாவில் சோயாபீன்ஸ் மீதான கூடுதல் வரியால் அமெரிக்க விவசாயிகள் அல்லல்படுகின்றனர். இப்படி விளைவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடந்த ஆண்டு முடிவில் ஈரான்மீது இருக்கும் வர்த்தகத் தடைகளை மீறிச் செயல்பட்டதாக வாவேயின் முதன்மை நிதி அதிகாரியைக் கைது செய்திருந்தது ட்ரம்ப் அரசு. சீனா தங்களது வர்த்தக நிலைப்பாட்டைத் தளர்த்தி நல்லதொரு ஒப்பந்தத்திற்கு வந்தால், அவரின் வழக்கில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பேன் என்றார் ட்ரம்ப்.

இப்படிக் கைதிகளைப் பிடித்துவைத்து மிரட்டும் அளவுக்கு மோசமாகிவிட்டது அமெரிக்காவின் நிலைமை. உலக வர்த்தக அமைப்பு (WTO) போன்ற அமைப்புகள் மீண்டும் குறுக்கிட்டு இரு நாடுகளையும் சமாதானப் படுத்துவதுதான் அனைவருக்கும் நல்லது. ஆனால், இருவருமே சமரசத்துக்கு வளைந்துகொடுக்கிற நிலையில் இல்லை.

சுருக்கமாக, இந்த மோதலினால் பாதிக்கப் படப்போவது வாடிக்கையாளர்கள்தான். வாவே மீதான கட்டுப்பாடு இன்னும் சில நாள்களில் இந்தியச் சந்தைகளில் எதிரொலிக்கும்!

ம.காசி விஸ்வநாதன்