Published:Updated:

காஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது ஏன்?! ஹலோ... ப்ளூ டிக் நண்பா!

காஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது ஏன்?! ஹலோ... ப்ளூ டிக் நண்பா!

வரைபடத்தின் படி இன்னும் அது இந்தியாவின் பகுதி தான். ஆனால், அப்பிரதேசம் பாகிஸ்தானின் ராணுவ ஆளுகைக்கு உட்பட்டிருப்பதால் பாகிஸ்தான் என்கிறார்கள்.

காஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது ஏன்?! ஹலோ... ப்ளூ டிக் நண்பா!

வரைபடத்தின் படி இன்னும் அது இந்தியாவின் பகுதி தான். ஆனால், அப்பிரதேசம் பாகிஸ்தானின் ராணுவ ஆளுகைக்கு உட்பட்டிருப்பதால் பாகிஸ்தான் என்கிறார்கள்.

Published:Updated:
காஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது ஏன்?! ஹலோ... ப்ளூ டிக் நண்பா!

`பாகிஸ்தான் மீது, இந்தியா போர் தொடுத்தாக‌ வேண்டும்' எனக் கூவியவர்களுக்கும், `இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்’ என அகவியவர்களுக்கும் இடையே அபிநந்தன் வர்த்தமான் என்கிற பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர், வாகா எல்லையில் வைத்துத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். வெகுமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்கும் தருணத்தில் உறுத்தும் சில விஷயங்களைச் சிந்திக்கவேண்டியுள்ளது.

அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டுப் பேசும் காணொலியில் தன் பெயர், பதவி, சேவை எண் சொல்லிவிட்டு `இந்து’ என தன் மதத்தையும் சொல்கிறார். தொடர்ந்து அவர்கள் விசாரிக்கையில் அதற்குமேல் சொல்ல அனுமதியில்லை என மறுக்கிறார். நன்று. ஆனால், இங்கே அவர் தன் மதத்தைச் சொல்வது அவசியமா?

ராணுவம் அப்படிச் சொல்லிக்கொடுக்கிறதா? இந்து என அங்கு அடையாளப்படுத்திக்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது ஒரு பக்கம். அதை அங்கே சொல்ல என்ன அவசியமிருக்கிறது? அவர் இஸ்லாமியராக இருந்தாலும் சொல்லியிருப்பாரா?

அபிநந்தன் சென்ற விமானம் MiG-21 Bison. அது 1960-களின் ஆரம்பத்திலிருந்து இந்தியா பயன்படுத்திவருகிறது. அரை நூற்றாண்டுப் பழஞ்சரக்கு. இன்னும் அதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம். 1980-களிலேயே இதற்கு மாற்றாக Tejas என்கிற Light Combat Aircraft (LCA) வகை போர் விமானங்களை ந‌ம் Aeronautical Development Agency (ADA) வடிவமைக்கத் தொடங்கியது. பிறகு, Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்திடம் அதன் தயாரிப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இன்னமும் Tejas முழுத் திருப்திகரமாக முடியவில்லை என்பதால், இன்னும் MiG-21ஐயே பயன்படுத்துகிறோம். ஃபார்முலா-1 ரேஸுக்கு மாருதி ஸ்விஃப்ட் எடுத்துப் போவதுபோல். ஒரே ஆறுதல் அதை Interceptor Aircraft-ஆக மட்டுமே பயன்படுத்துகிறார்க‌ள் என்பதுதான். அதாவது தாக்குதலுக்கு அல்லாமல் தடுப்பாட்டம் மற்றும் திருப்பித் தாக்க‌ மட்டும். நம் பிரதமரோ ``ரஃபேல் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் வலுவாக பதிலடி கொடுத்திருக்கலாம்'' என்று சொல்கிறார்.

ஊடகங்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த‌ MiG-21 விமானங்களை `பறக்கும் சவப்பெட்டி’ எனக் கேலி செய்கின்றன. விரைவில் நாம் இவற்றை கை கழுவாவிடில், நாமே நம் வீரர்களைக் கொன்றவர்களாகிவிடுவோம். நாம் வைத்திருப்பது ராணுவம்தானேயொழிய‌, தற்கொலைப்படை அல்ல என்பதை நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.

அபிநந்தன் பாராசூட் கட்டிக் குதித்த‌ இடம் பீம்பர் மாவட்டத்தில் உள்ள‌ ஹோர்ரான் என்ற கிராமம். அங்கு இருந்தவர்களிடம் தான் எங்கு இருக்கிறேன், இந்தியாவிலா, பாகிஸ்தானிலா எனக் கேட்கிறார். சுற்றி இருந்த இளைஞர்களில் ஒருவன் `இந்தியா' என்கிறான். தான் விங் கமாண்டர் என்றும், முதுகில் அடிப்பட்டிருப்பதாகவும், தண்ணீர் வேண்டும் என்றும் சொல்லி, இந்தியில் முழக்கங்களிட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் சினமுற்று `பாகிஸ்தான் ஜிந்தாபாத்!’ என்று சொல்லி அவரைத் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள் (அதில் சிலர் தடுத்திருக்கிறார்கள்). உடனே சுதாரித்தவர், துப்பாக்கியால் வானத்தில் சிலமுறை சுட்டுவிட்டு ஓடி, கையில் இருந்த ஆவணங்களை விழுங்கியும் அருகில் இருந்த குளத்தில் கிழித்தெறிந்தும் அழிக்க முற்பட்டிருக்கிறார்.

இளைஞர்களிடமும் துப்பாக்கி இருந்திருக்கிறது. அதில் ஒருவன்  சுட்டிருக்கிறான். அதற்குள் பாகிஸ்தான் ராணுவம் அந்த இடத்துக்கு வந்து அவர்களிடமிருந்து அபிநந்தனை மீட்டு அழைத்துச் சென்றிருக்கிறது. அதனால்தான் முதலில் வெளியான படங்களில் முகத்தில் ரத்தக் காயங்களுடன் காணப்படுகிறார் அபிநந்தன். இதையெல்லாம் சொல்லியிருப்பது அந்தக் கிராமத்தின் தலைவர் முகமது ரஸாக் சௌத்ரி என்பவர்.

இந்திய விமானி பாகிஸ்தானில் பிடிபட்டார் என்றுதான் நம் ஊடகங்கள் திரும்பத் திரும்பச் சொல்கின்ற‌ன. ஆனால் உண்மை என்னவெனில், ஹோர்ரான் கிராமம் காஷ்மீரின் ஒரு பகுதி. ஆசாத் காஷ்மீர் அல்லது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படும் இடம். அதற்கு தனி பிரதமரும் அதிபரும் உண்டு. அதன் பிரதிநிதிகள், பாகிஸ்தான் நாடாளுமன்றம் போவதில்லை. கிட்டத்தட்ட தனி நாடு! வரைபடத்தின்படி இன்னும் அது இந்தியாவின் பகுதிதான். ஆனால், அந்தப் பிரதேசம் பாகிஸ்தானின் ராணுவ ஆளுகைக்கு உட்பட்டிருப்பதால் பாகிஸ்தான் என்கிறார்கள்.

சொல்ல வந்தது அதுவல்ல; அந்தக் கிராம‌ மக்கள். அவர்கள் ஓர் இந்தியனை ஏன் அவ்வளவு வெறுக்கிறார்கள், ஏன் தங்களை பாகிஸ்தானுக்கு நெருக்கமாகக் கருதிக்கொள்கிறார்கள் அல்லது இப்படியெல்லாம் நடக்கும்ப‌டி பாகிஸ்தான் அவர்களை தலைமுறைகளாக மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறதா? அவர்களிடம் ஆயுதப் புழக்கம் இருக்கிறது என்பதையும் கவனிக்கலாம். அபிநந்தன், தன் விமானம் பழுதடைவதற்கு முன் F-16 வகை பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக சொல்கிறார்கள். அதிலிருந்து தப்பித்து விழுந்த பாகிஸ்தானி விமானியை இந்தியன் என்றெண்ணி ஆசாத் காஷ்மீர் மக்கள் அடித்துக் கொன்றுவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி உலவுகிறது. அது உண்மையெனில், அதையும் இதோடு இணைத்துப் பார்க்கலாம். இந்தியா காஷ்மீரில், மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த விரும்பாததைப் புரிந்துகொள்ள முடிகிறது.

***

`Yours Shamefully 2’ என்றொரு குறும்படம். ஒரு பெண் ஓர் ஆணின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தால், கேள்வியேதும் கேட்காமல் அதை நம் சமூகம் நம்புகிறது. ஒருவேளை அந்த ஆண் நிரபராதியாக இருந்தால், அந்த‌க் கறை படிந்த சமூக அடையாளத்தைத் துடைக்க பல்லாண்டுகள் சிரமப்பட வேண்டும் என்ற முக்கியமான, இன்றைய சமூக வலைதள யுகத்தில் பேச அவசியமான விஷயத்தை மிக அமெச்சூராக எடுத்துவைத்திருக்கிறார்கள்.

இதை ஒரு வகையில் சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்புற்ற #MeToo இயக்கத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அதன் இயல்பு `Name and Shame’ என்பதால் பழிவாங்கும், வன்மம் தீர்க்கும் ஆயுதமாக அதை சுலபமாகப் பயன்படுத்த முடியும்.

நம் எழுத்தாளர்களும் ஊடகங்களும் ஒன்று அதற்கு ஆதரவாக இருந்தன அல்லது மௌனம் காத்தன. எதிர்ப்பை விடுங்கள், விமர்சனம்கூட வைக்க முடியவில்லை. நான் அறிந்து, ஜெயமோகன் ஒரு நல்ல கட்டுரை எழுதினார், அதன் போதாமைகளை முன்வைத்து. அபிலாஷ், அதன் குறைபாடுகளைப் பற்றி தனிப் புத்தகமே எழுதினார் (உயிர்மை வெளியீடு). மற்ற எவரும் வாய் திறக்கவில்லை. அத்தனை பயம் இருந்தது. ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒரு பெண்ணிய எழுத்தாளர் `மீடூ இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசாத ஆண் படைப்பாளிகள் எல்லோரும் தன் மீது எப்போது குற்றச்சாட்டு வரும் எனப் பயந்திருக்கிறார்களா?' என்பதாக‌க் கேட்டார். எத்தனை தட்டையான சிந்தனை! பதிலுக்கு `மீடூ குற்றச்சாட்டு எழுப்பாத பெண்கள் எல்லோரும் தொந்தரவுகளுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தவர்களா?' என எதிர்தரப்புக்காரர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா? விதண்டாவாதம் என்பது இருபுறமும் கூரான கத்தி!

***

`கடலில் மீன் ஒண்ணு அழுதா... கரைக்கு சேதி வந்து சேருமா?' இது வைரமுத்து வரி. `பூமி பூமி’ பாடலில் வருவது (செக்கச் சிவந்த வானம்). அதாவது கண்ணீர் கடலில் கரைந்துபோவதால் கரையில் இருப்போருக்கு மீன் அழுததே தெரிய வராது என்கிறார்.

நல்ல கற்பனை. நெடுங்காலமாய் இது கவிப்பேரரசரை மிகவும் பீடித்திருப்பதாகத் தெரிகிறது. சுமார் இருபதாண்டுகள் முன்பும் இதே விஷயத்தை எழுதியிருக்கிறார்!

`தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல' - `சங்கமம்' படத்தில் வரும் `மழைத்துளி மழைத்துளி...’ பாடலின் வரி. ஆனால், மீன் உண்மையில் அழுமா?

இரண்டுவிதமாக இந்தக் கேள்வியை அணுகலாம். மீனுக்கு அழத் தேவையிருக்கிறதா... மீனுக்கு அழச் சாத்தியமா? அழுகை என்பதை, கவன ஈர்ப்புக்காகக் குழந்தைகளும், காரியம் சாதிக்கப் பெண்களும், கஷ்டத்தை வெளிப்படுத்த ஆண்களும் பயன்படுத்திவருகிறார்கள். என்றாலும், உண்மையில் அழுகையின் பயன் கண்களுக்கு ஈரப்பதத்தை வழங்குவதே. Cornea என்ற‌ விழிப்படலம் தெளிந்த‌ பார்வையளிக்க‌ Lubrication தேவை. ஆனால், மீன்கள் எப்போதும் தண்ணீரிலேயே இருப்பதால் கண்ணீரின் மூலம்தான் கண்கள் ஈரப்பதத்தை அடைய வேண்டும் என்கிற அவசியம் அவற்றுக்கில்லை.

அடுத்தது, அவற்றின் அழுகைச் சாத்தியப்பாடு. அழுகை உணர்வு தொடர்புடையது. அதற்கு மூளையில் செரிப்ரல் கார்டெக்ஸ் தேவை. பாலூட்டிகள் போன்ற பெரிய மூளைகொண்ட‌ உயிரினங்களுக்கே அந்தப் பகுதி உண்டு. நாய்களும் யானைகளும் அழுவது அதனால்தான். மீனுக்கு அது இல்லை. தவிர, உணர்வுக‌ள் வந்தாலும் கண்ணீர்த்துளி சுரக்க லேக்ரிமல் சுரப்பி அவசியம். அதுவும் மீனுக்குக் கிடையாது.

`கவிதைக்குப் பொய்யழகு' என வைரமுத்து இவற்றை எழுதும் முன்பே முன்ஜாமீன் வாங்கி வைத்திருப்பதாலும், விஞ்ஞானத்தை பாடல் வரிகளில் நிறைய புகுத்தியவர் என்பதாலும் இப்படி விஞ்ஞானத்துடன் வீம்பாக விளையாடியதை மன்னிக்கலாம்.

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களை கேட்க ஆர்வமாக இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்!