Published:Updated:

``நாக்பூரில் சாதிப்பாரா தோனி!” - காத்திருக்கும் ரசிகர்கள்

``நாக்பூரில் சாதிப்பாரா தோனி!”  - காத்திருக்கும் ரசிகர்கள்
``நாக்பூரில் சாதிப்பாரா தோனி!” - காத்திருக்கும் ரசிகர்கள்


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.  ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 236 ரன்கள் எடுத்தது. பின்னர், 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணி, 100 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த இக்கட்டான கட்டத்தில் களமிறங்கிய தோனி, பொறுப்புடன் விளையாடினார்.  கேதர் ஜாதவ் - தோனி கூட்டணி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. 
 
கடந்த ஆண்டு, மோசமான பேட்டிங் காரணமாக விமர்சனத்திற்குள்ளான தோனி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிவருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். 2019ல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இதுவரை 4 அரை சதங்கள் விளாசியுள்ளார். இவை அனைத்தும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது. 


இந்நிலையில்தான், தோனி இந்தத் தொடரில் இன்னும் 33 ரன்கள் எடுத்தால், அனைத்து வகையாக கிரிக்கெட் போட்டியிலும் 17,000 ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெறுவார். இதற்கு முன்பாக, சச்சின் டெண்டுல்கர் (34,357), ராகுல் டிராவிட் (24,208), விராட் கோலி (19,453), சௌரவ் கங்குலி (18,575), சேவாக் (17,253) ரன்கள் எடுத்துள்ளனர். தோனி, இதுவரை  டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,876,  ஒரு நாள் தொடரில் 10,474, டி-20 போட்டிகளில் 1,617 ரன்களும் எடுத்துள்ளார். இந்தச் சாதனையை எட்ட இன்னும் 33 ரன்களே தேவை.

போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானம் தோனிக்கு மிகவும் ராசியானது. இந்த மைதானத்தில் அவர் விளையாடிய 5 போட்டிகளில் 2 சதங்கள் விளாசியுள்ளார். இன்றைய போட்டியில் அவர் மிரட்டினால், அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.