Published:Updated:

முதல் முறையாக மலைக்கிராமங்களில் செல்லும் ஒரு பேருந்து மீது இத்தனை எதிர்பார்ப்பா?

முதல் முறையாக மலைக்கிராமங்களில் செல்லும் ஒரு பேருந்து மீது இத்தனை எதிர்பார்ப்பா?
முதல் முறையாக மலைக்கிராமங்களில் செல்லும் ஒரு பேருந்து மீது இத்தனை எதிர்பார்ப்பா?

சென்ற ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள்.... மலைக்கிராமமான கொங்காடையில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழா உற்சாகமாக நடந்துகொண்டிருந்தது. பல்வேறு நிகழ்ச்சிகளின் முடிவில் களி மண்ணால் உருவங்கள் செய்யக் கற்றுத்தந்தார் பயிற்சியாளர் எழிலன். ஆசையோடு கற்றுக்கொண்டவர்களின் கை நிறைய மீண்டும் களி மண்ணைக் கொடுத்து, 'உங்களுக்குப் பிடித்த ஒன்றை இந்தக் களி மண்ணைக் கொண்டு உருவமாகச் செய்து, அதோ அந்த மரத்தடியில் வையுங்கள்' என்றார். மாணவர்களும் மகிழ்ச்சியோடு செய்யத்தொடங்கினர். சிறிது நேரம் கழித்து, எல்லோரும் தாங்கள் செய்த உருவங்களை மரத்தடியில் வைத்து, விளையாடச் சென்றுவிட்டனர். என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கச் சென்றார் எழிலன். சாமி சிலை, மனித உருவம், மலை, மரம் என விதவிதமாக இருந்த களி மண் சிற்பங்கள் இடையே எழிலனை ஆச்சர்யப்பட வைத்தது ஒரு சிற்பம். அதுதான் பிக்கப் வண்டி! அதைச் செய்திருந்தது சேதுபதி எனும் சிறுவன்.

கொங்காடை மலைகிராமம். அந்தியூரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்த ஊருக்குச் செல்ல பேருந்து வசதி கிடையாது. எதுவாங்க வேண்டும் என்றாலும் அந்தியூர் வருவதற்குத் தனியாரால் இயக்கப்படும் மினி டெம்போ வண்டிகளையே பிக்கப் வண்டி என்று அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள். அதைத்தான் சேதுபதி களிமண் சிற்பமாகச் செய்திருந்தான். அந்தளவுக்கு அவன் மனதில் அது இடம்பெற என்ன காரணம்? படிப்பதற்காக என்றாலும் உடல்நிலை சரியில்லை என்றாலும் அந்த பிக்கப் வண்டியில்தான் செல்ல வேண்டும். இதனால், பல அத்தியாவசிய விஷயங்களே அந்தப் பகுதி மக்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த நிலையில் சின்ன மாற்றமாக, கடந்த வாரம் முதல் அந்தியூரிலிருந்து கொங்காடைக்கு காலை, மாலை ஒருமுறை செல்லும் பேருந்து விடப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து அப்பகுதி மக்களின் வாழ்வில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும் என, மலைப்பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நடத்திவரும் `சுடர்' நடராஜனிடம் பேசினேன். 

 ``அந்தியூர் - கொங்காடை இடையே பேருந்து விடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதன் முதல் மகிழ்ச்சியான விஷயம் என்ன தெரியுமா? இந்தப் பகுதியில் தன் வாழ்நாளில் ஒருமுறைகூட பேருந்தைப் பார்க்காதவர்களும் சிலர் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் முதன்முறையாகப் பேருந்தைப் பார்க்கவிருக்கிறார்கள். அடுத்து, மின் கட்டணம் 40 ரூபாயாக இருக்கும். ஆனால், அதைக் கட்டுவதற்கு பிக்கப் வண்டியில் சென்றுவர 100 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். பிறகு, பேருந்து வசதியில்லாததால் அரசுத் துறை அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை இங்கே வர சுணக்கம் காட்டிவந்தனர். அதனால், பல நல்ல திட்டங்களின் முழு பயனையும் பெற முடியாமல் போய்விட்டார்கள். இதெல்லாம் இந்த நிலையில், இப்போது விடப்பட்டிருக்கும் ஒரு பேருந்தால் மாற்றம் வரும் என நம்புகிறோம். 

இந்தப் பகுதியில் 8 அரசுப் பள்ளிகளும் நாங்கள் நடத்தும் 3 பள்ளிகளுமாக சுமார் ஆயிரம் மாணவர்கள் படித்துவருகின்றனர். அந்தியூரிலிருந்து வேன் அல்லது பிக்கப் வண்டியில் ஆசிரியர்கள் காலை 8 மணிக்குப் புறப்பட்டால், கடைசி ஊரான கொங்காடைக்கு வர 12 மணியாகி விடும். அதன்பின் தொடங்கும் பள்ளியில் ஒரு மணி நேரத்தில் உணவு இடைவேளையாகி விடும். பின் தொடரும் பள்ளியில் மாலை 3 - 4 க்குள் புறப்படும் வண்டியில் ஆசிரியர்கள் புறப்பட்டால்தான் இரவு தொடங்குவதற்கு முன் அந்தியூர் வர முடியும். இந்தக் கணக்கின்படி பார்த்தால், தினந்தோறும் 2 மணியிலிருந்து 3 மணி நேரம்தான் பள்ளியில் பாடங்கள் நடத்தப்படும். மேலும், இது மலைப் பகுதி. தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் எண்ணம் கொண்ட பெற்றோர்கள் மிக மிகக் குறைவு. அதனால், அப்படி அனுப்பாத குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஆசிரியர் பேசி, பள்ளிக்கு அழைத்து வருவது சாத்தியமில்லாததாகி விடுகிறது. 

அக்னிபாவி எனும் கிராமத்தில் நாங்கள் நடத்தும் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் 5-வது வரைப் படிக்கும் மாணவர்கள் அடுத்து கல்வியைத் தொடர வேண்டுமென்றால், 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒசூருக்கு நடந்துதான் செல்ல வேண்டும். பிக்கப் வண்டியில் செல்லும் அளவுக்கு வசதி கிடையாது. அதனால், பலரும் 5-ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். இப்படி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொடர்பாகவே போக்குவரத்து இல்லாததால் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்துவருகின்றனர். இந்த நிலையில், இப்போது விடப்பட்டிருக்கும் பேருந்து, காலையில் 7 மணிக்கு அந்தியூரிலிருந்து கிளம்பி, 10 மணிக்குக் கொங்காடைக்கு வருகிறது. அதேபோல, மாலை 4 மணிக்குக் கொங்காடையில் புறப்பட்டு, அந்தியூருக்குச் செல்கிறது. இதில் ஆசிரியர்கள் வரும் பட்சத்தில் கிட்டத்தட்ட முழுநாள் பள்ளியில் பாடம் நடத்தப்படும் சூழல் அமையும். 

இப்பேருந்து பல நல்ல விஷயங்களை, இந்தப் பகுதியில் சாத்தியப்படுத்தும் என்றாலும் இரண்டு முக்கியக் கோரிக்கைள் உள்ளன. ஒன்று, பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்கு ஆலோசனை செய்ய வேண்டும். அடுத்து, இன்னொரு பேருந்தை காலையில் கொங்காடையிலிருந்து, மாலை அந்தியூரிலிருந்து புறப்படும் விதத்தில் அமைத்தால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக, பேருந்துகளின் நேரத்தைப் பள்ளியின் வேலை நேரத்தைக் கணக்கில் கொண்டு திட்டமிட வேண்டும். அப்போதே இந்தப் பேருந்து பயணம் முழு பலனையும் அம்மக்களும் அடுத்த தலைமுறையினருக்கு கல்வியையும் அளிக்கும்." என்கிறார். 

நம் நாடு சுதந்திரம் அடைந்து, இத்தனை ஆண்டுகள் கழித்தும் முதல்முறையாக ஒரு பகுதிக்கு பேருந்து விடப்படுவதும், இன்னொரு பேருந்து விடக் கோருவது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், அம்மலைப்பகுதியில் யதார்த்தம் அதுதான்.