Published:Updated:

வீட்டிலேயே நாட்டு வெடிகள் தயாரிப்பு! - ரகசியத் தகவலால் சிக்கிய 3 பேர்

வீட்டிலேயே நாட்டு வெடிகள் தயாரிப்பு! - ரகசியத் தகவலால் சிக்கிய 3 பேர்
வீட்டிலேயே நாட்டு வெடிகள் தயாரிப்பு! - ரகசியத் தகவலால் சிக்கிய 3 பேர்

அரசு அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த மூன்று பேரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து பல்வேறு ரக நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே அமைந்துள்ளது, குயவன் குப்பம் கிராமம். இக்கிராமத்தில், அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரிப்பதாகக் காவல் துறைக்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி உத்தரவின்படி மீன்சுருட்டி ஆய்வாளர் மலைச்சாமி தலைமையில், குயவன் குப்பம் கிராமத்தில் காவல் துறையினர் சோதனைசெய்தனர். அப்போது, உரிய அனுமதியில்லாமல் சணல் வெடி, சரவெடி, வாணவெடி தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதன்பேரில், கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மற்றும் இவரிடம் வேலை செய்த ஓலையூர் கிராமத்தைச்  சேர்ந்த  மணிகண்டன், மோகன சுந்தரம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.  அவர்களிடமிருந்த வெடிகள் தயாரிக்கப் பயன்படுத்தும் அமோனியா 4 கிலோ, சணல் வெடி, சரவெடிகள், வாணவெடிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, போலீஸார் அவர்களிடம் விசாரணை செய்துவருகின்றனர்.

 காவல் துறையினரிடம் பேசினோம். ”இம்மாவட்டத்தில், பல இடங்களில் விதிமுறை மீறி நாட்டு வெடிகளைத் தயாரித்துவருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அதிக சத்தத்துடன் வெடிக்க வேண்டும் என்பதற்காக வரைமுறை இல்லாமல் வெடிமருந்து பயன்படுத்துவதாகத் தகவல் வந்தது. அதன்பேரில், சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து விசாரித்துவருகிறோம். எதுவும் அசம்பாவிதம் நடக்காமலிருக்க,  முன்னதாகவே இந்த நடவடிக்கையை எடுத்துவருகிறோம்" என்றார்.