Published:Updated:

முதல் பெண்கள்: கேப்டன் லக்ஷ்மி

முதல் பெண்கள்: கேப்டன் லக்ஷ்மி
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்: கேப்டன் லக்ஷ்மி

ஹம்சத்வனி, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

முதல் பெண்கள்: கேப்டன் லக்ஷ்மி

ஹம்சத்வனி, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
முதல் பெண்கள்: கேப்டன் லக்ஷ்மி
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்: கேப்டன் லக்ஷ்மி

* குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்;
* இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண் படைத் தலைவர்;
* `ஆசாத் ஹிந்த்'தின் முதல் மற்றும் ஒரே பெண் அமைச்சர்;
* அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனர் - தலைவர்

``1,500 பெண்கள்! ஜான்சி ராணி ரெஜிமென்ட்டை போஸ் தொடங்கும்போது அங்கு வந்து சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இது. எனக்கு இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் சாதாரண இந்தியப் பெண்கள். பெரிதாகக் கல்வி அறிவோ, பெரிய அரசியல் பின்புலமோ, பொருளாதார வசதியோ இல்லாத குடும்ப நிர்வாகிகள்; தொழிலாளர்கள்; ரப்பர் எஸ்டேட்களில் வேலை செய்துவந்தவர்களின் குடும்பப் பெண்கள்; பெட்டிக்கடை வைத்திருந்த பெண்கள்… போஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஒன்றிணைந்த இந்தப் பெண்கள் பயிற்சிக்கு உரிய முக்கியத்துவம் தந்து உடல்நலம் பேணியவர்கள். எந்தச் சூழலிலும் அச்சம்கொள்ளாதவர்கள். இறுதிவரை அதே ஒற்றுமையுடன், மன உறுதியுடன் இருந்தவர்கள். ஜான்சி ராணி ரெஜிமென்ட்டை போஸ் கலைக்க முற்பட்டபோது அவர்களில் பலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. போஸுக்கு ரத்தத்தில் கையெழுத்திட்டு கலைக்க வேண்டாம் என்று கடிதங்கள் அனுப்பினார்கள்.''

- ஜான்சி ராணி ரெஜிமென்ட்டின் பெண்கள் குறித்து கேப்டன் லக்ஷ்மி சேகல் (2006).

1914 அக்டோபர் 24 அன்று சென்னை நகரில் அம்முவுக்கும் வழக்கறிஞர் சுவாமிநாதனுக்கும் மகளாகப் பிறந்தார் லக்ஷ்மி. இங்கிலாந்தில் சட்டம் பயின்றிருந்த சுவாமிநாதன், முற்போக்கு சிந்தனை கொண்டவர். மனைவி அம்முவை ஒரு விடுதலைப் போராட்ட வீராங்கனையாக, இந்தியாவின் சட்ட வரைவுக் குழு உறுப்பின ராகச் செதுக்கியதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. அதே போல, மகள்களையும் நேர்த்தி யாக வளர்த்தார் சுவாமிநாதன். சிறு வயது முதலே துடுக்குத்தனமும் நேர்மையும்கொண்ட பெண்ணாக வளர்ந்தார் லக்ஷ்மி. கேரளாவில் இருந்த தன் பாட்டி வீட்டில்தான் புரட்சிக்கான முதல் வித்தை ஊன்றினார் அவர்.

முதல் பெண்கள்: கேப்டன் லக்ஷ்மி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலக்காட்டின் வடக்கத் நாயர் வம்சத்தைச் சேர்ந்த லக்ஷ்மியின் பாட்டி தன் வீட்டினுள் மற்ற சாதியினரை அனுமதிப்பதில்லை. அணக்கரைப் பகுதியின் வனங்களில் வசித்த எளிய சிறுமிகளை ஓட ஓட விரட்டுவார் பாட்டி. `அவர்களின் நிழல் பட்டாலே தீட்டு' என்கிற பாட்டியின் சொல் கேட்ட லக்ஷ்மி, அந்தச் சிறுமிகளின் கைபற்றி விளையாடத் தொடங்க, வீட்டில் பூகம்பம் வெடித்தது. பாட்டியும் பேத்தியும் முறைத்துக்கொண்டார்கள். தன் முடிவில் உறுதியாக நின்றார் லக்ஷ்மி. நாயர்களின் மருமக்கதாயம் திருமண முறையை மறுத்து, லண்டனில் அம்மா அம்முவின் திருமணம் பதிவுசெய்யப்பட்டிருந்த காரணத்தால், ஏற்கெனவே லக்ஷ்மிக்கும் அவர் சகோதரிகளுக்கும் அந்த வீட்டினுள் உணவருந்த அனுமதி இல்லை. விரைவில் அந்தக் குடும்பத்துடன் தங்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச உறவையும் முறித்துக்கொண்டனர் லக்ஷ்மியும் அவர் தாயும்!

சிறுவயது முதலே படிப்பில் ஆர்வம் கொண்ட லக்ஷ்மி, மருத்துவம் பயில ஆசை கொண்டார். பன்மொழிப் புலமையும் வளர்த்துக்கொண்டார். டி ல ஹே என்ற ஆங்கி லேயரைக் கொலை செய்ததாகக் கடம்பூர் ஜமீன்தார்மீது குற்றச்சாட்டு எழ, அவருக்காக வாதிட்ட வழக்கறிஞர்களில் ஒருவர் லக்ஷ்மியின் தந்தை சுவாமிநாதன். இதனால் ஒட்டுமொத்தமாக அன்றைய மதராஸின் ஆங்கிலேயர் சமூகமும் இந்தக் குடும்பத்தை வெறுத்து ஒதுக்கியது. பள்ளியில் ஆங்கிலேய ஆசிரியர்களின் பேச்சுக்கு ஆளான சிறுமி லக்ஷ்மி, தன் பளபள இறக்குமதி கவுன்களைக் கொளுத்தினார். மகள்களை அரசுப்பள்ளிகளில் சேர்த்தார் சுவாமிநாதன். வீட்டில் தமிழும் மலையாளமும் பேச வலியுறுத்தினார். சென்னை ராணி மேரிக் கல்லூரியில் சேர்ந்த லக்ஷ்மிக்கு மருத்துவம் படிப்பதில் தீவிர ஆர்வம் ஏற்பட, 1933-ம் ஆண்டு, மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடித்து, மகப்பேறு மருத்துவத்தில் பட்டயப் படிப்பும் முடித்தவர், ஓராண்டுக்காலம் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் பணியாற்றினார்.

மீரட் வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி யும், சரோஜினி நாயுடுவின் சகோதரியுமான சுகாசினி நம்பியார், சுவாமிநாதனின் வீட்டில் தஞ்சம் அடைந்த போதுதான் இந்த இரு பெண்களுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. தீவிர கம்யூனிஸ்ட்டான சுகாசினி பேசிய புரட்சியும் எழுச்சியும் லக்ஷ்மியின் மனதில் விடுதலை வேட்கையைத் தூண்டியது. எட்கர் ஸ்னோ எழுதிய `ரெட் ஸ்டார் ஓவர் சைனா' நூலைப் படித்தது முதல், கம்யூனிஸ்ட் கொள்கைகள் அடங்கிய புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினார் லக்ஷ்மி. படிப்பு முடிந்ததும் விமானியான பி.கே.என்.ராவ் என்பவருடன் திருமணம் நடந்து, அதுவும் முறிந்து போக... மனமுடைந்த லக்ஷ்மி, மாற்றம் வேண்டி தன் 26-வது வயதில் 1940-ம் ஆண்டு சிங்கப்பூரில் மருத்துவராகப் பணியாற்றக் கிளம்பினார்.

சிங்கப்பூரில்தான் உண்மையில் லக்ஷ்மி மனதில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. காந்தியம் பேசிய லக்ஷ்மி, கையில் ஆயுதம் ஏந்தத் தீர்மானித்தது இங்குதான். இரண்டாம் உலகப்போர் மூண்டிருந்த நேரத்தில் துணிந்து சிங்கப்பூர் வந்தடைந்த லக்ஷ்மிக்கு நல்ல நட்பு வட்டம் அமைந்தது. சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்த கே.பி.கேசவமேனன், என்.ராகவன், எஸ்.சி.குஹா போன்றவர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார் லக்ஷ்மி. இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூரில் பணியை விரிவாக்க, பர்மாவுக்குள் நுழைந்து எப்படித் தாக்குவது, ஜப்பான் ராணுவ உதவி அளிக்குமா என்பது போன்ற சிந்தனையில் இருந்தபோதுதான், குழப்பங்களைத் தெளிவாக்க 1943-ம் ஆண்டு, ஜூலை மாதம் சிங்கப்பூர் வந்தார் போஸ்.

போஸுடன் ஐந்து மணி நேரம் ஆலோ சனைக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு லக்ஷ்மிக்குக் கிடைத்தது. இந்தக் கூட்டத்தில் லக்ஷ்மிக்கு போஸ் விடுத்த அழைப்புதான்... தனிப் பெண்கள் படை ஒன்றை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்குவது! டாக்டர் லக்ஷ்மி, கேப்டன் லக்ஷ்மி ஆனார்!

1,500 பெண்களை ஒருங்கிணைத்து, அவர் களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஜான்சி ராணி ரெஜிமென்ட்டை வளர்த்து எடுத்ததில் பெரும் பங்கு லக்ஷ்மியுடையது. சிங்கப்பூரில் போஸ் ஏற்படுத்திய `ஆசாத் ஹிந்த்' என்ற சுதந்திர இந்தியாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முதல் மற்றும் ஒரே பெண் லக்ஷ்மி!

இரண்டாம் உலகப் போர் இன்னும் தீவிரமாக, 1944-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஜப்பானியப் படைகளுடன் இணைந்து பர்மா வுக்குள் நுழைந்தது போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவம். 1945-ம் ஆண்டு, மே மாதம் ஆங்கிலேய ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் கேப்டன் லக்ஷ்மி. கிட்டத்தட்ட ஓராண்டு வீட்டுக் காவலில் அவரை வைத்திருந்தது ஆங்கிலேய அரசு. இந்திய பாகிஸ்தான் விடுதலைப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்த பிறகு, 1946-ம் ஆண்டு, மார்ச் மாதம் லக்ஷ்மியை விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பியது.

நாடு திரும்பிய லக்ஷ்மி, தான் காதலித்து வந்த இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் பிரேம் குமார் சேகலை 1947-ம் ஆண்டு, மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இருவரும் கான்பூரில் வாழ்க்கையைத் தொடங்கினர். பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியா தப்பி வந்த அகதிகளுக்கு இலவச மருத்துவம் செய்தார் லக்ஷ்மி. இந்து - இஸ்லாமியர் என எந்த மதத்தினருக்கும் தன் மருத்துவமனைக் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தார் தீவிர நாத்திகரான லக்ஷ்மி.

1970-களில் வங்கதேசப் பிரிவினையின்போது அங்குள்ள அகதிகளுக்கு இலவச மருத்துவ உதவிபுரியச் சென்றார் லக்ஷ்மி. தன் 57-வது வயதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முறைப்படி உறுப்பினரானார். அதன் பின்னான 40 ஆண்டுக்கால பொது வாழ்க்கையில் பெண்களின் உரிமை, சமத்துவம், அரசியலில் பெண்களின் பங்கு, போபால் விஷவாயு விபத்து, சீக்கியருக்கு எதிரான கலவரம் என்று பல நேரங்களில் நேரடிக் களப்பணியாற்றியிருக்கிறார். 1971-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரானார்.

முன்னாள் மக்களவை உறுப்பினரும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான சுபாஷிணி அலி, லக்ஷ்மியின் மகளாவார். இவர் தவிர அனிசா பூரி என்ற மகளும் லக்ஷ்மிக்கு உண்டு.

1981-ம் ஆண்டு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடங்கப்பட்டபோது அதன் நிறுவனர் - தலைவர்களில் ஒருவராக இருந்தார் லக்ஷ்மி. போபால் விஷவாயுக் கசிவால் கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆதாரபூர்வமாகத் தொகுத்து அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்தார்.

1984-ம் ஆண்டு, இந்திரா காந்தி கொலைக்குப் பின் கான்பூர் நகரில் நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் சாலைகளில் இறங்கி சீக்கியர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றினார் லக்ஷ்மி. ஒரு தேர்ந்த களப் போராளியாக இந்தியாவின் முக்கியப் போராட்டங்களில் பங்கேற்றார். அவரது சமூகப் பணியைப் பாராட்டி 1998-ம் ஆண்டு, பத்மவிபூஷண் விருது வழங்கிக் கௌரவித்தது அரசு. 2002-ம் ஆண்டு, குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக, நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் வேட்பாளராகக் களம்கண்டார் லக்ஷ்மி. அப்போது அவருக்கு வயது 87.

தான் தேர்வாகப் போவதில்லை என்பதைத் தெரிந்தேவைத்திருந்த லக்ஷ்மி, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாடு முழுக்கப் பயணித்து, ஊழலும் அநியாயமும் மலிந்த நாடாக இந்தியா மாறிவிட்டதை மக்களிடம் சுட்டிக்காட்டினார். ஏழ்மையும் எளியோருக்கு எதிரான வன்முறையும் பெருகிவருவதைப் பற்றி கேள்வி எழுப்பினார். போதிய வாக்குகள் கிடைக்காததால் தோல்வியைத் தழுவினார் லக்ஷ்மி. ஆனால், தன் மருத்துவப் பணியை விடாமல் தொடர்ந்தார். கான்பூர் நகரில், 2012 ஜூலை 19 அன்று தன் 97-வது வயதில் மாரடைப்பால் காலமானார் லக்ஷ்மி. அவரது உடல் கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism