Published:Updated:

அப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு!

அப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
அப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு!

யாழ் ஸ்ரீதேவி

அப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு!

யாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
அப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
அப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு!

பெண் தன் தகப்பனுக்குத் தரும் மகிழ்வு ஒப்பீடில்லாத ஓர் உணர்வு. தந்தை தன் மகளின் மீது கொள்ளும் பாசம், அவளுக்கு ஆயுளுக்குமான கர்வம். அந்த பந்தத்தின் நேசம் சொல்லும் தருணங்கள் சில இங்கே!

அப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு!

பிரசவ அறைக்கு வெளியில்
உன் முதல் அழுகை
கேட்ட நொடியில்
அப்பாவாக நானும் பிறந்தேன்.

வேலையில் நொறுங்கி
வாகன நெரிசலில் மனம் கசங்கி
உனக்கான இனிப்போடு
வீடு திரும்பும் மாலைகளில்
தாவி கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் அன்பில் குளிக்கவைத்து
வாழ்வின் ஓட்டத்துக்கு
மீண்டும் தயார்படுத்துகிறாய்
உன் தகப்பனை.

இவள் என் மகள்
என்று நாளை
உன் அடையாளம்
எனக்கு அங்கீகாரம் ஆகும் வேளை
ஆண் அழக்கூடாது என்கிற
அபத்தம் உடைத்து
சபையில் அழுவேன்
இந்த அம்முக்குட்டியின் அப்பா
ஆனந்தமாக.

என் மடியில் நீ.
உன் அம்மாவுக்காகக்
காத்திருந்தோம் இருவரும்.
உன் உதட்டுச் சுழிப்பு
பசியில் அழுகையாக
வளர்ந்தபோது
உடைந்தேன் கண்மணி.
இயலாமையில்
இறுகின
என் மார்புகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு!

நீ குட்டிக் கட்டிலில் மல்லாந்திருக்க
உனக்கு விளையாட்டுக் காட்டும்
பொம்மையானேன் அன்று.
ஆள்காட்டி விரலின் அசைவுக்கு
உன் விழிக்குளத்தில்
அசைந்தன இரு மீன்கள்.
உன் கண்ணசைவின்
இழுப்புக்கெல்லாம் அசையும்
பட்டம் ஆனேன்
நான்.
பொம்மை உடைந்த
பயம் உன் முகத்தில்.
‘அப்பா
இனிமே செய்யமாட்டேன்’
என்கிற உன் தவிப்பு
எனக்கு வலிக்க
அள்ளி அணைத்தேன்.
என் கன்னங்களில் சில்லிட்ட
உன் பதில் முத்தம்
என் சொர்க்கம்.

அம்மாவும் நானும்
பேசாமலிருந்தால்
அனிச்சம் ஆகும் உன் முகம்.
இதற்காகவே நாங்கள்
கோபம் தொலைத்தோம்.
ஊடல் தருணங்களில்
இருவரையும்
‘ஸாரி’ சொல்லவைத்து
முத்தமிட வைக்கிறாய்.
நம் சிறிய வீட்டின்
பெரிய பஞ்சாயத்துக்காரி
நீ!

‘அப்பா
உனக்குதான்
எல்லாம் தெரியுமே...
இதற்குப் பதில் சொல்...’
கேள்விகளால்
கேலி செய்கிறாய்.
உனக்காகவே
நிறைய படிக்கிறேன்.
என்னைத் தேடத் துரத்திய
நீ என் ஆசான்!

பின்னிருந்து கண்கள் பொத்தி
கண்ணாமூச்சியாடி
தோள் பற்றி உப்புமூட்டை ஏறி
யானை செய்து அம்பாரி ஏறி
இன்னொரு குழந்தைப் பருவம்
எனக்களித்த
தாயுமானவள் நீ!

ஜூஸ் குடித்துப் பெரிதான
உன் குட்டி வயிற்றைத் தடவி
‘உள்ள பூனக்குட்டி இருக்கு’
என்கிறாய் கண்கள் உருட்டி.
அடுத்த நொடி
அங்கும் இங்கும் நீ ஓடி விளையாட
உன் அசைவில் ஊஞ்சலாடுகிறோம்
பூனைக்குட்டியும் நானும்.

அப்பாவும் மகளும் ஆனந்தமும்: அன்பினும் அற்புத அன்பு!

ப்பா... ஷவர்ப்பா...
மழைப்பா...
நீச்சல் குளம்ப்பா...
அருவிப்பா...
தண்ணீரைக் காணும்போதெல்லாம்
உன் குட்டி உடல் நனைத்துச் சிலிர்க்கிறாய்.
உன் கண்களில் பெருகும்
அன்புக் கடலில்
நித்தமும் நீராடுகிறேன்
நான்.

விடுமுறைக்கு
ஊர் சென்றிருக்கிறாள் மகள்.
வீட்டின் ஒரு சுவர்
அவள் கிறுக்கலில்
மலர்ந்த மலர்களும் மரங்களும்
வண்ணத்துப் பூச்சிகளுமாக
வளமாகி நிற்கிறது.
அவளற்ற தனிமையைத் தாங்க முடியாது
அந்த க்ரேயான் வனத்தில்
தொலைந்துபோகிறேன்.

‘கிறுக்காதே
உடைக்காதே
திட்டாதே
அழாதே
அடிக்காதே’
எந்த தடைக்குள்ளும் அடங்காமல்
அடுத்தடுத்து விளையாடப் பறக்கும்
உன் தீவிரம்...
வாழ்வின் தடைகளை
எளிதில் கடக்க
எனக்கும் கற்றுக் கொடுத்தது.

மொட்டுகள்
மலர்வதைப் போலவே
நீ தூக்கத்தில் இருந்து விழிக்கிறாய்.
அந்த நாளின்
உன் முதல் வார்த்தையாக
‘அப்பா...’ என்றிசைத்த நொடியில்
பேசிய பூவொன்று தரிசித்தேன்!

நிலாச்சோறு
உனக்கு ஊட்டிவிட
ஒரு வாய் விழுங்கிய பெருமையை
நீ உன் கண்களில் காட்டும்போது
அவற்றில் மின்ன
வான் இறங்கி வந்துவிடுகின்ற
இரு நட்சத்திரங்கள்.
ஒரு மிடறு தண்ணீரில்
சிறிது சிதறி கடவாயில்
ஒழுகுகிறது அழகு நதி.
அங்கிருந்து நிலா ரசிக்கிறது
பெண்ணை ரசிக்கும்
இந்தத் தகப்பனை.

 படங்கள்: சி.சுரேஷ் பாபு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism