Published:Updated:

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து! #SpotReport

மனித வளர்ச்சி மற்ற உயிரினங்களின் அழிவுக்கு எத்தனை வேகமாக வழிசெய்கிறது என்பதற்குக் கான மயில் ஓர் உதாரணம். கான மயில்கள் மட்டுமன்றி அங்கு வாழும் பல்வகைப் பறவைகள் மின்கம்பிகளில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து! #SpotReport
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து! #SpotReport

ண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்திருக்கும் சமவெளி. ஆங்காங்கே திட்டுகளாகத் தனித்து நிற்கும் மணல் குன்றுகள். தொட்டுச் செல்லும் காற்று விட்டுச்சென்ற அடையாளங்களாய் மண்ணில் விழுந்த கீறல்கள். மஞ்சள் கற்களை அடுக்கித் தன் நிலத்தின் நிறத்திற்கேற்பக் கட்டிக்கொண்ட வீடுகள். தலைப்பாகையும் குல்லாவுமாக நீண்ட அங்கியணிந்து அலைந்துகொண்டிருந்த பாலை நிலவாசிகள். அவர்கள் ஓட்டிச்சென்ற கால்நடைகள். அந்தக் கால்நடைகளின் மேல் நின்று உன்னிப் பூச்சிகளைத் தின்றுகொண்டிருந்தன சில பறவைகள். மரணித்த மாடுகளின் சடலங்களைத் தின்று சுத்தம் செய்துகொண்டிருந்தன பாறுகளும் காகங்களும். பாலை நிலச் சூரியோதயம் எத்தனை அழகானது என்பதை அன்றுதான் அறிந்துகொண்டேன். நிலமெங்கும் பூசிய தங்க முலாமாய் மின்னிக்கொண்டிருந்த பரந்த மணல் பரப்புக்கு மத்தியில் எழுந்துவந்த சூரியனின் முழுச் சூட்டையும் உடல் உணர்ந்து அடங்கியது. ராஜஸ்தானின் மாநில மலரான ரொஹிடாவை ரசித்துக் கொண்டே திரும்புகையில் சற்றே தள்ளி வளர்ந்திருந்த எருக்கன் செடியின் பூவை ருசித்தபடி அதன்மேல் நின்றிருந்தது  வெண்காது  சின்னான்.

மஞ்சள் கற்களுக்கும் நீண்ட அங்கிக்கும் தலைப்பாகைகளுக்கும் இடையே ஓர் ஆழமான தொடர்புண்டு. அது அனைத்துமே அந்நிலத்தின் அமைப்பைத் தாக்குப்பிடித்து வாழ்வதற்கான ஓர் ஏற்பாடுதான். மஞ்சள் கற்கள். நம்மூர் செங்கற்களைப் போலத்தான். ஆனால், ஒரு வித்தியாசம். அவற்றால் கட்டப்பட்டும் கட்டடங்களைக் காலி செய்யும்போது அவற்றை வெறுமனே விட்டுவிட்டு வரமாட்டார்கள். கட்டடத்தை இடித்துத் தகர்த்துவிட்டுத்தான் கிளம்புவார்கள். அந்தக் கற்கள் முழுக்க முழுக்க அங்குக் கிடைக்கும் யெல்லோ சாண்ட் (Yellow sand) என்ற மண் வகையில் செய்யப்படுவது. அதை இடித்துவிட்டுச் சென்றபின் காற்று தன் வேலையைத் தொடங்கிவிடும். காற்றின் வேகத்தில் சிறிது சிறிதாக அரிக்கப்படும் கற்கள் மண்ணாகும், பிற்பாடு மணலாகும். தன் நிலத்திலிருந்து எடுத்ததை அதனிடமே திருப்பிக் கொடுக்கும் பக்குவமான கட்டமைப்பு.

ஆண் கறுப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bush Chat-Male)

எந்த நிலப்பகுதியாக இருந்தாலும் புள்ளினங்களுக்கு மட்டும் பஞ்சமே இருப்பதில்லை. பாலைவனத்தில்கூட எத்தனை வகையான சிட்டுகள், சின்னான்கள். அது ராஜஸ்தானிய மொழியில் `கேர்' என்றழைக்கப்படும் தாவரம். அதில் கிடைக்கும் சின்னஞ்சிறு கனிகளைத் தின்னக் கூடியிருந்த புள்ளினங்களின் எண்ணிக்கை செடிக்குச் சுமார் ஐம்பது முதல் அறுபது வரை இருக்கலாம். அதிலும் செம்மீசைச் சின்னான்களும், வெண்காது  சின்னான்களும் அதிகம். வெண்தொண்டைச் சின்னானை கேர் செடியில் பார்த்ததைவிட எருகஞ்செடியில்தான் அங்கு அதிகம் பார்க்கமுடிந்தது. பூஞ்சைப் பருந்து, நெடுங்கால் பருந்து என்று தார் நிலத்தில் வேட்டையாடிப் பறவைகளுக்கும் பஞ்சமில்லாமல் நிரம்பியிருந்தது. ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய கிராமம்தான் `சம்'. அங்கு வாழும் மக்களைவிட அங்கு வருகைதரும் மக்கள் கூட்டம்தான் எண்ணிலடங்காது. அத்தனை மக்கள் அங்கு கூடுவதற்குக் காரணம் அங்கிருக்கும் பாலைவனத் தேசியப் பூங்கா (Desert National Park).

அங்கு வாழும் மக்களைவிட அவர்களின் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். பாலை நிலத்தில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் ஒட்டகங்களின் எண்ணிக்கையும் அவற்றை ஓட்டிச் செல்லும் மனிதர்களையும் பார்த்தால் நபருக்குச் சுமார் மூன்று முதல் நான்கு ஒட்டகங்கள் இருக்கும். இவைபோக யாராலும் வளர்க்கப்படாமல் வனத்துக்குள் சுயமாக வாழும் ஒட்டகங்களும் உண்டு. மாடுகளின் எண்ணிக்கைக்கும் சற்றும் குறைவில்லை. நபருக்குக் குறைந்தபட்சம் இரண்டு மாடுகள். கால்நடைகளின் அதீத எண்ணிக்கை பாலை நிலத்திலிருக்கும் மேய்ச்சல் நிலங்களை அதிகம் ஆக்கிரமித்துவிடுவதால், அப்பகுதி வன விலங்குகளின் மேய்ச்சல்களுக்குப் போதுமான அளவுக்குக் கிடைப்பதில்லை. புதர்க்காடுகள் இல்லையேல் பறவைகள் இரைதேடவும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யவும் இடமிருக்காது. வேட்டையாடிப் பறவைகள், புள்ளினங்கள், ஊனுண்ணிகள் என்று பாலையும் பறவைக்குப் பஞ்சமில்லாத சொர்க்கம்தான். அந்தச் சொர்க்கத்தின் உயிராதாரம் அங்கு வாழும் உயிரினங்கள்.

Photos Courtesy: Subagunam Kannan

இத்தனை பறவைகளுக்கு வாழிடமாக விளங்கும் இந்த நிலப்பகுதி இன்னொன்றுக்கும் பெயர் போனது. கான மயில்கள். இந்தியாவிலேயே ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற வெகுசில மாநிலங்களில் மட்டுமே அதுவும் மிகக் குறைவான எண்ணிக்கையில் வாழ்கின்றன. அதிலும் ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்தப் பாலைவனத் தேசியப் பூங்காவில்தான் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கான மயில்கள் வாழ்கின்றன. பெரிதாக ஒன்றுமில்லை, அங்கு வாழும் கான மயில்களின் எண்ணிக்கை சுமார் அறுபது முதல் எழுபது வரை இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்த பறவைகள், இன்று இந்தியாவில் அவற்றின் மொத்த எண்ணிக்கையே அதிகபட்சம் முந்நூறுதான் இருக்கும். அழிவின் விளிம்பில் சிவப்புப் பட்டியலில் இருக்கும் இந்தப் பறவையைப் பாதுகாக்கச் செய்ய வேண்டிய முயற்சிகளைத் தங்கள் சக்திக்கு மீறிச் செய்து கொண்டிருக்கிறார்கள் அங்கிருக்கும் ஆய்வாளர்கள். இருந்தாலும் அவற்றின் அழிவுக்கு வித்திடும் மேலும் பல சிக்கல்கள் இன்னும் களையப்படாமலே இருப்பதும் வேதனைக்குரிய உண்மை. ஆய்வாளர்களால் தீர்வை மட்டுமே சொல்லமுடியும். அதைச் செயல்படுத்த வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை.

மனித வளர்ச்சி மற்ற உயிரினங்களின் அழிவுக்கு எத்தனை வேகமாக வழிசெய்கிறது என்பதற்குக் கான மயில் ஓர் உதாரணம். கான மயில்களின் அழிவுக்கு வித்திடுவதில் முக்கியமானது அவற்றின் வாழிடத்துக்குள் ஊடுருவிச் செல்லும் மின்கம்பங்கள். கான மயில்கள் மட்டுமன்றி அங்கு வாழும் பல்வகைப் பறவைகள் மின்கம்பிகளில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.  சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அதிகரிக்கும் மின்கம்பங்கள் அந்தப் பகுதியில் வாழும் பறவைகளின் வாழ்வுக்கு ஆபத்தாக நிற்கின்றன. தார்ப் பாலைவனப் பகுதி முழுவதுமே பல்வேறு வகையான பறவையினங்கள் வாழ்கின்றன. அதேசமயம், அவற்றின் வாழிடம் முழுவதும் மின்கம்பங்களும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. மின்சாரத்திற்கான தேவை அதிகமாகும்போது அங்கு மின்கம்பங்களுக்கான வேலையும் அதிகமாகின்றது. ஆனால், பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியாக ஓர் இனமே இல்லாமல் போகும் நிலையில் நிற்கும் கான மயில்களின் பாதுகாப்பான வாழிடமாகப் பார்க்கப்படுகின்ற பாலைவனத் தேசியப் பூங்காவிலும் இதே பார்வையைக் கடைபிடிப்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஒரு பறவை இறந்தாலும் அது மிகப்பெரிய ஆபத்தாகவே பார்க்கவேண்டிய சூழலில்தான் அவற்றின் தற்போதைய எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மின்கம்பங்களால் ஆண்டுக்கு 18 கான மயில்கள் மரணித்துக் கொண்டிருக்கின்றன.

Photo Courtesy: Mohib Uddin

மின் கம்பிகளில் மோதி இறந்த வெண்தலைப் பாறு (Eurasian Griffon vulture) மற்றும் அன்றில் அல்லது கறுப்பு அரிவாள் மூக்கன் (Red Naped Ibis)

பாலைவனத் தேசியப் பூங்காவிலும் அதைச் சுற்றியும் வாழும் பறவைகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பைக் கணக்கிட கான மயில்களை ஆய்வு செய்துவரும் மோஹிப் உத்தீன் என்பவர் ஓர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் நூறு கிலோமீட்டர் பரப்பளவுக்குள் மின்கம்பிகள் அமைந்திருக்கும் இடங்களிலும், அவை இல்லாத இடங்களிலும் பறவைகளின் இறப்பு விகிதத்தையும் காரணத்தையும் ஆய்வுசெய்தார். அவரைச் சந்தித்தபோது, ``மின்கம்பங்கள் பறவைகளின் இறப்புக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றது. அதை நிவர்த்தி செய்ய முதலில் ஏற்படும் பாதிப்பைக் கணக்கிட வேண்டும். எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால்தான் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு மாதமாக நூறு கிலோமீட்டர் பரப்பளவுக்குள் மின்கம்பங்களாலும் இயற்கையாகவும் நிகழும் இறப்பு விகிதத்தைக் கணக்கெடுத்தேன். பறவைகள் எங்கெல்லாம் அவற்றோடு எதிர்ப்படுகின்றன என்பதைப் பதிவு செய்தேன். மின்கம்பங்கள் இல்லாத இடங்களில் மிக அரிதாகவே பறவைகளின் சடலங்கள் கிடைத்தன. ஆனால், மின்கம்பிகள் பயணிக்கும் இடங்களில் சுமார் 98 பறவைகளின் சடலங்கள் கிடைத்தன. அதில் ஒன்று கான மயிலுடைய சடலம். குளிர்காலங்களில் இங்கிருந்து வலசைச் செல்லும் பறவைகள் அதிகமென்பதால் அந்தச் சமயத்தில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன. இதைச் சரிசெய்ய பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத அவற்றுக்கு உகந்த கட்டுமானத்தை நாம் தோற்றுவிக்க வேண்டும். வளர்ச்சி தவிர்க்கமுடியாதது. அந்த வளர்ச்சி யாருக்குமே ஆபத்தானதாக இல்லாத வகையில் அமைவதற்கான தீர்வுகளைக் கண்டடைய முயன்று வருகிறோம். விரைவில் விடையைக் கண்டுபிடிப்போம்" என்று கூறினார்.

மின்கம்பங்களினால் அதிகமாக இறக்கும் பறவைகளில் மஞ்சள் முகப் பாறு என்ற பாறு கழுகு வகையும் அடக்கம். பாறு கழுகுகளும் தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18,700 பறவைகள் மின்கம்பிகளில் மோதியும், மின்சாரம் பாய்ந்தும், மோதுவதால் ஏற்படும் காயங்களாலும் மரணத்தைச் சந்திக்கின்றன. இவை நடப்பது கான மயில்களின் வாழிடத்துக்குள் என்பதால், இந்த எண்ணிக்கை விகிதத்தில் எதிர்காலத்தில் கான மயில்களும் அதிகமாகலாம் என்ற அச்சம் ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தான் ஆய்வுசெய்த காலகட்டத்தில் மோஹிப் மட்டுமே 49 வகைகளைச் சேர்ந்த 5796 பறவைகளின் இறப்பைப் பதிவு செய்திருக்கிறார். மின்கம்பங்களால் ராஜஸ்தானில் மட்டும் பிரச்னை ஏற்படுவதில்லை. நாடு முழுவதுமே மின்கம்பங்களில் மோதி உயிரிழக்கும் பறவைகளின் இறப்பு விகிதம் சராசரி விகிதத்தைவிட அதிகமாகவே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

சிங்காரா (Chinakara)

பறவைகள் மட்டுமல்ல. அங்கு வாழும் சிங்காரா, வெளிமான் போன்ற மான் வகைகளையும் ஆபத்து தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அந்தப் பகுதியில் அதிகமாகிவிட்ட நாய்களின் எண்ணிக்கை அவற்றை ஆபத்துக்கு ஆளாக்கியுள்ளது. நாய்களின் வேட்டைக்குப் பலியாகும் மான்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பாலைவனத் தேசியப் பூங்காவைச் சுற்றி ஆய்வாளர் தேவேந்திர பாண்டே நடத்திய ஆய்வில் ஒரு நாய் ஓராண்டுக்குச் சுமார் இருபத்திரண்டு சிங்காராக்களை வேட்டையாடுவதைக் கண்டறிந்துள்ளார். சிங்காராக்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 33 சதவிகிதம்  நாய்களால்   வேட்டையாடப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். தற்போது நாய்களுக்குக் கருத்தடை செய்வதையும் தாண்டி முற்றிலுமாகத் தீர்வு காண்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க தேவேந்திர பாண்டே மற்றும் அவரது குழுவினர் முயன்று வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய தேவ், ``நாய்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் அவை இங்குக் கூட்டு சேர்ந்து வேட்டையாடப் பழகிக் கொண்டன. அதையும் தாண்டித் தற்போது தனியாகவும் வேட்டையாடப் பழகி வருகின்றன. இது சிங்காராக்களுக்குப் பேராபத்தாக மாறிக் கொண்டிருப்பதால் இதை முடிந்த அளவுக்கு விரைவாகவே கட்டுப்படுத்த முயன்று வருகிறோம். குடியிருப்புவாசிகள் மத்தியில் நடத்திய ஆய்வில் நாய்கள் அவர்களின் கால்நடைகளையும் தாக்கி வருவதைப் பதிவு செய்தார்கள். சுதந்திரமாகச் சுற்றித் திரியும் நாய்களால் ஆண்டுக்குச் சுமார் 600 சிங்காராக்கள் வேட்டையாடப்படுகின்றன. மனிதர்களால் இங்கு அதிகமாக்கப்பட்ட நாய்கள் இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதால் இந்நிலத்தின் உயிரினமான சிங்காராக்களின் இருப்பு ஆபத்துக்குள்ளாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த அறிவியல்பூர்வ அணுகுமுறை அவசியம். அதற்கான ஆய்வுகளைச் செய்து வருகிறோம்" என்றார்.

கொண்டலாத்தி (Common Hoope)

மோஹிப் மற்றும் தேவ் சொல்வதுபோல் நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களுக்கும் உகந்த வகையில் நம் வளர்ச்சியைக் கொண்டு செல்லவேண்டிய தேவையும், அதற்கு வழிசெய்யும் அறிவியல்பூர்வ அணுகுமுறைக்கான அவசியமும் தற்போது அதிகமாகவே உள்ளது. அதைப் புரிந்து நம் வருங்காலத்தைத் திட்டமிடவில்லை என்றால் நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களின் இருப்பை, மிக முக்கியமாகப் பறவைகளின் இருப்பை இழந்துவிடுவோம். பறவைகள் இல்லாமல் போனால் மனிதர்களின் இருப்பும் சந்தேகம்தான் என்பதை நாம் அனைவருமே அறிவோம். இந்த உலகம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. இந்த உலகில் மனிதனால் மட்டும் தனியாகப் பிழைத்திருக்கவே முடியாது.