Published:Updated:

காமமும் கற்று மற 11 - புகை தாம்பத்யத்துக்குப் பகை

கூடற்கலை - 11

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றன
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது...’

- கவிஞர் முத்துலிங்கம்

`புகைபிடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?’

`ரிலாக்ஸேஷன் கிடைக்கும், ஏதோ ஒரு பரவசம்…’ இப்படி என்னென்னவோ காரணங்கள் சொல்லலாம். இவை எதுவும் உண்மையில்லை.

காமமும் கற்று மற 11 - புகை தாம்பத்யத்துக்குப் பகை

``சரி... என்னென்ன தீமைகள்?’’

நுரையீரலில் பிரச்னை வரும், இதயக் கோளாறுகள் ஏற்படும்... என நோய்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், தாம்பத்ய உறவில் விரிசல் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

``சமீபகாலமாக என் மனைவியைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. சண்டையெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், என்னுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட மறுக்கிறாள். அதுதான் அவளைப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் என நினைக்கிறேன். நண்பர்களிடம் பேசினேன். `பாலியல் உணர்வு தொடர்பாக அல்லது மனரீதியாக அவள் பாதிக்கப்பட்டிருக்கலாம்’ என்றார்கள். அதனால்தான் உங்களைப் பார்க்க வந்தேன். என் மனைவி மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவளை எப்படியாவது சரிப்படுத்துங்கள் டாக்டர்’’ என்றார் அந்த இளைஞர்.

அவரின் மனைவியை வரவழைத்து, கவுன்சலிங் கொடுத்தோம். தாம்பத்யத்தில் தனக்கு ஏன் விருப்பமில்லை என்பதற்கு அவர் சொன்ன காரணம், கணவரின் புகைப்பழக்கம். ``அந்த துர்நாற்றத்தோடு என்னை அவர் நெருங்குவது பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் சகித்துக்கொண்டேன். தொடர்ச்சியாக முடியவில்லை. சில நேரங்களில் அந்த நாற்றத்தால் வாந்திகூட எடுத்திருக்கிறேன். அவரிடம் சொன்னால், அவர் அதைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை’’ என்றார் அந்தப் பெண்மணி.

இதை அந்த இளைஞரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, புகைப் பழக்கத்தால், எதிர்காலத்தில் அவரே நினைத்தாலும் தாம்பத்யத்தில் பரிபூரணமாக ஈடுபட முடியாது என்பதையும் சொல்லி அனுப்பிவைத்தேன். துர்நாற்றத்தால் செக்ஸ் வைத்துக்கொள்வதில் தயக்கம் என்பது இருக்கட்டும்; உடல்ரீதியாக புகைப் பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதிகம்.

காமமும் கற்று மற 11 - புகை தாம்பத்யத்துக்குப் பகை

ஆரோக்கியமான பாலியல் உணர்வுக்கும் தாம்பத்யத்துக்கும் நல்ல ரத்த ஓட்டம் தேவை. புகைபிடித்தல் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தை பாதித்துவிடும். இந்தப் பழக்கத்தால் விரைப்புத் தன்மையிலும் சிக்கல் ஏற்படும். அதனால் உடலுறவில் நிச்சயம் அதிருப்தி ஏற்படும். சிகரெட்டிலிருக்கும் புகையிலைதான் இவ்வளவு பாதிப்புகளுக்கும் காரணம். சில காலம் புகைபிடித்தாலே இவை ஏற்படத் தொடங்கும். சிகரெட்டிலிருக்கும் வேறு சில பொருள்கள், புகைத்தவுடனேயே பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கும். குழந்தையின்மை பிரச்னை, பாலியல் நோய்கள் ஏற்படலாம். புகைபிடிக்கும் பெண்களுக்கு விரைவிலேயே மெனோபாஸ் ஏற்படலாம். தொடர்ச்சியாக அல்லாமல் எப்போதாவது புகைக்கும் சிகரெட்கூட, பாலுறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதே மருத்துவ அறிவியல் கண்டறிந்திருக்கும் உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


புகை தாம்பத்யத்துக்குப் பகை

திடீரென விரைப்புத் தன்மையில் சிக்கல் ஏற்பட்டால், அதற்கு புகைப் பழக்கம் காரணமாக இருக்கலாம். புகைபிடித்தல் இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும் அல்லவா... அது, ரத்த ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் பாலுறவில் பிரச்னையாக முடியும். விரைப்புத் தன்மைக் குறைபாடு, இதயநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.

நிக்கோட்டினும் புகையிலையும் ரத்த ஓட்டத்தில் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது, இதயநோய் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே விரைப்புத் தன்மையில் குறைபாடு ஏற்படத் தொடங்கும். புகைப்பதன் மோசமான விளைவுகள் ஒருவர் எவ்வளவு காலம் புகைக்கிறார், எத்தனை சிகரெட் புகைக்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும். ரத்த ஓட்டத்தில் 25 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டாலே, விரைப்புக் குறைபாடு ஏற்பட்டுவிடும். 50 சதவிகிதம் குறைந்தால், இதயத்தில் பிரச்னை ஏற்படும். அதனால்தான், விரைப்புக் குறைபாடு இதயநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது.

காமமும் கற்று மற 11 - புகை தாம்பத்யத்துக்குப் பகை

ஆணுறுப்பிலிருக்கும் பஞ்சு போன்ற திசுக்களில் ரத்தம் அதிகமான அழுத்தத்தில் நிறையும்போதுதான், விரைப்புத் தன்மை உண்டாகும். புகைபிடித்தலால் நரம்பில் பாதிப்பு ஏற்படும்போது, இந்தத் திசுக்களுக்கு போதுமான அளவு ரத்தம், போதுமான அழுத்தத்தில் கிடைக்காது. பெண்களுக்கும் ரத்த ஓட்ட பாதிப்பு வரும்போது, பெண்ணுறுப்பில் போதிய உயவு ஏற்படாமல், தாம்பத்யக் குறைபாட்டை உண்டாக்கும். புகைப்பதால் பாலுறவின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, அதைக் கைவிட்டுவிடுவதே நல்லது. பாலுறவுக்கும் ஆயுட்காலத்துக்கும் தொடர்பில்லையென்றாலும், சந்தோஷமான வாழ்க்கைக்கு, ஆரோக்கியமான பாலுறவு தேவை. எனவே, புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டியதும், குறைக்க வேண்டியதும் மிக அவசியம்.

- கற்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு