Published:Updated:

பழங்குடியினரின் வாழ்வையே மாற்றிய கொரில்லாக்கள்... நைஜீரிய நெகிழ்ச்சிக் கதை!

இவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நாம் அனைத்துப் பழங்குடியினங்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களும் தத்தம் காடுகளைப் பராமரிப்பார்கள். அதற்கு, பழங்குடியின மக்களோடு ஆய்வாளர்களும் வனத்துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

பழங்குடியினரின் வாழ்வையே மாற்றிய கொரில்லாக்கள்... நைஜீரிய நெகிழ்ச்சிக் கதை!
பழங்குடியினரின் வாழ்வையே மாற்றிய கொரில்லாக்கள்... நைஜீரிய நெகிழ்ச்சிக் கதை!

``வேட்டைத் தொழிலிலிருந்து ஓர் இடைவேளை தேவைப்பட்டது. அதற்காகத்தான் அவர்களோடு அன்று சேர்ந்து வேலை செய்தோம். ஆனால், அதுவே எங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுமென்று அப்போது நினைக்கவில்லை" - ஜேக்கப் ஓசாங்

வறுமை. எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். அதுவும் இளைமையில் வறுமை எதை வேண்டுமானாலும் செய்யத் தூண்டும். அப்படியொரு சூழலில்தான் நின்றிருந்தார் ஜேக்கப் ஓசாங். வறுமை, பசி இரண்டுக்கும் தீர்வு தேடி நைஜீரியாவின் பெரியதொரு நகரமான லாகோஸ் பக்கம் தன் வாழ்க்கை வண்டியைத் திருப்பினார். லாகோஸ் அவரை ஏமாற்றியது. வேலை கிடைக்கவில்லை. வேறு வழி தெரியவில்லை. 1985-ம் ஆண்டு மீண்டும் தன் கிராமத்திற்கே திரும்பி வந்தவர் தன் நண்பர்கள் செய்துகொண்டிருந்த தொழிலையே செய்யத் தொடங்கினார்.

தினமும் காட்டுக்குள் செல்லவேண்டும். கண்ணில் படுகின்ற விலங்கை வேட்டையாட வேண்டும். அதை ஊருக்குள் கொண்டுவந்து உணவு விடுதிகளுக்கு விற்கவேண்டும். அந்தக் காட்டில் வாழும் வெளிமான் வகையைச் சேர்ந்த டியூக்கர் (Small Duiker) என்ற) மான் வகையின் மாமிசத்தைக் கொண்டுவந்தால் 16 முதல் 32 டாலர்கள் வரை பார்க்கலாம். காட்டுப் பன்றியைக் கொண்டுவந்தால் 100 டாலர்கள் வரை காசு பார்க்கலாம். கடினமான வேலை குறைவான வருமானம். வேறு வழியில்லை, வேலையே இல்லாமல் இருப்பதற்குத் தாம் வாழும் இந்தக் காட்டை வைத்து இப்படியாவது வயிற்றை நிரப்ப முயல்வோம் என்ற சூழல். அது நைஜீரியாவின் கிராஸ் ரிவர் (Cross River state) என்ற மாநிலத்தின் கன்யாங் (Kanyang) என்ற பகுதியில் அமைந்திருக்கும் சிறிய பழங்குடிக் கிராமம்.

காட்டுப்பன்றி, மான்கள் மட்டுமல்ல சில சமயங்களில் கொரில்லாக்களும் எதிர்ப்படும். எதிர்ப்படுவது எந்த விலங்காக இருந்தாலும் வேட்டையாடி விடவேண்டும். கொரில்லாக்களும் வேட்டையாடப்பட்டன. அடிக்கடி நிகழாது. அரிதாகக் கண்ணில்படும். பட்டால் வேட்டைதான். ஒரு பழங்குடியினக் குழுவுக்குச் சுமார் எட்டு கொரில்லாக்கள் வேட்டையாடப்பட்டன. ஆனால், ஓசாங் கொரில்லாக்களை வேட்டையாடியதில்லை. அவற்றைக் கொல்ல அவருக்கு இருந்த தயக்கமும் நெருடலும்தான் பிற்காலத்தில் அந்தப் பகுதி மக்களுக்கே புதிய வாழ்வளிக்கும் என்று ஓசாங்கிடம் அன்று சொல்லியிருந்தால் அவரே வாய்விட்டுச் சிரித்திருப்பார். ஆனால், நடந்தது அதுதான்.

Photo Courtesy: Charles Emogor

நைஜீரியாவில் 1960-களில் உள்நாட்டுப் போர் நடந்தது. அந்தச் சமயத்தில் கிராஸ் ரிவரில் மட்டுமே வாழும் ஒருவகைக் கொரில்லாக்கள் அதிகமாக வேட்டையாடப்பட்டன. இருந்த கடைசி கொரில்லாவும் இறந்துவிட்டதாகத்தான் அங்கிருந்த ஆய்வாளர்கள் நினைத்திருந்தனர். உண்மை அதுவல்லவே, 1985-களுக்குப் பிறகும் ஓசாங் மற்றும் அவரைப் போன்ற பலர் அவற்றைப் பார்த்துள்ளனர். நைஜீரிய இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு (Nigerian conservation Foundation) காதுகளுக்கு இவை அவ்வப்போது வாய்மொழிச் செய்தியாகப் போய்க்கொண்டிருந்தன. அவற்றை முதலில் வதந்தியென்று நினைத்தவர்கள் எதற்கும் ஓர் ஆய்வு செய்து பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தனர். அதற்காக அலெக்ஸாண்டர் ஹார்கோர்ட் (Alexander Harcourt), கெல்லி ஸ்டெவார்ட் (Kellu Stewart), இப்ராஹிம் ஐனஹாரோ (Ibrahim Inaharo) ஆகிய ஆய்வாளர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு ஒரு கணக்கெடுப்பு நடத்தவேண்டும். அவர்களுக்கு உதவவும், வழிகாட்டவும், கொரில்லாக்களைக் காட்டவும் நெப்போலியன் இங்பே என்ற வேட்டைக்காரரையும் அவருக்கு உதவியாளாக ஓசாங்கையும் பணிக்கு அமர்த்திக் கொண்டார்கள். அந்தக் கடினமான வருமானமற்ற பணியிலிருந்து சில காலத்துக்குக் கிடைத்த இடைவெளி அப்போது அவருக்குத் தேவையாக இருந்தது. ஓசாங் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்கள் ஆய்வைத் தொடங்கிய குழு இரண்டு மாதங்களுக்கு ஆய்வு செய்தார்கள். கொரில்லாக்கள் பிரசவிக்கும் இடம், அவை கடந்துசென்ற தடயங்கள், எச்சங்கள் என்று அவை வாழ்வதற்கான ஏதாவது சிறு தடயமாவது கிடைக்காதா என்று தேடினார்கள். அனைத்துமே கிடைத்தது. அந்தப் பத்துக் கண்களும் நடத்திய தேடுதல் வேட்டையில் கொரில்லாக்களும் கிடைத்தன. குழுவின் ஆய்வு முடிவில் சுமார் நூற்றைம்பது கிராஸ் ரிவர் கொரில்லாக்கள் உயிரோடிருப்பதைப் பதிவு செய்தது. அது மட்டுமல்ல அவை ஆபத்தில் இருப்பதையும் பதிவு செய்தார்கள். 

அந்தக் காட்டைச் சுற்றி வாழும் பதினைந்து பழங்குடிகள் கொரில்லாக்களின் வாழிடங்களில் வேட்டைத் தொழில் செய்து வந்தார்கள், ஓசாங்கின் கிராமம் உட்பட. சில சமயங்களில் அவர்களின் இலக்கில் கொரில்லாக்களும் சிக்கும். 1987-ம் ஆண்டு ஒரு பழங்குடியினம் மட்டும் சுமார் ஆறு கொரில்லாக்களைக் கொண்டிருந்தனர். சராசரியாக ஒரு பழங்குடி ஆண்டுக்கு இரண்டையாவது கொன்றுவிடுகிறார். இது ஆபத்தான சூழல்தான். இப்படியே போயிருந்தால் உண்மையிலேயே அங்கு கொரில்லாக்கள் இல்லாமல் போயிருக்கும். அந்தக் கணக்கெடுப்பு அப்படி நடக்காமல் தடுத்து நிறுத்த தொடக்கமாக அமைந்தது. 

நைஜீரியாவில் கொரில்லாக்கள் இன்னமும் உயிர் வாழ்கின்றன என்ற செய்தி பரவியது. ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் கன்யாங்கை நோக்கிப் படையெடுத்தனர். `தி நியூ யார்க் டைம்ஸ்' இதழில் ஓசாங் மற்றும் நெப்போலியன் இம்பேவின் தகவல்கள் வெளியாயின. கன்யாங்கின் பழங்குடிச் சமூகங்கள் அனைத்தையும் பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்தன. அவர்களுக்கு அந்தக் காட்டின், அங்கு வாழும் கொரில்லாக்களின் மதிப்பும் அவற்றைப் பாதுகாத்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் புரியத் தொடங்கியது. ஓசாங்குக்கு அந்தப் பகுதியைச் சூழலியல் சுற்றுலாத்தலமாக மாற்றும்போது கிடைக்கும் லாபம் பற்றிய சிந்தனை தோன்றியது. இதற்கு அங்கிருந்த அனைத்துப் பழங்குடிகளும் ஒப்புக் கொண்டார்கள். அதற்கான வேலைகளையும் உடனே தொடங்கினார்கள். கொரில்லாக்கள் அதுவரையிலான அவர்களின் வாழ்வையே புரட்டிப்போட்டன.

``கொரில்லாக்களைப் பார்க்க வைப்பதே நம் கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்றால், ஏன் நம் வாழ்க்கை முழுவதையும் அவற்றின் பாதுகாப்பிற்காகச் செலவழிக்கக் கூடாது" ஓசாங் சிந்திக்கத் தொடங்கினார்.

1989-ம் ஆண்டு உலக வனவிலங்கு நிதியத்தின் தலைவராக இருந்த பிரிட்டன் இளவரசர் பிலிப் கொரில்லாக்களைப் பார்க்க கன்யாங்கிற்கு வருகை புரிந்தார். அது கிராஸ் ரிவர் கொரில்லாக்கள் மீது அதிக ஈர்ப்பைக் கொண்டுவந்தன. அவர் வரும்போது அம்மக்கள் அதைச் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தனர். கிராஸ் ரிவர் தேசியப் பூங்கா 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தேசியப் பூங்கா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஓபான் மற்றும் ஒக்வாங்கோ இரண்டுமே சேர்த்துச் சுமார் 4000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 2000-ம் ஆண்டு அழிவின் விளிம்பிலிருந்த கொரில்லாக்களைப் பாதுகாக்க அஃபி மவுன்டைன் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டது. அதற்கும் ஒக்வாங்கோவுக்கும் இடையே 85 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இம்பே என்ற சிறிய மலைத்தொடர் இருந்தது. அதையும் அதோடு இணைக்க நினைத்தனர். ஆனால், அங்கு வாழ்ந்துவந்த ஒன்பது பழங்குடிச் சமூகங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் நிலத்தைத் தாங்களே பாதுகாப்பதாகவும், அதற்கு ஏற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். 2006-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் (Wildlife conservation soceity) அவர்களுக்கு நிர்வாக ரீதியான உதவிகளையும் அறிவுரைகளையும் வழங்க முன்வந்தது. கிராஸ் ரிவர் மாநில வனத்துறையும் அந்தப் பழங்குடிகளுக்கு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க உதவினார்கள். ஓசாங்குடைய சமூகமும் சேர்த்து அந்த மலைத்தொடரில் வாழ்ந்துவரும் ஒன்பது பழங்குடியினச் சமூகங்களும் இணைந்து இம்பே மலைத்தொடரில் இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தைத் (Conservation association of the Mbe Mountains) தோற்றுவித்தனர். அனைவராலும் சுருக்கமாக CAMM என்றழைக்கப்படும் அந்தச் சங்கமும் அதன் வேட்டைத்தடுப்புக் காவலர்களும் இரவு பகலாக ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு அந்த வனப்பகுதியைப் பாதுகாத்து வருகிறார்கள்.

வனப் பாதுகாப்பு மட்டும் அவர்கள் செய்வதில்லை. அவர்களுக்கான வாழிட எல்லைகளை நிர்ணயித்து அதைத் தாண்டி மனிதப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தங்களுக்குத் தாமே கட்டுப்பாடு விதித்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான விவசாய நிலம், வனப் பொருள்கள் எங்கெல்லாம் சேகரிக்கலாம், வேட்டைக்குத் தடை, எங்கெல்லாம் யாருக்கெல்லாம் செல்லத் தடை என்று புதிய விதிமுறைப் பட்டியலே தயாரித்துக்கொண்டார்கள். CAMM மூன்றுகட்ட நிர்வாக உறுப்புகளைக் கொண்டுள்ளது. பொதுச் சபை, மேலாண்மைக் குழு, அறங்காவலர்கள் குழு. இவைபோக, வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் மற்றும் கிராஸ் ரிவர் மாநில வனத்துறை போன்றவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலரை ஆலோசனைக் குழுவில் அமர்த்தியுள்ளார்கள். 

2016-ம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வில் அங்கு வாழும் மக்களில் 97.1 சதவிகிதம் பேர் அந்த வனத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் அதனால் விளையும் பயனையும் அறிந்திருப்பது தெரியவந்தது. சைபர் டிராக்கர்கள், கையடக்கக் கணினிகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் என்று அனைத்து தொழில்நுட்ப உதவிகளோடும் அவர்கள் தம் காட்டைப் பாதுகாத்து வருகிறார்கள். அதற்கான அனைத்து உதவிகளையும் அவர்களோடு இணைந்து நிற்கும் காட்டுயிர்ப் பாதுகாப்பு அமைப்புகளும் கிராஸ் ரிவர் மாநிலத்தின் வனத்துறையும் செய்கின்றன. அவர்களின் காவல் அங்கு நடக்கும் வேட்டைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இன்னமும் முற்றாக வேட்டைகள் நிற்கவில்லை என்றாலும் இவர்களின் காவலில் அதுவும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை அந்நாட்டு ஆய்வாளர்களுக்கு எழுந்துள்ளது.

இவ்வளவு செய்திருந்தும் அந்த வனப்பகுதி இன்னமும் சட்டப்படி அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வகையில் அங்கீகரிக்கப்படவில்லை. 1978-ம் ஆண்டின் நிலப் பயன்பாட்டுச் சட்டப்படி, சமூகப் பயன்பாட்டு நிலங்கள் மாநிலக் கட்டுப்பாட்டுக்குள் திரும்பிவிட்டது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த வளர்ச்சித் திட்டத்துக்கு வேண்டுமானாலும் அதை எடுத்துக் கொள்வார்கள். இதைத் தடுக்க வேண்டுமென்றால் அரசுச் சான்றிதழ் மூலமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான அனைத்து வேலைகளிலும் அவர்கள் பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். இன்னும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

கிராஸ் ரிவர் தேசியப் பூங்காவைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்கள்

``பழங்குடிகளால் அரசாங்கங்களைவிடச் சிறப்பாகக் காடுகளைப் பராமரிக்க முடியும் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேண்டுமா!" என்று கேட்கிறார் அவர்களோடு ஆரம்பத்தில் ஆய்வுக்குச் சென்ற இப்ராஜிம் இனஹாரோ. பழங்குடிகள் தம் நிலத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவையை மற்றவர்களைவிட நன்றாகவே உணர்ந்தவர்கள். கன்யாங்கில் வாழும் பழங்குடியின மக்கள் சிறிதளவு வழிதவறி போயிருந்தாலும் யாருடைய அறிவுரையும் ஊக்கமும் இல்லாமல் தாங்களே அனைத்தையும் சிரமேற்கொண்டு செய்துகாட்டியுள்ளார்கள். இவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நாம் அனைத்துப் பழங்குடி இனங்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களும் தத்தம் காடுகளைப் பராமரிப்பார்கள். அதற்கு, பழங்குடியின மக்களோடு ஆய்வாளர்களும் வனத்துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும். அதுவே வேட்டைத்தடுப்பு மற்றும் வனப்பாதுகாப்பில் ஆரோக்கியமான தீர்வுக்கு வழிவகுக்கும். அதை நைஜீரிய அரசு மட்டுமல்ல அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் புரிந்துகொள்ள வேண்டும். வேதனை என்னவென்றால், நைஜீரியா மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும், அரசாங்கம் பழங்குடிகளிடம் அவர்களின் உரிமைகளைக் கொடுப்பதில் ஓரவஞ்சனையோடுதான் நடந்து கொண்டிருக்கிறது.