Published:Updated:

நடமாடும் கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் - கோவை மாநகராட்சி பட்ஜெட் ரிப்போர்ட்..!

குருபிரசாத்
நடமாடும் கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் - கோவை மாநகராட்சி பட்ஜெட் ரிப்போர்ட்..!
நடமாடும் கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் - கோவை மாநகராட்சி பட்ஜெட் ரிப்போர்ட்..!

கோவை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாநகராட்சி ஆணையாளர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார், ``2019-20 ஆண்டுக்கான மொத்த வரவினம் ரூ.1,817 கோடி, மொத்த செலவினம் ரூ.1,812 கோடி. நிகர உபரி ரூ.4.75 கோடி. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், வடிகால் வாய்க்கால் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும். திறன்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குளங்களைப் புனரமைத்தல், தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறைந்த செலவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்தல் போன்றவை இந்தப் பட்ஜெட்டின்  முன் மாதிரி திட்டங்களாகும். அதேபோல குளங்களை மேம்படுத்தி, மோட்டார் பயன்பாடு இல்லாத பாதை அமைத்தல், மாதிரி சாலை அமைத்தல், கழிவு நீர் சேகரிப்புக்கு பேட்டரி வண்டிகள், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் விற்பனை செய்தல், வணிக வளாகங்களுடன் கூடிய பல அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த உள்ளோம்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குவிக்கப்பட்டுள்ள 15.50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை, பயோ மைனிங் முறையில் தரம் பிரித்து, சூழலுக்கு மாசுபடாத வகையில் கழிவு செய்யும் பணியை தொடங்க உள்ளோம். ஜி.வி.ரெசிடென்சி குடியிருப்புப் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. பேரூர் – ஒண்டிப்புதூர் வரை 20 கி.மீ நீளத்துக்கு நொய்யல் ஆற்றை புனரமைத்து பாதுகாக்க உள்ளோம்.

மக்கள் அதிகம் கூடும் இடத்தில், பெண்களால் நிர்வகிக்கப்பட்டு, பெண்கள் பிரத்தியேகமாக பயன்படுத்தும் வகையில் நடமாடும் கழிப்பிடம் அமைக்கப்படும். கடந்தாண்டு மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. நடப்பாண்டில் இந்த விளம்பரப் பலகைகளை அகற்ற பிரத்தியேகமாக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளோம். நாய்கள் பாதுகாப்பு மையம் அமைக்க  ரூ.75 லட்சம் ஒதுக்கியுள்ளோம். கல்விப் பிரிவில், கணிதப் பாடத்தை எளிதில் கற்க VEDIC MATHAMATICS என்ற சிறப்பு பயிற்சியை வழங்க உள்ளோம்” என்றார்.