Published:Updated:

`கம்பீரத் தோற்றம், முரட்டுப் போர்க்குணம்...’ கிளிமூக்குச் சேவல்களின் சுவாரஸ்யம்!

`கம்பீரத் தோற்றம், முரட்டுப் போர்க்குணம்...’ கிளிமூக்குச் சேவல்களின் சுவாரஸ்யம்!
`கம்பீரத் தோற்றம், முரட்டுப் போர்க்குணம்...’ கிளிமூக்குச் சேவல்களின் சுவாரஸ்யம்!

நிறத்தை அடிப்படையாகக் கொண்டு, கறுப்பு மயில், செங்கறுப்பு, செவலை, செங்கீரி, சாம்பல் பூதி, கொக்கு வெள்ளை, பொன்ரம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன.

ண்டைக்காக அல்லது அழகுக்காக எனப் பலவிதமாக சேவல்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிலும் சண்டையிடும் சேவல்களைப் பார்ப்பதே அலாதியானது. சேவலிலிருந்தே போர்ப்பயிற்சியை அளித்த வரலாறும் உண்டு. இன்றைய சிலம்பாட்ட வீரர்களிடம்கூட சண்டைச் சேவல்களின் வியூகங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சண்டைச் சேவல்களில் பல வகைகள் இருந்தாலும்,  கிளிமூக்குச் சேவலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றால் அது மிகையல்ல. தமிழகம் முழுவதும் அதிகமான சேவல் ஆர்வலர்களால் விரும்பப்படும் சேவல் கிளிமூக்குச் சேவலாகும். 

கிளிமூக்கு அல்லது விசிறி வால் சேவல்கள் என்று அழைக்கப்படும் சேவல்கள், சண்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்தில் அதிகமான அளவில் வளர்க்கப்படுகின்றன. இவை தமிழகத்துக்கே உரித்தான கோழிகள் என்று சொல்வார்கள். இவை கிளியைப் போன்ற அலகுகளைக் கொண்டதால் கிளிமூக்குச் சேவல் எனவும், இதன் வால்பகுதி விசிறிபோல விரிந்து இருப்பதால் விசிறிவால் சேவல் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் `கிளிமூக்கு விசிறிவால் சேவல்’ என்றும் அழைத்து வருகின்றனர்.
இவை தமிழகத்துக்கு உரிய சேவல் என்று சொல்லப்பட்டாலும், இது நாட்டுக் கோழியின் கலப்பினம் என்பதே கால்நடை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இவை பெரும்பாலும், சண்டைக்காக வளர்க்கப்படுகின்றன. இவை கம்பீரமான நடையும் உருவமும் கொண்டிருக்கும். மேலும், சண்டையின்போது மூர்க்கத்தனமாகத் தாக்கும் தன்மை கொண்டது. இத்தகைய சேவல்கள், வளர்ப்பவர்களிடம் குழந்தையாகவும் பழகுபவர்களிடம் நண்பனாகவும், எதிரிகளிடம் போர்க்குணத்தையும் காட்டும். ஆனால், இவற்றை பெரும்பாலும் சண்டைக்காகப் பயன்படுத்துவதில்லை. பெருமைக்காகவும் கெளரவத்துக்காகவும் வளர்க்கும் வழக்கத்தைப் பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர். ஆஜானுபாகுவான தோற்றத்துடன் உள்ள இந்த ரக சேவல்கள், பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்கின்றன. இந்த ரக சேவல்களுக்குத் தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

கூரிய பார்வையும் கம்பீரத் தோற்றமும் கொண்ட இவை சண்டையில் துல்லியத் தாக்குதல் திறன் படைத்தவை. கம்பு, மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை ஆகியவை இவற்றின் பிரதான உணவாக இருந்து வருகிறது. மனிதர்கள் குளிர், வெயில் பருவநிலையில் ஒவ்வொரு விதமான உணவு எடுத்துக்கொள்வர். அதேபோல கிளிமூக்குச் சேவலுக்கும் குளிர், மழைக்காலத்தில் சுடுநீர் உபசரிப்புகள் கொடுத்தே ஆக வேண்டும். பார்க்க ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், இவை எளிதில் நோய்வாய்ப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

மற்ற இனங்களைக் காட்டிலும், இவை அதிக எடையைக் கொண்டது. கிளிமூக்குச் சேவல் ஒன்றின் உடல் எடை 5 - 7 கிலோ வரை இருக்கும். எடைக்கு ஏற்றாற்போல் உயரமும் இருப்பதால் பார்க்க கம்பீரமாகக் காட்சியளிக்கும். இதன் மூக்கு, தலை, அலகு, நிறம், வால் நீளம், முதுகு அமைப்பு, கால் எனப் பலவிதமான அம்சங்களை வைத்து விலையை நிர்ணயிப்பார்கள். இதன் உயரம் 2 அடி வரை இருக்கும். இதன் மூக்கு கிளியின் அலகுபோல் நன்கு வளைந்து இருக்கும். இவற்றின் வாழ்நாள் சராசரியாக 3 முதல் 5 ஆண்டுகள். அதன் வால் ½ - ¾ மீட்டர் நீளமும் விசிறிபோல் விரிந்தும் அழகாகக் காட்சி அளிக்கும். இந்த வால்தான் இதற்கு அழகு. பார்ப்பதற்கு மயில் போன்ற தோற்றத்தில் இருக்கும்.  இதை வாங்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கட்டை மூக்குச் சேவலை, கிளி மூக்கு என்று சொல்லி விற்பனை செய்வோரும் உண்டு. 

இவை 15,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் குஞ்சுகளே அதிக விலைக்கு விற்பனையாகின்றன. நிறத்தை அடிப்படையாகக் கொண்டு, கறுப்பு மயில், செங்கறுப்பு, செவலை, செங்கீரி, சாம்பல் பூதி, கொக்கு வெள்ளை, பொன்ரம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. கிளிமூக்கு வால் சேவல்கள் இன்று பெரும்பாலும் குறைந்த அளவில் உள்ளன. அதனால்தான் இதன் விலை அதிகமானது என்றும் சொல்கிறார்கள் சேவல் வளர்ப்பு ஆர்வலர்கள். 

கோவை, பொள்ளாச்சி, நாமக்கல், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த வகையான சேவல்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல்களுக்காகத் தனியாகக் கண்காட்சியே நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் நடத்தப்பட்ட கண்காட்சியில் கிளிமூக்கு விசிறிவால் சேவல் ஒன்று ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், சேவல் சண்டை நடத்தாமல் இருப்பதாலேயே இந்த இனங்கள் அழிந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதைக் காக்கவும் பொருளாதாரத்தை வலுவாக்கவும் இந்த வகை கோழிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதே நாட்டுக்கோழி இன ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு