Published:Updated:

``முழங்கால் அளவுக்குக் கட்டை கட்டி அதுல நின்னு ஆடணும்'' - பொய்க்கால் குதிரை ஆடும் குடும்பம்!

``முழங்கால் அளவுக்குக் கட்டை கட்டி அதுல நின்னு ஆடணும்'' - பொய்க்கால் குதிரை ஆடும் குடும்பம்!
``முழங்கால் அளவுக்குக் கட்டை கட்டி அதுல நின்னு ஆடணும்'' - பொய்க்கால் குதிரை ஆடும் குடும்பம்!

"நம்ம கலைய நாமளே அவமதிக்கக் கூடாது. இதுதான் நம்மளோட வாழ்க்கை. மத்தவங்க தப்பா பாப்பாங்கன்னு நினைச்சு நம்ம தொழிலை விட்டுட முடியுமா?"

சென்னை அசோக் பில்லர்... காலை 10 மணியளவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. உதயம் தியேட்டருக்குப் பின்புறமுள்ள மெட்ரோ பாலத்தின் கீழே விரைந்து நகரும் வாகனங்களுக்கு மத்தியில் சாலையின் ஓரம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த குதிரைகள் நம் கண்களைக் கவர அப்படியே டூவீலரை ஓரம் கட்டினோம். வியாபாரத்திற்காக அவை வைக்கப்பட்டிருக்கின்றன என்று நினைத்து அருகே சென்றபோதுதான் அனைத்தும் பொய்க்கால் குதிரைகள் என்று தெரிந்தன. ஆம், இப்படியான பொம்மைக் குதிரைகளை ஊர்த்திருவிழாக்களில் பார்த்திருக்கிறேன். 

``என்ன சார் இவ்ளோ ஆச்சர்யமா நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க. என்ன வேணும் உங்களுக்கு?” என்றார் குதிரைகளுக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்த தம்பு. அவருக்கு அருகே அமர்ந்திருந்த அமுல் அமைதியாக ஒரு துணியில் மயிலிறகை ஒவ்வொன்றாகக் கோத்துக்கொண்டிருந்தார். ஆரவாரம் நிறைந்த அந்தச் சாலையில் அமைதியாய் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தவர்களிடம் பேசுவதற்காக நானும் அப்படியே அமர்ந்தேன்.  

``சார், எம்பேரு தம்பு. இது எம் பொண்டாட்டி அமுல். எங்களுக்குப் பூர்வீகம் திண்டுக்கல். ஆனா, நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே இங்கதான். என்னோட ஆயா அந்தக் காலத்துலயே பொய்க்கால் ஆட்டத்துக்குப் பேர் போனவங்க. அமுலோட பாட்டனாரும் கட்டை கட்டி ஆடுறதுல புகழ் பெற்றவரு. எம்.ஜி.ஆர் நடிச்ச சில படங்கள்ல கட்டை கட்டி ஆடியிருக்காரு. அவங்க வழியில வந்ததால நானும் இந்தத் தொழிலை விட்டுடாம இருக்கேன். இது நான் சின்ன வயசிலிருந்தே பாத்து வளர்ந்த தொழில். பொய்க்கால் குதிரை செய்யுறது மட்டுமல்ல, நானும் எம் பொண்டாட்டியும் கட்ட கட்டி ஆடக்கூடச் செய்வோம். என் பொண்டாட்டி பத்தாவது வரை படிச்சிருக்கு. கல்யாணம் முடிஞ்சதுமே நான் அதுகிட்ட நீ வேஷம் கட்டி ஆடணும்னு சொன்னேன். ஆனா, `என்னால அப்படியெல்லாம் ஆட முடியாது' னு சொல்லி மறுத்துடுச்சு. நம்ம கலைய நாமளே அவமதிக்கக் கூடாது. இதுதான் நம்மளோட வாழ்க்கை. மத்தவங்க தப்பா பாப்பாங்கன்னு நினைச்சு நம்ம தொழிலை விட்டுட முடியுமா? உனக்குத் துணையா நான் இருக்கேன். நீ கட்டை கட்டுன்னு சொன்னேன். என் மேல நம்பிக்கை வெச்சு அமுலு கட்டை கட்ட ஆரம்பிச்சிடுச்சு. நான் பதினைஞ்சு வருஷமா பொய்க்கால் குதிரை ஆடுறேன். அமுலு எட்டு வருஷமா ஆட ஆரம்பிச்சிருக்கு. எங்களைப் பாத்து இப்போ எங்க மூத்த பொண்ணும் கரகம் தூக்க வந்துடுச்சு. நம்மளோட பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் எங்களுக்கு அடுத்து எங்க பொண்ணு தலைமேல தூக்கி வெக்க ஆரம்பிச்சிட்டா. இனி இந்தக் கலைய அவ தாங்கிப்பிடிப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க” என்றபடியே மீண்டும் குதிரைக்கு வர்ணம் பூச, அவர் மனைவி அமுல் தொடர்கிறார். 

``எங்க குடும்பத்துல எல்லாருமே பொய்க்கால் குதுர, மயிலாட்டம், கரகாட்டம் ஆடுவாங்க. ஆனா, எனக்கு அதுல பெருசா விருப்பம் கிடையாது. இவருதான் என்கிட்ட, `காலங்காலமா நாம செய்யுற தொழிலை முதல்ல நாம மதிக்கணும். நீ தைரியமா கட்ட கட்டு நான் உன்கூட துணைக்கு நிக்கிறேன்' னு சொன்னாரு. வீட்டுக்காரரே நமக்கு துணையா இருக்கும்போது நாம ஏன் தயங்கணும்னு நினைச்சு கட்டை கட்ட ஒத்துக்கிட்டேன். பொய்க்கால் குதிரை ஆடுறது அவ்வளவு லேசில்ல. முழங்கால் அளவுக்கு கால்ல இறுக்கிக் கட்டை கட்டணும். அது மேலதான் 5, 6 மணி நேரம் நிக்கணும். திருவிழாக்களுக்கெல்லாம் போனா ரொம்ப நேரம் நிக்க வேண்டி வரும். அப்போ கால் நரம்பெல்லாம் புடிச்சு இழுக்கும். தோள் பட்டை வலிக்கும். ஆனாலும், அந்த வலியைப் பொறுத்துக்கிட்டாத்தான் எங்க பொழப்பு ஓடும். அதுமட்டுமல்லாம, நாங்க இதைப் பொழப்புக்காக மட்டும் பண்ணலைங்க. எங்க குடும்பத்துல உள்ளவங்க பாரம்பர்யமாச் செய்துக்கிட்டு இருந்த தொழிலை அவங்க சந்ததியினர் நாங்க விட்டுடாமத் தொடரணும்ங்கிற எண்ணத்தாலதான் பண்றோம். அதுல எங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குதுங்க” என்றபடியே மெல்லிய புன்னகை உதிர்க்கிறார். 

கோயில் திருவிழாக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், ஐ.டி நிறுவனங்கள், அரசியல் கூட்டங்கள், திரைப்படங்கள் என எங்கெல்லாம் இவர்களை அழைக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று நமது மண் சார்ந்த கலாசாராத்தை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். தனது தந்தையும் தாயும் குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கும்போது தான் மட்டும் விலகி நிற்கக்கூடாது. நாமும் நம் பாரம்பர்யத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம்புவின் மூத்த மகளும் கரகத்தைத் சுமக்க ஆரம்பித்திருக்கிறார். 

``நான் இங்கே பக்கத்துல இருக்கிற ஒரு அரசுப் பள்ளியில ஒன்பதாவது படிக்கிறேன். எங்க வீடு ரோட்டோரத்துலதான் இருக்கு. நாங்க குடிசைலதான் வாழுறோம். ஆனாலும், என் அம்மாவும் அப்பாவும் இந்தச் சமூகம் மதிக்கிற மாதிரியான கலையைத்தான் செய்துகிட்டு இருக்கிறாங்க. அம்மா பொய்க்கால் ஆடுகிறதைப் பார்த்து எனக்கும் ஆடணும்னு ஆசையா இருந்துச்சு. அப்பாகிட்ட சொன்னப்போ, `எனக்கு சந்தோஷம்தான்மா. ஆனா, நாங்கதான் படிக்கலை. நீயாவது படிச்சு பெரிய போலீஸ் அதிகாரியா ஆகணும்னு அப்பா ஆசைப்படுறேன்' னு சொன்னாங்க. அதோட, `நீ இப்புடி கட்டை கட்டி ஆடுறது உன்கூட படிக்கிற பிள்ளைகளுக்குத் தெரிஞ்சா உன்னைக் கிண்டல் பண்ணுவாங்க. அதனால, அம்மாவும் நானும் அதைப் பாத்துக்கிறோம். நீ படிப்புல கவனம் செலுத்து' னு சொன்னாங்க. நான் அப்பா பேச்சைக் கேட்காம பிடிவாதமா இருந்தேன். யார் கிண்டல் பண்ணினாலும் பரவாயில்ல. நான் உங்களோட சேர்ந்து கட்டை கட்டி ஆடுவேன். நல்லா படிக்கவும் செய்யுவேன்னு சொன்னதும் அப்பா சம்மதிச்சாங்க. நான் எப்போதும் கோயில் திருவிழாக்கள்ல கரகம் தூக்கி ஆடுறதை அவமானமா நினைச்சதில்ல.

இதுதான் எங்க குலத்தொழில் இதைச் செய்யுறதுக்கு நான் ஏன் வெக்கப்படணும். சில இடங்கள்ல எங்களை கோயில் திருவிழாக்களுக்கு வரச்சொல்லி ஆட வெச்சிட்டு காசு தராம ஏமாத்திடுவாங்க. அப்போ தர்றேன். இப்போ தர்றேன்னு சொல்லி இழுத்தடிப்பாங்க. அப்படிப் பண்றவங்களை நினைச்சுத்தான் நான் எப்போதும் வெக்கப்படுவேன். எங்களோட தொழில்தான் எங்களுக்கு குலதெய்வம். அதுதான் எங்களைக் காத்துட்டு இருக்கு. நாங்க அதை எங்க மூலமா உயிர்ப்போட வெச்சிருக்கிறேன். அதுமட்டுமல்ல, என் தோழிங்ககிட்டகூட நான் கரகம் ஆடுறதை மறைச்சதில்ல. அவங்க கிண்டல் பண்றதுக்காக நான் என்னோட கலைய விட்டுக் கொடுத்துட முடியாதுங்களே”  வைராக்கியத்தோடு பேசும் சர்மிளா நலிவுற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வைரக் களஞ்சியம். 

நாட்டுப்புறக் கலைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் தம்பு குடும்பத்தினர் வாழையடி வாழையாக அந்தக் கலைக்குப் பெருமை சேர்க்க நாம் ஊக்கம் கொடுப்போம். 

அடுத்த கட்டுரைக்கு