Published:Updated:

``என் மகன் எனக்குப் பொறவும் நல்லாருக்க, அந்த உதவி வேணும்!"- பரவை முனியம்மா

"கடைசியா `மான் கராத்தே' படத்துல, `ராயாபுரம் பீட்டரு... ரவுசு இவன் மேட்டரு'னு இளவட்டங்களுக்குப் புடிச்ச மாதிரியா ஒரு பாட்டு பாடுனேன். அடுத்து எதுலயும் நடிக்கல, பாடல. இப்போவும் படவாய்ப்புகள் வருது. ஆசையாதான் இருக்கு. ஆனா, பாழாப்போன உடம்பு ஒத்துழைக்க மாட்டுது. எழப்பு வந்துருது தாயி!"

``என் மகன் எனக்குப் பொறவும் நல்லாருக்க, அந்த உதவி வேணும்!"- பரவை முனியம்மா
``என் மகன் எனக்குப் பொறவும் நல்லாருக்க, அந்த உதவி வேணும்!"- பரவை முனியம்மா

ன்றல்ல... இரண்டல்ல... கிட்டத்தட்ட எட்டு வருடக் காத்திருப்புக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது, நாட்டுப்புறக் கலைஞர்களின் `கலைமாமணி'க் கனவு!  கலைமாமணி விருதைப் பெறும் 201 பல்துறை கலைஞர்களில் `சிங்கம்போலே...' பாடல் புகழ் பரவை முனியம்மாவும் ஒருவர். `ஆடிவாரா மாரி ஆடிவாரா...' என அம்மன் கோயில் திருவிழாக்களில் இவரது வெண்கலக்குரல் இன்றும் ஒலித்துவருகிறது.

தன்னுடைய 20-வது வயதில் கும்மிப்பாட்டு, நாட்டுப்புறக் கச்சேரி எனத் தன் பயணத்தைத் தொடங்கிய முனியம்மாவுக்கு, அவருடைய 60-களில் ரத்தினக் கம்பளம் விரித்துக் காத்துக்கொண்டிருந்தது தமிழ் சினிமாத் துறை.

``வயசாயிடுச்சே... இனிமே சினிமாவுல என்ன சாதிக்க முடியும்?" என்று பலரும் பேசிவந்த ஸ்டீரியோ டைப் வசனங்களைத் தகர்த்தெறிந்தது இவரது `தூள்' பட என்ட்ரி!  `ஏ, சூறாவளி காத்துபோல சூழன்டு வாராண்டி... அவனைச் சுத்தி நிக்கும் பசங்களெல்லாம் மிரண்டு போராண்டி...' என இவர் ஹைபிச்சில் பாட, ஒட்டுமொத்த தமிழகமும் பரவை முனியம்மாவிடம் சரண்டரானது.

கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை பரவையில் உள்ள அவரது வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தோம். வயது முதிர்ச்சியால் சற்றே தளர்ந்து இருந்தாலும், மதுரைக்காரக் குசும்புக்கும் ரவுசுக்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் கலகலப்பாகப் பேசத் தொடங்கினார்.

``எனக்கு சொந்த ஊரு வாடிப்பட்டிக்குப் பக்கத்துல இருக்கிற பெருமாள்பட்டி. எங்க ஆத்தாவுக்கு நான், 13 வருஷத்துக்குப் பொறவு பொறந்த ஒரே புள்ள. தாலாட்டு, தெம்மாங்குன்னு எங்கம்மா பாடுறதைக் கேட்டுதான் நான் வளர்ந்தேன். எளந்தாரி வயசுல இருந்தே வயலு, வாய்க்கா வரப்புன்னு காடு மேடெல்லாம் பாடிக்கிட்டுக் கிடப்பேன்.  எங்க ஊர்ல என்னைப் பாடச்சொல்லிக் கேக்க, ரசிக்கன்னு ஒரு பட்டாளமே கூடிக்கெடக்கும். மாசத்துக்கு நாலு திருவிழா, தெருவுக்கு நாலு கச்சேரினு இந்த மதுர படுற அமர்க்களம் இருக்கே... அம்புட்டுக்கும்  என்னைய கூப்பிட்டிருவாக. எனக்கு 16 வயசுலேயே கல்யாணம் முடிச்சுட்டாக. அன்னிக்குப் பொழப்பு தேடி, பரவைக்கு வந்தவதான் இன்னிக்கு உங்க முன்னாடி `கலைமாமணி' பரவை முனியம்மாவா நிக்குறேன்" என்றபோது, அந்தப் பொக்கைவாய்ச் சிரிப்பில் அத்தனை நிறைவு!

தள்ளாடும் வயதிலும் தளராத தன்னம்பிக்கையுடன் வீடு முழுக்கப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார் இந்தக் கிராமத்துக் குயில். சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு முனியம்மா ஒரு முன்னுதாரணம்!

``எங்க ஆத்தா பழக்கடை வெச்சுதான் எங்களுக்குக் கஞ்சி ஊத்துச்சு. வயக்காட்டுல வேலை இல்லாட்டி  அங்கதான் கெடப்பேன். ஒருநாள் அங்க வந்த எஸ்.பெருமாள் கோணார்தான், `நல்லா பாடுறியே புள்ள!'ன்னு மனசாரப் பாராட்டி, தொடர்ந்து நிறைய பாட்டு எழுதிக் கொடுத்து படிக்கவெச்சாரு. எனக்கு 9 புள்ளைக. கடைசிப் பையனுக்கு மூளைக்காச்ச வந்து, மூளை வளர்ச்சி நின்னுபோச்சு. என் கடைசிப் புள்ள பொறக்கிறதுக்கு முன்னாடிதான் திருச்சி வானொலியில வாய்ப்பு கிடைச்சது.

அதைத் தொடர்ந்து மதுரை வானொலியில `நாட்டுப்புறப் பாடல்'னு எம்பாட்டைத்தான் மொத பாட்டா வெச்சு வாசிச்சாங்க. அப்போலாம் எனக்கு பூரிப்பு மட்டுப்படல! என் குரல வானொலியில கேட்டுட்டுத்தேன் `தூள்' படத்துக்கு தரணி கூப்பிட்டாரு. அதுல பாடின `சிங்கம்போலே...' பாட்டைக் கேட்டுப்புட்டு ஊரெல்லாம் அலப்பறைய கூட்டுனாக. 60 வயசுக்குப் பொறவுதான் இந்த ஆச்சியோட ஆட்சியே! தமிழ், மலையாளம்னு 80 படத்துல நடிச்சிருக்கேன். கடைசியா `மான் கராத்தே' படத்துல, `ராயாபுரம் பீட்டரு... ரவுசு இவன் மேட்டரு'னு இளவட்டங்களுக்குப் புடிச்ச மாதிரியா ஒரு பாட்டு பாடுனேன். அடுத்து எதுலயும் நடிக்கல, பாடல. இப்போவும் படவாய்ப்புகள் வருது. ஆசையாதான் இருக்கு. ஆனா, பாழாப்போன உடம்பு ஒத்துழைக்க மாட்டுது. எழப்பு வந்துருது தாயி!" என்றவர் ``செந்திலு... இங்க வா ராசா!'' என்றழைத்து, தன் கடைசி மகனை அறிமுகம்செய்தார்.

மூளை வளர்ச்சி இல்லாவிட்டாலும், கையெடுத்து கும்பிட்டு வரவேற்கும் வளர்ந்த குழந்தையாய் செந்தில். ஒருவித நெகிழ்ச்சியுடன் அவரை அரவணைத்தபடி பேசத் தொடங்கினார், முனியம்மா.

``சமீபத்துல ரொம்ப முடியாமப்போச்சு. ஜெயலலிதா அம்மா இருந்தப்போ 6 லட்சம் ரூபாய் செலவுக்குக் கொடுத்து உதவுச்சு. அதுல வர்ற வட்டியையும் எம்.ஜி.ஆர் அறக்கட்டளையில இருந்து கிடைக்குற மாதாந்தர உதவித்தொகையையும் வெச்சுதான் காலத்தை ஓட்டிட்டு இருக்கேன்.

எட்டு வருஷமா காத்துக் கெடந்த கனவு! நான் எழுதிப்போடுறதுக்கு முன்னாடி அவுகளே கூப்பிட்டு கலைமாமணி குடுத்துட்டாக. இதுக்குமேல என்ன வேணும் தாயி? எம்புள்ள எனக்குப் பொறவு கஷ்டப்படக் கூடாது. நான் இல்லாமப்போயிட்டாலும் அரசாங்கம் மனசுவெச்சு எனக்கு வந்துட்டு இருக்கிற உதவித்தொகைய செந்திலுக்குக் கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும். என் மகன் எனக்குப் பொறவும் நல்லாருக்க அந்த உதவி வேணும்" என்று உடைந்த குரலில் பேசினார்.

பெத்த மனம், பித்தாய்ப் பரிதவித்து விடை கொடுத்தது!