தொடர்கள்
Published:Updated:

அறிவுஜீவி ஆவது எப்படி?

அறிவுஜீவி ஆவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவுஜீவி ஆவது எப்படி?

அறிவுஜீவி ஆவது எப்படி?

சோஷியல் மீடியாவில் நாலுபேர் மதிக்கும் மகத்தான மனிதராக வாழவேண்டுமென்றால் ஒண்ணு இன்டலெக்சுவலா வாழணும், அல்லது இன்டலெக்சுவல்களோடு வாழணும். இதில் முதல் ரூட்டுதான் ஈஸி... 

சரி, எப்படி இன்டலெக்சுவலாக மாறுவது... வாங்க சொல்றோம்.


ஸ்டெப் - 1: நம் எண்ணங்களிலிருந்து வண்ணங்களை அழிரப்பர் கொண்டு அழிச்சிடணும். விட்டத்தையோ, வின்டோவையோ பார்த்தமாதிரி பிளாக் அண்டு வொயிட் போட்டோ ஒண்ணைத்தான் `டிபி’யா வைக்கணும். கூடவே, `கறுப்பு, ஒளியிலும் இருளிலும் கறுப்பாகவே தெரிகிறது’ன்னு கிறுகிறுக்க வைக்கிற கேப்ஷனையும் போட்டுவிடணும். ஜி... இப்பவே உங்களுக்கு இன்டலெக்சுவல் லுக் வந்துடுச்சு பாருங்க!

அறிவுஜீவி ஆவது எப்படி?

ஸ்டெப் - 2:  ஒரு காலத்துல பேரரசு படங்களைப் பார்த்து சில்லறையைச் சிதறவிட்டிருப்போம். தப்பில்லை. ஆனால், இனி அது அறவே கூடாது. தமிழ் மசாலாப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் மசாலா நெடி மூக்கில் ஏறியதுபோல் மூக்கைப் பொத்தணும். ‘சினிமா எனும் ஆலத்தை அரிக்கவரும் நச்சுகள்’னு போஸ்ட்ல கொந்தளிக்கணும். ஆனா, மலையாளத்துல மோகன்லால் பட்டாபட்டி டவுசர் தெரிய பத்துப்பேரைத் தூக்கிப்போட்டு மிதிச்சுட்டிருப்பார், அந்த வீடியோவை ஷேர் பண்ணி `லவ் யூ லாலேட்டா’ன்னு அன்பு பொழியணும்.

ஸ்டெப் - 3:
  திடீர்னு ஒரு நட்டநடு ராத்திரியில், `கழுத்து கயிற்றைத் தேடுகிறது, கைகள் கத்தியைத் தேடுகிறது, கலங்குவதால் கண்கள் மட்டும் சும்மாய் இருக்கிறது’ன்னு தற்கொலைக் கவிதை ஒண்ணைத் தட்டிவிட்டு, போர்வையைப் போர்த்திக்கிட்டுப் படுத்துடணும். இது அந்த நேரமா உலாத்துற, இன்ஸோம்னியா இன்டலெக்சுவல் குரூப்புக்கு நம்மளால முடிஞ்ச அர்ப்பணிப்பு. அவிய்ங்க அதுக்கு சீரியஸா கமென்ட் பண்ண ஆரம்பிச்சிருவாய்ங்க... நமக்கு ஜாலியாருக்கும்! ’

ஸ்டெப் - 4: ‘வரிப்புலி பசிச்சாலும் வடை தின்னாது’ங்கிற மாதிரி, இன்டலெக்சுவல் ஒருபோதும் டீ, காபிகளைத் தொடக்கூடாது. குடிச்சா க்ரீன் டீதான்...  அடிச்சா கோல்ட் காபிதான். ஆக, நாம க்ரீன் டீதான் குடிக்கிறோம்னு இந்தச் சமூகத்துக்குத் தெரியப்படுத்த, அழகான ஒரு இங்கிலீஷ் புக் பக்கத்துல இந்த க்ரீன் டீ கப்பை வெச்சி, சுடச்சுட ஒரு போட்டோ போட்டுவிடணும். ‘ரசனைக்காரன்யா’ என சமுதாயம் சிலாகிக்க ஆரம்பிச்சுடும். நீங்களும் அந்த காபியைக் கீழே ஊத்திட்டு, புக்கையும் கவுத்திவெச்சுட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடலாம்.

ஸ்டெப் - 5: ஊருக்குள்ளே ஒரு பிரச்னைன்னா, ஊர்ல இருக்கற மொத்த ஜனமும் ஃபேஸ்புக்லதான் கம்பு சுத்த வரும். அந்தமாதிரி நேரங்களில், கூட்டத்திலிருந்து தனித்துத் தெரிய இன்டலெக்சுவல்ஸ் செய்யவேண்டியது என்னன்னா, எதிர்திசையில கம்பு சுத்தணும். அதுவும் `இந்த ஆட்டுமந்தைக் கூட்டங்கள்’னு அம்புட்டு பயலையும் விளாசின மேனிக்கு சுத்த ஆரம்பிக்கணும்.

ஸ்டெப் - 6: சமூக வலைதளங்கள்ல நீங்க இன்டலெக்சுவலா பரிணமிச்சுட்டு வர்றதைப் பார்த்து, சிலர் உங்களை ஹெவியா லைக் பண்ண ஆரம்பிப்பாங்க. அப்படியே உங்களுடன் நண்பராகி நம்பரும் வாங்கிடுவாங்க. அதனால், அவங்களை ஒரு பரபரப்புலேயே வெச்சிருக்க வாட்ஸ் அப்ல பர்ஃபார்ம் பண்ண வேண்டியது மிகமிக அவசியம். அத்தனை கவிதையை எழுதிவெச்சிருக்கார் ரூமி, அதுல தினமும் ஒண்ணை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸா காமி!

ஸ்டெப் - 7: `கவிஞர் கம்ப்யூட்டர் நேசனின் கவிதைத்தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. அவர் கவிதைகளைக் குறுக்குவெட்டாகப் பிளந்து பார்த்ததில் கடைசித் தனிமம் வரையிலும் ஆழமான அரசியல் பரவியிருக்கிறது’ன்னு யாருன்னே தெரியாத ஒரு கவிஞரைத் தூக்கிக் கொண்டாந்து, கொண்டாடணும். அதுல யாராவது “அந்தக் கவிதைத்தொகுப்பைப் படித்திருக்கிறீர்களா சகோ”ன்னு பிரபலமான ஒரு கவிதைத்தொகுப்பைப் பற்றி கமென்ட் போட்டால், “அதுபோன்ற தட்டையான கவிதைகளைப் படித்துப் பித்துப்பிடித்ததால் தான் கவிஞர் கம்ப்யூட்டர் நேசனின் கவிதைகளைப் படிக்க வந்தேன்”னு காலி பண்ணிடணும்.

அறிவுஜீவி ஆவது எப்படி?

ஸ்டெப் - 8:  `சங்கு ஊதுற வயசுல சங்கீதா எனும் காமெடிதான் எவ்வளவு பிற்போக்குத் தனமானது. அதில் இரண்டு நொடிகளே வரும் அந்த மஞ்சள் சேலைப் பாட்டியின் முகத்திலேயே அதுபற்றிய பரிதவிப்பு தெரியும்’ என கூகுளே குழம்பும் அளவுக்கு ரைட்டப்புகளை அடுக்கணும். அடிக்கடி, ` `கிழக்கு சீமையிலே’ விக்னேஷ் ஒரு நிகழ மறந்த அற்புதம், ப்ரியா கில் எனும் பிரபஞ்சத்தின் பேரழகி’ன்னு குழப்ப ஸ்டேட்டஸ்கள் போட்டுவிட்டு மத்தவங்களைக் குழப்பியடிக்கணும்.

ஸ்டெப் - 9: `` `தாகம் எடுக்கிற நேரம்... வாசல் வருகுது மேகம்’ன்ற பாட்டுல இளையராஜா இப்படிக்கா போய் அப்படிக்கா வந்துருக்காரு”ன்னு இளையராஜாவே மறந்துபோன இளையராஜா பாட்டை எல்லாம் தோண்டியெடுத்து உருகணும். “எனக்குத் தெரிஞ்சு, சத்யராஜ் - கவுண்டமணி காம்போவைவிட, சத்யராஜ் - சுருளிராஜன் காமெடிதான் பட்டாசா இருக்கும்”னு புதுவிதமா உருட்டணும். அதாவது, “நீங்கள் வாழும் சில்லறை உலகில் நான் இல்லை. நான் தனி”ங்கிறதை மணிக்கொருமுறை எப்படியாவது நிரூபிச்சுக்கிட்டே இருக்கணும்!

ஸ்டெப் - 10:
அன்பு செய்வது இன்டலெக்சுவல்களின் தலையாயக் கடமை. பிள்ளையார் சுழி கணக்கா, ஹார்ட்டின் விட்டுதான் பதிவு எழுத ஆரம்பிக்கணும். `உச்சம் தொடும் அன்பின் கொடி’, `தொட்டுத்தொடரும் தொப்புள்கொடி’ `உன்மத்தம்’, `ஊமத்தங்காய்’ மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தாம பதிவுகள் எழுதக்கூடாது. 

“ `செம்பட்டி வெள்ளரிக்காயைப் போல சிரியேன்டி செல்லக்கண்ணே... நிலக்கோட்டை பூவெடுத்து நான் ஜடைபோட்டுப் பார்ப்பேன் பொண்ணே’ங்கிற வரியில பாடலாசிரியர் மண் மனத்தைத் தூவிவிட்டு ஆறு விசில்ல வேக வைச்சு எடுத்திருக்கார்”னு காதல் பாடல்களோட வரிகளுக்கு வரிந்துகட்டி விளக்கம் எழுதணும். வாரம் ஒரு பாட்டு வீதம், ஆறு மாதத்திற்கு இதைச் செய்து வந்தால், நாள்பட்ட இன்டலெக் சுவலாகும் முயற்சியும் நல்லபடியாய் முடியும்.

- ப.சூரியராஜ்; ஓவியங்கள்: ரமணன்