Published:Updated:

3 விநாடிக்கு ஒரு பிறப்பு.... 60 வயது பார்பியுடன் சுவாரஸ்ய பயணம்! #HBDBarbie #VikatanInfographics

'ஒல்லியான இடுப்புடன், விதவிதமான வண்ணங்களுடன், எண்ணெய்யில்லாத நீண்ட கூந்தலை விரித்துப் போட்டிருப்பது பெண்ணுக்கு அழகு' என்பதை நிலைநிறுத்துவதற்காகவே படைக்கப்பட்டவை எனலாம் பார்பி பொம்மைகளை.

3 விநாடிக்கு ஒரு பிறப்பு.... 60 வயது பார்பியுடன் சுவாரஸ்ய பயணம்! #HBDBarbie #VikatanInfographics
3 விநாடிக்கு ஒரு பிறப்பு.... 60 வயது பார்பியுடன் சுவாரஸ்ய பயணம்! #HBDBarbie #VikatanInfographics

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொம்மைகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. பொம்மைகள், ஆயிரம் கதைகள் சொல்லும். எனவேதான் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களில் முக்கிய இடம் வகிக்கின்றன பொம்மைகள். குழந்தைகளுக்குப் பிடித்த பொம்மையை வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும், அதையே அவர்கள் உலகம் எனக் கருதி வாழத் தொடங்கிவிடுவர். குளிப்பாட்டுவது, உடை மாற்றுவது, தலை சீவுவது, சாப்பிடவைப்பது, தூங்கவைப்பது என, பொம்மைகளை ஒரு குழந்தைபோலவே நடத்துவார்கள். பெரியவர்களுக்குக்கூட  பொம்மைகளின் பெயரைக் கேட்டாலே ஒருவிதப் புன்னகை வரும். புன்னகையுடன் குழந்தைப் பருவமும் ஞாபகம்வரும். இன்றைக்கு நிப்பான் பொம்மைகளையும் டெடி பியர்களையும் அணைத்தபடி தூங்குகின்றனர் பலர்.

ஒவ்வொருவருக்கும் பொம்மைகளின் ரசனைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் தங்களது கீ செயின், கைப்பை, கார், வீட்டு அலங்காரம், திருவிழாக்கள், திருமண விழா, பிறந்த நாள் விழா, நவராத்திரி விழா என அனைத்துவிதமான விழாக்களிலும் பொம்மைகளுக்கு முக்கியப் பங்குண்டு. புதிதாகக் கல்யாணமாகிக் கருவுற்று இருக்கும் பெண்களுக்கு, குழந்தைபோல் இருக்கும் பொம்மைகள் என்றால் அதிகம் பிடிக்கும். ஆண் குழந்தைகளுக்கு கார், பைக் என்றால் பெண் குழந்தைகளுக்கு முதல் சாய்ஸ் `பார்பி'தான். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பெண் குழந்தைகளுக்கு நெருக்கமான பெண் தோழியாக இருப்பதும் `பார்பி'தான்.

`ஒல்லியான இடுப்புடன், விதவிதமான வண்ணங்களுடன், எண்ணெய் இல்லாத நீண்ட கூந்தலை விரித்துப் போட்டிருப்பது பெண்ணுக்கு அழகு' என்பதை நிலைநிறுத்துவதற்காகவே படைக்கப்பட்டவை பார்பி பொம்மைகள். இவளைப் போன்ற தேகமும் அழகும் தனக்கு இல்லையே எனப் பொறாமைப்படும் பெண்கள் ஏராளம். சாத்தியமே இல்லாத இத்தகைய `அழகு', உலகம் முழுவதிலும் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் கவர்கிறது. பலரின் பொறாமைக்கும் ஆளான பார்பிக்கு, இன்று தான் பிறந்த நாள். இவளைப் போன்றே இவள் பிறந்த கதையும் சுவாரஸ்யம் நிறைந்ததே.

அமெரிக்காவில் ரூத் ஆண்ட்லர் என்பவரின் பெண் குழந்தை பார்பரா, காகிதங்களைக்கொண்டு பெண்களைப் போன்று சிறு சிறு பொம்மைகளைச் செய்து, அதற்கு மனிதர்களின் பெயரை வைத்து தன் நண்பர்களுடன் விளையாடிவந்தாள். குழந்தைகளின் ரசனையைப் பார்த்த ரூத் ஆண்ட்லருக்கு, வளர்ந்த ஓர் உடலைப் பொம்மையாகச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. (அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் மிகவும் சிறியதாகவே இருந்தன). மேட்டல் பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த தன் கணவர் எலியட்டிடம் யோசனையைக் கூற, முதலில் அவர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. 

அதன் பிறகு 1956-ல், தன்னுடைய குழந்தைகளான பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் ஐரோப்பியாவுக்கு சுற்றுலா சென்ற ரூத், பில்ட் லில்லி என்ற பெயரில் வளர்ந்த மனித உருவம்கொண்ட ஜெர்மன் நாட்டுப் பொம்மைகளைக் கண்டு வியந்தார். மூன்று பொம்மைகளை வாங்கிய அவர், தன் நாட்டுக்குத் திரும்பிய பிறகு, ஒன்றை தன் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, அதேபோன்ற பொம்மையைத் தயாரிக்கும் பணியில் இறங்கினார். தன் கணவர் அக்கறை செலுத்தாததால், `ஜேக் ரையான்' என்ற பொறியாளரின் உதவியோடு, கறுப்பும் வெள்ளையும் கலந்த நீச்சல் உடையில், ஓர் இளம்பெண்ணின் பொம்மையை உருவாக்கினார். அந்தப் பொம்மைக்கு அவரின் மகளான பார்பராவின் பெயரைச் சுருக்கி `பார்பி' எனப் பெயரிட்டார். 

இந்தப் பொம்மையை, மேட்டல் இங்க்  நிறுவனத்தின் மூலம் நியூயார்க் நகரில் 1959-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி அனைத்துலக விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சியில் முதன்முதலாக அறிமுகம் செய்துவைத்தார். அன்று முதல் மார்ச் 9-ம் தேதி பார்பியின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. முதல் பார்பி பொம்மையின் விலை 3 டாலருக்கு விற்கப்பட்டது. (இதே பார்பி, 2006-ல் ஏலத்துக்கு வந்தபோது இதனுடைய விலை 27,450 டாலர்). முதல் ஆண்டிலேயே 3,50,000 பொம்மைகள் விற்பனையானது. 

பெண்கள் தம் வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் அடைய முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், 1960-ல் பெண்கள் வேலைக்குச் செல்வதை ஆதரிக்கும் வகையில் வேலைக்குச் செல்லும் பார்பிகள் தயாரிக்கப்பட்டன. கலை, விமானம், கணிதம் மற்றும் பல துறைகளில் சாதித்த பெண்களை மனதில் வைத்துக்கொண்டு பல்வேறு புதிய உருவங்களில் தயாரிக்கப்பட்டன.  பார்பிக்கு ஒரு நண்பன் தேவை என்பதை அறிந்த மெட்டல் நிறுவனம், 1961-ல் ஆண் பொம்மையை உருவாக்கி அதற்கு `கென்' என்ற பெயரைச் சூட்டியது. இவர்களின் பயணத்துக்காக இரண்டு இருக்கையுடன்கூடிய Austin-Healey 3000 MKII BN7 என்ற பார்பியின் முதல் காரை 1962-ல் அறிமுகப்படுத்தினர். 1967-ல் பிரிட்டிஷ் ஃபேஷன் மாடல் ட்விக்கியைப் போன்று முதல் `செலிப்பிரிட்டி பார்பி' தயாரிக்கப்பட்டது. 1971-ல் பார்பியின் சாகசப் பயணத்துக்கு உதவியாக இருக்கும் `முதல் சுற்றுலா வாகனமும்' தயாரானது. 1971 முதல் 1990 வரை கோல்டு மெடல் பார்பி, அறுவைசிகிச்சை நிபுணர், ஏரோபிக்ஸ் பயிற்றுவிப்பாளர், பைலட், ராணுவ அதிகாரி, CEO எனப் பல்வேறு மாடல்களில் குழந்தைகளின் மனதைக் கவர்ந்தார். 

1992-ல் பார்பியின் உயரத்தின் அளவுக்கு நீண்ட முடியுடன்கூடிய பார்பி வெளிவந்து, அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. இதற்கென்று பிரத்யேகமாக விற்கப்பட்ட ஆடைகளை வாங்கி அணிவித்து மகிழ்ந்தனர் குழந்தைகள். தொடர்ந்து, காவல்துறை அதிகாரியாகவும், தீயணைப்பு வீரராகவும் பொதுமக்களுக்குச் சேவை செய்வது முக்கியம் என்று குழந்தைகளுக்கு ஊக்கமளித்தார். 2000-ம் ஆண்டு ஆரம்பக்கட்டத்தில் வித்தியாசமான முறையில் ஹெல்மெட், ஸ்கேட்போர்டுடன் `எக்ஸ்ட்ரீம் 360 பார்பி' அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிறகு, பார்பி ஓர் அடையாளமாகவே மாறிவிட்டது. 

பார்பி பொம்மை, காலப்போக்கில் கதைகள், படங்கள், விளம்பரங்கள் என அனைத்திலும் வர ஆரம்பித்தது. 1997-ம் `டாய் ஸ்டோரி 2' (Toy story 2) படத்தில் சிறு கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும், 2001-ல் `Barbie in the Nutcracker' என்ற முழுநீளத் திரைப்படத்தில் நடித்து குழந்தைகள் மத்தியில் ராணியாக வலம்வந்தது. தேனீ வளர்ப்பவர், புதைப்படிமவியல் ஆராய்ச்சியாளர், விலங்கியலாளர், விமான ஓட்டுநர், கம்ப்யூட்டர் இன்ஜினீயர், ரேஸ் கார் டிரைவர், செய்தி வாசிப்பாளர் என, பெண்களால் அனைத்தும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். 2010-ல் `Barbie- Fashionistas Swappin' என்ற முதல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 2014-ல் @barbiestyle என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கப்பட்டது.

அமெரிக்காவில் பொம்மை விற்பனையில் முதல் இடம் பிடித்துள்ள பார்பிக்கு, பிடித்த வளர்ப்புப் பிராணி குதிரை. உலகம் முழுவதும் 3 விநாடிக்கு ஒரு பார்பி பொம்மை விற்கப்படுகிறது. வருடத்துக்கு 5.8 கோடி பார்பி பொம்மைகள் விற்பனையாகின்றன. 2016-ல் டைம் பத்திரிகையில் வளைந்த இடுப்புடைய, சிறிய மற்றும் உயரமான பார்பியின் மூன்று புதிய உடல் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பார்பியின் புகழ் உலகெங்கும் பரவிக்கொண்டிருக்க, கடந்த ஆண்டு `Barbie Dream house Adventures' என்ற தொடர் நெட்ஃபிலிக்ஸில் வெளிவந்து, அனைத்து வயதினரையும் ஈர்த்தது.  படங்கள் மட்டுமின்றி, பார்பியின் ``I am the Barbie girl, in the barbie world" பாடல் அவ்வளவு பிரபலம். தற்போது 60-வது ஆண்டை தொட்டு நிற்கும் பார்பி, 6 புதிய மாடல்களில் குழந்தைகளை மகிழ்விக்க வருகிறாள்.

ஓர் இளம் பெண்ணின் வடிவத்தில் உருவாக்கப்பட்ட பார்பி, இன்று பலரும் விரும்பும் வகையில் 100-க்கும் மேற்பட்ட வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு இளமையாக இருக்கும் பார்பியின் வயது தற்போது 60 என்றால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஹேப்பி பர்த்டே `பார்பி கேர்ள்!'