Published:Updated:

'எதனால் பரவுகிறது ஹெச்.ஐ.வி?' - கேரள அரசு பாடப்புத்தகத்துக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு!

'திருமணத்துக்கு முந்தைய பாலுறவு அல்லது திருமண உறவுவிலுள்ள இணையரன்றி வேறொரு நபருடனான பாலுறவு ஆகியன ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு வழிவகுக்கும்' என்று இடம்பெற்றுள்ளது. 

'எதனால் பரவுகிறது ஹெச்.ஐ.வி?' - கேரள அரசு பாடப்புத்தகத்துக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு!
'எதனால் பரவுகிறது ஹெச்.ஐ.வி?' - கேரள அரசு பாடப்புத்தகத்துக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு!

கேரள மாநிலத்தின் பத்தாம் வகுப்பு உயிரியல் பாடப்புத்தகத்தில், 'நோய்களைத் தவிர்ப்போம்' என்றொரு பாடம் உள்ளது. உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்புகள், அவை பரவுவதற்கான காரணங்கள், அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகள் அந்தப் பாடத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. பால்வினைத் தொற்று நோயான ஹெச்.ஐ.வி. பரவும் காரணிகளும்  கூறப்பட்டுள்ளன. அதில், 'திருமணத்துக்கு முந்தைய பாலுறவு அல்லது திருமண உறவுவிலுள்ள இணையரன்றி வேறொரு நபருடனான பாலுறவு ஆகியன ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு வழிவகுக்கும்' என்று இடம்பெற்றுள்ளது. 


ஹெச்.ஐ.வி. யை பொறுத்தவரையில், மருத்துவர்களும் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது 'ஹெச்.ஐ.வி. ஓர் பால்வினைத் தொற்றுநோய். பாதுகாப்பற்ற பாலுறவே இப்பாதிப்பை ஏற்படுத்தும்' என்பதைத்தான். இப்படியான சூழலில் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஹெச்.ஐ.வி. பரவும் விதம் குறித்த மேலோட்டமான கருத்து, மருத்துவச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2016 -ம் ஆண்டில் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகத்தில், இப்படி ஒரு தவறான செய்தி இருப்பதை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் என யாருமே இத்தனை வருடங்களாகக் கேள்வியெழுப்பாமல் இருந்துள்ளனர். மேல்நிலை வகுப்புக்குப் பாடம் எடுக்கும் கேரளாவை சேர்ந்த தாவரவியல் ஆசிரியர் ஒருவர்,  சமீபத்தில் இதைக் கவனித்துள்ளார். உடனடியாக, தவறான இத்தகவலை சமூக ஊடகத்திலும் பகிர்ந்தார். மேல்நிலை ஆசிரியரான அவர் தனது பதிவில், "பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களில், ஹெச்.ஐ.வி பரவுவதற்கான காரணம், பாதுகாப்பற்ற உடலுறவு எனச் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு புத்தகத்தில்தான் இந்தத் தகவல் தவறாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

பாடப் புத்தகத்தில் தவறான கருத்து அச்சிடப்பட்டதற்கான எதிர்ப்புகள் வலுப்பெறத் தொடங்கிய நிலையில், கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மாநில கவுன்சிலின் (SCERT) இயக்குநர் பிரசாத் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.  
"2019 - 20 ம் ஆண்டுக்கான புத்தகங்கள் தற்போது அச்சிடப்பட்டு வருகின்றன. அவற்றில் இந்த பிழை கட்டாயம் நீக்கப்பட்டுவிடும்" என்று உறுதியளித்தார். பாடம் எடுத்த எந்த ஆசிரியரும் இதுவரை இதைச் சுட்டிக்காட்டாதது, அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார் பிரசாத். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக இருக்கும் தவறான தகவலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவோ, பொறுப்பேற்கவோ இல்லை என்பதால், அதற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளது. 

பொதுவாக மருத்துவம் சார்ந்த எந்த விழிப்புஉணர்வையும், வளரிளம் பருவத்தினரிடம் இருந்து தொடங்குவதே முறையாக இருக்கும். அதிலும், உயிர்க்கொல்லி நோய்கள் மற்றும் பால்வினைத் தொற்றுநோய்கள் குறித்த சரியான விழிப்புஉணர்வு அவசியம். உலக சுகாதார நிறுவனம், ஹெச்.ஐ.வி. குறித்த தங்களின் அனைத்து வெளியீடுகளிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒரு கருத்து, 'கட்டியணைப்பதோ, முத்தமிடுவதோ கூட ஹெச்.ஐ.வி. பாதிப்பை ஏற்படுத்தாது. ஹெச்.ஐ.வி. ஒரு பாலியல் தொற்றுநோய். எனவே, பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட வேண்டாம்' என்பதைத்தான். எந்த சூழலிலும், ஹெச்.ஐ.வி.யை தொற்றுநோயாகச் சொல்லிவிடக்கூடாது என்பதை உணர்த்தவே இது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. மிக நேர்த்தியாக, முறையாக, சரியான கருத்துகளைப் பரப்பவேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் உண்டு.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த பால்வினை நோய் தொற்றுகளுக்கான மருத்துவர் அருண்குமாரிடம் இது குறித்து பேசினோம்.  

"ஹெச்.ஐ.வி போன்ற ஆபத்தான நோய்கள் எப்படிப் பரவுகிறது, எதனால் பரவுகிறது என்பது குறித்த தகவல்களைப் பகிரும்போது யாராக இருந்தாலும் கூடுதல் கவனத்தோடு செயல்படவேண்டும். இன்றைய காலகட்டத்தில் பதின் பருவ குழந்தைகள், எல்லாவற்றுக்கும் இணையத்தை மிக எளிதாக நாடிவிடுகின்றனர். அவற்றில் சரியான தகவல்கள் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தவறான புரிதல் ஏற்பட்டுவிட்டால் ஆபத்து. அவற்றைத் தவிர்க்கத்தான், செயற்பாட்டாளர்கள் பலரும் 'கல்வி நிலையங்களில், பாடப்புத்தகத்தில் பாலியல் கல்வியைக் கொண்டு வரவேண்டும்' எனப் போராடி வருகின்றனர். ஆனால் பாடப்புத்தகத்திலேயே இப்படியான கருத்துகள் இருப்பது நிச்சயம் ஆபத்தான போக்கு.

புத்தகத்தில், 'ஏற்கெனவே ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவரோடு உறவு வைத்துக்கொள்வது ஆபத்து' என்கிற ரீதியில் தகவல் சொல்லப்பட்டிருக்க வேண்டும். எந்த விதத்திலும், நோய் குறித்த தவறான அல்லது நேரெதிரான கருத்துகளை நாம் மாணவர்களிடம் பதிவிடக்கூடாது என்பதில் அரசு மட்டுமன்றி ஆசிரியர்களும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, மற்ற எந்த நோய் சார்ந்த தகவல்களைவிடவும், பால்வினை நோய்கள் குறித்த முறையான மற்றும் சரியான புரிதல், மாணவர்களுக்கு நிச்சயம் தரப்படவேண்டும்" என்றார்.