Published:Updated:

ரப்பர் தோட்ட கூலித் தொழிலாளி டு இயக்குநர்... ஷரீப் ஈசாவை கேரளா கொண்டாடுவது ஏன்?!

ரப்பர் தோட்ட கூலித் தொழிலாளி டு இயக்குநர்...  ஷரீப் ஈசாவை கேரளா கொண்டாடுவது ஏன்?!
ரப்பர் தோட்ட கூலித் தொழிலாளி டு இயக்குநர்... ஷரீப் ஈசாவை கேரளா கொண்டாடுவது ஏன்?!

நல்ல படைப்புகளையும் கலைஞர்களையும் முன் திட்டமிடலுடன் உருவாக்க இயலாது.  காலத்தின் சாத்தியத்தில் இந்த உருவாக்கம் நிகழ்கிறது. கேரளாவில், அப்படியான ஒரு சாத்தியம் நிகழ்ந்துள்ளது. சில வாரங்களுக்கு முன், கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில்,  ஷரீப் ஈசா இயக்கிய 'காந்தன் - தி லவ் ஆஃப் கலர்' திரைப்படமும் ஒன்று. சிறந்த படத்துக்கான விருது அந்தப் படத்திற்குக் கிடைத்துள்ளது. இந்தப் படம் உருவான விதம்  ஆச்சர்யமளிக்கக்கூடியது. இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கிய ஷரீப்  ஈசாவின் கதை, ஒரு திரைப்படத்தின் கதையைப்போன்றே சுவாரஸ்யமானது. 

திரைப்படத்துக்கு விருது அறிவிக்கப்பட்ட மறுதினம், ஷரீபைத் தேடி பத்திரிகையாளர்கள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவர் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். ஷரீப், அதிகாலையிலேயே கிளம்பி கண்ணூர் மாவட்டத்திலுள்ள சப்பரப்படவு கிராமத்திலுள்ள ரப்பர் தோட்டத்துக்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். கடந்த 15 வருடங்களாக அந்த ரப்பர் தோட்டத்தில்தான்  வேலைசெய்துவருகிறார். தினக்கூலியாக வேலை பார்த்துக்கொண்டே, எப்படி சினிமாவை இயக்கித் தயாரிக்க முடிந்தது என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார், ஷரீப் ஈசா. 

"ஒன்றரை வருடங்களாக, இந்தப் படம் எடுப்பதற்கான வேலைகள் நடந்தன. என் மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிட்டேன். என்னுடைய கேமராவும் விற்பனைக்குப் போய்விட்டது. இவ்வளவு விற்றும் எனக்கு இன்னும் 20 லட்சம் கடன் பாக்கி இருக்கிறது. இந்த விருது கிடைத்ததில் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் என்னவென்றால், எனக்கு கடன் கொடுத்தவர்களிடம்,  இன்னும் சில காலம் கால அவகாசம் வேண்டுமென என்னால் கேட்க முடியும்" என தன்னைச் சந்திக்க வந்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் ஷரீப். 

32 வயதான ஷரீப், தனது 17-வது வயதிலிருந்து  ரப்பர் மரங்களிலிருந்து பால் எடுக்கும் வேலையைச் செய்துவருகிறார். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள ரப்பர் தோட்டத்துக்கு இடுப்பில் சிவப்பு நிற பானையைக் கட்டிக்கொண்டு கிளம்புவார்.  கத்தியால் ரப்பர் மரத்தைக் கீறி, அதிலிருந்துவரும் ரப்பர் பாலை தனது பானையில் நிரப்பிக் கொள்வார். இந்த வேலையைத் தொடர்ச்சியாக  இன்றுவரை செய்துவருகிறார். இன்றைய சூழலில், அவர் ஒரு மரத்தில் இப்படி பால் எடுக்க 2 ரூபாய்  சம்பளம். ஷரீப், ஒரு நாளைக்கு 300 மரங்களிலிருந்து ரப்பர் பாலை எடுத்து 600 ரூபாய் சம்பாதித்துவிடுவார்.

ஷரீப்பின் அப்பா, அம்மா இருவருமே தினக் கூலிகள்தாம். சிறுவயதில் தினசரி  நாளிதழ்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலையையும் செய்துள்ளார். அதன்பிறகு, சில நேரங்களில் கல்யாண வீடியோக்களை எடுத்துள்ளார். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தேசாபிமானியின் ரிப்போர்ட்டராகவும் வேலைசெய்துள்ளார்.  இது மட்டுமின்றி, தனது 13 வயதில் ஒரு மேடை நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார்.  2016 -ல், ரோஹித் வெமுலா  தற்கொலைசெய்துகொண்ட சம்பவம்,  ஷரீபை மிகவும் பாதித்துள்ளது. அதை வைத்து ஒரு கதையை எழுதி குறும்படம் இயக்கியுள்ளார். மொத்தம் மூன்று குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.  இந்த அனுபவங்களும் இவரின் திரைப்பட ஆசைக்கு வேராக இருந்திருக்கிறது.

2017-ம் ஆண்டு,  இவருக்கு படம் இயக்கலாம் எனத் தோன்றியிருக்கிறது. படம் எடுக்கலாம் எனத் தோன்றியவுடன், கேரள ஆதிவாசி மக்களின் வாழ்வைப் பதிவுசெய்ய வேண்டும் என முடிவுசெய்திருக்கிறார்.  ஓர்  அனாதைச் சிறுவன் , தனது பாட்டி வீட்டில் வசிக்கிறான் என்ற புள்ளியிலிருந்து கதையைத் தொடங்கியிருக்கிறார். கேரளாவின் வயநாட்டுக்கு அருகிலுள்ள 'நேங்கரா காலனி' என்ற பூர்வகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தியுள்ளார்.

'ரவ்லா' என்ற மொழியை முதன் முதலாக இந்தத் திரைப்படத்தில் பதிவுசெய்துள்ளனர். ஷரீப்பின் நண்பரும், கவிஞருமான பிரமோத் கூவேரி, இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். இவரது மற்றொரு நண்பன் ப்ரியன், படத்தை ஒளிப்பதிவுசெய்திருக்கிறார். படத்தில், கம்யூனிஸ்ட் அமைப்பின் களப்பணியாளர் தயா பாய் பாட்டியாக நடித்தது படத்திற்குப் பெரிய பலம் என்கிறார் ஷரீப். ஆதிவாசி மக்களின் இசைக் கருவிகளைக்கொண்டே இந்தப் படத்தின் பின்னணி இசையை உருவாக்கியுள்ளனர். படத்தின் சூட்டிங்கை முடித்தவுடன், போஸ்ட் புரடக்‌ஷனுக்கு பணம் இல்லாமல் கேமராவை விற்று, அதன் மூலம் கிடைத்த 60,000 ரூபாயில் படத்தின்  போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை முடித்துள்ளார். 

படம், கடந்த நவம்பர் மாதம்  கொல்கத்தா திரைப்பட விழாவில் கலந்துகொண்டது, படக்குழுவினருக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. தற்போது, கேரளாவில் இந்தப் படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எளியவர்களின் கனவும் முயற்சியும் உடனடியாக இல்லாவிட்டாலும்,  உறுதியாக வெல்லும். வாழ்த்துகள் ஷரீப் ஈசா.