Published:Updated:

பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தைராய்டு வருவது ஏன்? மருத்துவ விளக்கம்

பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தைராய்டு வருவது ஏன்? மருத்துவ விளக்கம்
பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தைராய்டு வருவது ஏன்? மருத்துவ விளக்கம்

''ஓர் இடத்தில்  பத்து பெண்கள் இருந்தால், அதில் அதிகபட்சமாகப் 2 பெண்களுக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறது. சமீப சில வருடங்களாக இதுதான் நிலைமை. அந்தளவுக்கு தைராய்டு சுரப்பு குறைபாடு பெண்களிடம் அதிகரித்திருக்கிறது. இதற்கு சிகிச்சை இருப்பதால், பயப்பட தேவையில்லை'' என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதா. அவரிடம், 'கர்ப்பிணிகளுக்கு வருகிற தைராய்டு மற்றும் டெலிவரிக்குப் பிறகு வருகிற தைராய்டு பிரச்னைப் பற்றி கேட்டோம்.

 சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கிறபோது நீரிழிவு வருவதுபோல தைராய்டும் வருமா?

எல்லா கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு வருவதில்லை. அதுபோலத்தான் இந்தப் பிரச்னையும். சிலருக்கு மட்டும் வருகிறது. அதில் ஒரு சில பெண்களுக்குக் கர்ப்பமாவதற்கு முன்னாடியேகூட  தைராய்டு பிரச்னை இருந்திருக்கலாம்.  அந்தளவுக்கு தைராய்டு பிரச்னை தற்போது நிறைய பெண்களுக்கு இருக்கிறது. சில பெண்களுக்கு தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமே இருக்காது. ஆனால், தைராய்டில் டி.எஸ்.ஹெச்.  லெவல் அதிகமாக இருக்கும். அவர்கள் கர்ப்பமாக இல்லையென்றால், இரண்டு மாதங்கள் அப்படியே விட்டு விடுவோம். பிறகு பரிசோதனை செய்துப் பார்ப்போம், அப்போது நார்மலாக இருந்தால் சிகிச்சை தேவையில்லை.  ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இப்படி எந்த சான்ஸும் எடுக்க மாட்டோம். 

கர்ப்பிணிகளுக்கு தைராய்டு பிரச்னை இருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? 

தைராய்டு வந்தால் உடல் எடை போடுவது, முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தெரியும். ஆனால், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, இதுபோன்ற அறிகுறிகளுக்கெல்லாம் நாங்கள் காத்திருப்பதில்லை. அறிகுறிகள் வருவதற்கு முன்னரே தைராய்டு  ஸ்டிமுலேட்டிங் ஹர்மோன் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டிருக்கும். அதனால்தான், தற்போது, எல்லா கர்ப்பிணிகளுக்கு தைராய்டு பரிசோதனையைக் கட்டாயமாக்கி விட்டோம். கர்ப்பமாக இருப்பது கன்பார்ம் ஆனவுடனே இந்தப் பரிசோதனை செய்து விடுவோம். இருந்தால், உடனே சிகிச்சையை ஆரம்பித்து விடுவோம். இந்த நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை தந்துவிட்டால், சிசுவின் வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படாது. 

அம்மா சாப்பிடுகிற தைராய்டு மாத்திரையால் கருவில் இருக்கிற சிசுவுக்கு ஏதும் பிரச்னைகள் வரதா?

வராது. தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரந்து, அது தெரியாமல் மாத்திரை சாப்பிடாமல் இருந்தால்தான் சிசுவுக்கு பிரச்னை வரும். 

என்ன மாதிரியான பிரச்னை வரும்? 

கருவில் இருக்கிற சிசுவின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி இரண்டுக்குமே தைராய்டு ஹார்மோன் கட்டாயம் தேவை. ஏனென்றால், அந்த நேரத்தில் சிசுவினால் தனக்கான தைராய்டை தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாது. முழுக்க முழுக்க அம்மாவையே நம்பியிருக்கும். அதனால், அம்மாவின் தைராய்டு சுரப்பு கட்டாயம் சரியாக இருக்க வேண்டும். சரியில்லாதபட்சத்தில் சிசுவின் மொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தைராய்டு வருகிறதே...

ஆமாம், ஒருசில பெண்களுக்கு இப்படி நிகழ்கிறது. கர்ப்பமாக இருக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் எக்கச்சக்கமாக ஏற்படுவதால், இப்படி நிகழலாம்.  இதுவும் நார்மலான விஷயம்தான். இந்த வகை தைராய்டு சில மாதங்கள் இருந்துவிட்டு சரியாகி விடும். தேவைப்பட்டால் சிகிச்சைத் தருவோம்.  சரியான பிறகு மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடலாம். 

கர்ப்பமாக இருக்கும்போது நீரழிவு வந்தால், அந்தப் பெண்ணுக்கு பின்னாளில் நீரழிவு வரும் என்கிறார்களே... அதுபோல தைராய்டும் வருமா?

இது நீரிழிவு போல பின்னாளில் வராது. கர்ப்பமாக இருக்கும்போது தைராய்டு மாத்திரை சாப்பிட்டார்கள் என்றால், குழந்தைப் பிறந்த 4 முதல் 6 வாரங்கள் கழித்து தைராய்டு பரிசோதனை செய்வோம். பிரச்னை இருந்தால் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும், அவ்வளவுதான்.