Published:Updated:

மொஹாலியில் மிரட்டிய தவான் - ரோஹித்... ஆஸ்திரேலியாவுக்கு 359 ரன்கள் இலக்கு!

மொஹாலியில் மிரட்டிய தவான் - ரோஹித்... ஆஸ்திரேலியாவுக்கு  359 ரன்கள் இலக்கு!
மொஹாலியில் மிரட்டிய தவான் - ரோஹித்... ஆஸ்திரேலியாவுக்கு 359 ரன்கள் இலக்கு!

Photo Credits: BCCI

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி பல்வேறு மாறுதல்களுடன் களமிறங்கியது. தோனிக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இளம்வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அம்பாதி ராயுடு, ஜடேஜா, ஷமி ஆகியோருக்கு பதிலாக கே.எல்.ராகுல், சாஹல், புவனேஷ்வர் குமார் அணியில் இணைந்தனர். இந்தியாவின் இன்னிங்ஸை தவானும் - ரோஹித் ஷர்மாவுக் தொடங்கினர். 

இந்தத்தொடரில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இணை இன்றையப்போட்டியில் தொடக்கத்தில் நிதானமாக விளையாடியது. முதல் 10 ஒவர்களில் ரோஹித் ஷர்மா வழக்கத்துக்கு மாறாக மிகவும் பொறுமையாகவே விளையாடினார். தவான் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ரோஹித் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். சிறப்பாக விளையாடிய தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 28-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். முதல் 10-ஓவர்களுக்கு பிறகு இருவரும் தீவிர ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ரோஹித்ஷர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 40-வது அரைசதத்தை கடந்தார்.


இருவரும் ஆடிய விதத்தைப் பார்க்கும் போது மற்றவர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்கும் அளவுக்கு இருந்தது. ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் ஃபின்ச் 6 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்தக்கூட்டணியை பிரிக்க முடியவில்லை. இருவரும் சதத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தனர்.  95 ரன்கள் எடுத்த நிலையில்  ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ரோஹித் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து கே.எல்.ராகுல் - தவான் இணைந்தனர். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய தவான் தனது 16-வது சதத்தை பூர்த்தி செய்தார்.


சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 143 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இந்தத்தொடரில் இரண்டு சதங்களை விளாசியுள்ள கோலி இன்றைய போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்காததால் இந்திய ஆணி 50 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை எடுத்தது. இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக தவான் 143 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.