Published:Updated:

``எனக்கு மட்டுமா... பிக்பாஸில் இருந்த எல்லோருக்குமே மனஅழுத்தம்தான்!’’ - காயத்ரி ரகுராம் #LetsRelieveStress

எல்லோருக்கும் ப்ளஸ், மைனஸ் இருக்கும். அதனால், அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுள் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார் என்று விமர்சனங்களையெல்லாம் கடந்துபோய்விடுவேன்!

``எனக்கு மட்டுமா... பிக்பாஸில் இருந்த  எல்லோருக்குமே மனஅழுத்தம்தான்!’’ - காயத்ரி ரகுராம் #LetsRelieveStress
``எனக்கு மட்டுமா... பிக்பாஸில் இருந்த எல்லோருக்குமே மனஅழுத்தம்தான்!’’ - காயத்ரி ரகுராம் #LetsRelieveStress

மிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடன இயக்குநர் ரகுராம். நூற்றுக்கணக்கான படங்களுக்கு நடனம் அமைத்தவர். அவரின் மகள் காயத்ரி ரகுராம் நடன இயக்குநர், நடிகை, இயக்குநர் என பன்முகங்களைக் கொண்டவர். மன அழுத்தம் தரும் தருணங்களை காயத்ரி ரகுராம் எப்படி எதிர்கொள்கிறார்..? சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கேட்டோம். 

``பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது வீட்டுப்பாடம் கொடுத்தாலோ, தேர்வு வந்தாலோ மனஅழுத்தம் வந்துவிடும். பல வருடங்களுக்குப் பிறகு, அந்த நேரத்தில் அவ்வளவு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கத் தேவையில்லை என்று தோன்றியது. அப்போது அப்படியெல்லாம் இருந்ததை நினைத்து, சிரிக்கவும் செய்திருக்கிறேன். சிறு வயதில் நாம் எதற்கெல்லாம் அழுதோமோ அதுவெல்லாம் இப்போது சிரிப்பாக மாறியிருக்கிறது. ஆனால், அப்போது எதுவெல்லாம் சிரிப்பாக இருந்ததோ அது இப்போது அழுகையாகத் தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிற பாடம்!

என்னைப் பொறுத்தவரை எந்தவொரு விஷயத்தையும் அந்தந்த நேரத்தில் எதிர்கொண்டுவிடுவதே சரியானது. என்னுடைய வாழ்க்கையில் அதைத்தான் கடைப்பிடிக்கிறேன். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன். மனதில் பட்டதை முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுவேன். எதையும் மனதுக்குள் வைத்துக்கொண்டிருந்தால்தான் அது நமக்கு அழுத்தம் கொடுக்கும். 

படங்களில் நடிக்கும்போதும், நடன இயக்குநராகப் பணியாற்றும்போதும் மனஅழுத்தம் வந்திருக்கிறது. அந்த மாதிரியான சமயங்களில் எல்லாம் இசையை நாடிச் செல்வேன். என் வீட்டிலிருக்கும் கிருஷ்ணர் சிலையோடு பேசிக்கொண்டிருப்பேன். அவர் காது கொடுத்துக் கேட்கிறாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அவரிடம் என் துக்கங்களைச் சொல்வேன். அதற்கு அடுத்தபடியாக என்னுடைய செல்ல நாய்க்குட்டிகளோடு விளையாடுவேன். விருப்பமான படங்களை டிவிடியில் போட்டுப் பார்ப்பேன்.

பிக்பாஸ் (சீஸன் 1) நிகழ்ச்சியில் பங்கேற்று, 60 நாள்கள் அங்கே இருந்தேன். ஒரு நாளில் சுமார் இரண்டு மணி நேரம் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதையே எல்லோரும் மறந்துவிடுவோம். பேசி, சிரித்து, சந்தோஷமாகத்தான் இருப்போம். பிறகு, அன்றைய டாஸ்க்கில் பங்கேற்கும்போதுதான் பிரச்னை ஆரம்பித்துவிடும். எதற்காக இந்த வீட்டுக்கு வந்திருக்கிறோம்... இந்தப் பப்ளிசிட்டி நமக்குத் தேவையா... என்றெல்லாம்கூடத் தோன்றும். நான் மட்டுமில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்லோருமே மனஅழுத்தத்தில் சிக்கினோம்.

சில நேரங்களில் தனிமையை உணர்வேன். அந்த வீட்டில் பாட்டு கேட்கவோ, படம் பார்க்கவோ முடியாது. டாஸ்க்கின்போது யாருடனாவது பேசினால் சண்டைதான் வரும் என்பதால், பேசவும் முடியாது. அங்கே இருந்த எல்லோருடனும் ஏற்கெனவே அறிமுகம் இருந்தாலும் ஒரே வீட்டில் தங்கியதில்லை. எப்படி ஹாஸ்டலில் தங்கியிருக்கும்போது நண்பர்களுக்குள் சண்டையில்லாமல் இருக்காதோ அப்படிதான் பிக்பாஸ் வீட்டிலும் நடந்தது. அது போட்டி சார்ந்து மட்டுமே. ஆனால், இப்போது அப்படியில்லை. எல்லோருமே நட்போடுதான் இருக்கிறோம். 

ஒரு ரிலேஷன்ஷிப்பில் அன்பு, கோபம், புரிந்துகொள்வதற்கான நேரம், லைப் ஸ்டைல் என எல்லாமும் முக்கியம். ஜாலியாக இருப்பது மட்டுமே ரிலேஷன்ஷிப் கிடையாது. ஆனால், அதற்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வேண்டும். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதற்கு நேரமில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் யாரெல்லாம் விட்டுக்கொடுத்துப்போகிறார்கள்... யாரெல்லாம் வம்பிழுக்கிறார்கள்... யார் சிறந்தவர் என்பதே அந்த நிகழ்ச்சியின் கட்டமைப்பாக இருந்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை 24 மணி நேரத்திலிருந்து எடிட் செய்யப்பட்ட ஒன்றரை மணி வீடியோவைத்தான் மக்கள் பார்த்தார்கள். அதனால், `அந்த ஒன்றரைமணி நேரம்தான் நான்’ என்று எடுத்துக்கொள்வது சரியாக இருக்காது. அந்த நிகழ்ச்சியை ஒரு படம் போலவே ட்ரீட் பண்ணிவிட்டார்கள். எப்படி ஒரு படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், நகைச்சுவை பாத்திரங்கள் இடம்பெறுமோ... அப்படியே சித்திரித்தார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சியை மக்கள் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளாமல், சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள். ஆனால், உண்மை என்ன என்பது அதில் பங்கேற்ற எல்லோருக்குமே தெரியும்.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் எளிதாகவே எடுத்துக்கொள்வேன். கோபம்தான் கொஞ்சம் ஜாஸ்தி. என்னுடைய மனசுக்கு ஒரு விஷயம் தப்பு என்றால், அதைத் தட்டிக்கேட்கத் தயங்க மாட்டேன். ஆனால், அதை சோஷியல் மீடியாவில் நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய இயல்பு  தெரியாது. எனவே, அந்த விமர்சனங்களைப் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வரும். எல்லோருக்கும் ப்ளஸ், மைனஸ் இருக்கும். அதனால், அவற்றையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுள் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார் என்று விமர்சனங்களையெல்லாம் கடந்துபோய்விடுவேன்!

என்னுடைய மனஅழுத்தங்கள் பற்றி என் அம்மாவோடுதான் பகிர்ந்துகொள்வேன். சென்னையிலும் வெளிநாட்டிலும் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. இருந்தாலும், என்னுடைய பிரச்னைகளை என் அம்மாவைத் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. என் நிலைமையை அம்மா புரிந்துகொண்டு, சரியான ஆலோசனையை வழங்குவார். என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் என் அம்மாதான்!

பொதுவாக, ஒருவருக்கு மனஅழுத்தம் அதிகமாக இருந்தால் உடல் இறுக்கமாகிவிடும். எனவே, உடலை இலகுவாக்கிக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, உடலிலிருந்து வியர்வை வெளியேறும். வியர்வை வெளியேறினாலே, உடலிலுள்ள எதிர்மறையான விஷயங்களும் வெளியேறிவிடும். நான் உடற்பயிற்சியை டான்ஸ் பார்மில் பண்ணுவேன். அதேபோல, நடைப்பயிற்சி, யோகா எல்லாமே மனஅழுத்தத்துக்கு ஓர் அருமருந்து. எப்போதும் விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள். அதுவே வெற்றிக்கான வழி... அதைத்தான் நானும் பின்பற்றுகிறேன்” என்று விடைகொடுத்தார் காயத்ரி ரகுராம்.