Published:Updated:

“உயிரை மீட்டெடுக்கும்போது கிடைக்கும் நிறைவு விலை மதிக்க முடியாதது!” - மருத்துவர் எஸ்.தணிகாசலம்

“உயிரை மீட்டெடுக்கும்போது கிடைக்கும் நிறைவு விலை மதிக்க முடியாதது!” - மருத்துவர் எஸ்.தணிகாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
“உயிரை மீட்டெடுக்கும்போது கிடைக்கும் நிறைவு விலை மதிக்க முடியாதது!” - மருத்துவர் எஸ்.தணிகாசலம்

உடலுக்கும் தொழிலுக்கும் - 12தேசிய மருத்துவர்கள் தினம் - ஜூலை, 01

ருத்துவம் என்பது தொழில் அல்ல, சேவை; மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து சேவை செய்கிறார்கள். மருத்துவப் பணிக்கு நேரமில்லை, காலமில்லை. நோயின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஒருவர், மருத்துவரைத் தன் உயிரை மீட்கவந்த கடவுளாகப் பார்க்கிறார். `நாம் நலமுடன் வாழ வேண்டும் என்று பணியாற்றும் மருத்துவர்களின் நலன் எப்படி இருக்கிறது?’ நம் சிந்தனையில் எப்போதும் உதிக்காத கேள்வி இது. ஜூலை 1, ‘தேசிய மருத்துவர்கள் தினம்.’ அதையொட்டி, மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அறிய, இந்தியாவின் முன்னணி இதயவியல் மருத்துவர் எஸ்.தணிகாசலத்தைச் சந்தித்தோம்.

“உயிரை மீட்டெடுக்கும்போது கிடைக்கும் நிறைவு விலை மதிக்க முடியாதது!” - மருத்துவர் எஸ்.தணிகாசலம்

இவர், ராஜாஜி, பெரியார் போன்ற பெரும் தலைவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவக்குழுவில் இடம்பெற்றவர். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 40 ஆண்டுக்காலம் மருத்துவம் பார்த்தவர். நடிகர் ரஜினிகாந்த் உட்பட  திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் நெருக்கமானவர். பிரபலங்களின் மருத்துவராக இருந்தாலும், கால் நூற்றாண்டுக் காலம் அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்குத் தொண்டாற்றியவர். இதய சிகிச்சையில் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தியவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“உயிரை மீட்டெடுக்கும்போது கிடைக்கும் நிறைவு விலை மதிக்க முடியாதது!” - மருத்துவர் எஸ்.தணிகாசலம்இன்று, பிரபல மருத்துவர்களாக விளங்கும் பலர், தணிகாசலத்தின் மாணவர்கள். மத்திய அரசின் பத்மஸ்ரீ, இந்தியாவில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பி.சி.ராய்  விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் சென்னை, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான முதல்வராகவும் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நிர்வாகப் பணி வேண்டாம் என உதறிவிட்டு, மீண்டும் அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சை மைய இயக்குநராகவும் கௌரவப் பேராசிரியராகவும் பணியாற்றிவருகிறார். 52 ஆண்டுகளாக அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார் இந்த மாமனிதர்.

“வடசென்னை மின்ட் பகுதியில்தான் பிறந்து, வளர்ந்தேன். என் குடும்பத்தில் முதல் ஆண் பிள்ளை நான். பிறந்தபோது அசைவின்றி இருந்தேனாம். என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோரும் வருத்தத்துடன் இருந்தபோது, திருத்தணியிலிருந்து வந்திருந்த என் தாத்தா `திருத்தணி முருகா...’ என்று சத்தமாகக் கூப்பிட்டபடி என்னை மூன்று முறை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்திருக்கிறார். மூன்றாவது முறை பிடிக்கும்போது நான் கதறி அழுதுவிட்டேனாம். அன்றைக்கே என் தாத்தா, முருகனின் பெயரான தணிகாசலத்தை எனக்கு வைப்பதென்று முடிவுசெய்துவிட்டார்’’ என்று பெயர்க் காரணத்துடன் பேச ஆரம்பிக்கிறார் தணிகாசலம்.

“என் குடும்பத்தில் எல்லோரும் சொந்தத் தொழில் செய்தார்கள். வீட்டுக்கு எதிரில் ராஜரத்தினம் என்ற உறவினர் இருந்தார். அவர் ஒரு மருத்துவர். அவரின் மகன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அவர் சாலையில் நடந்து செல்லும்போதெல்லாம் என் தாத்தா ‘அவரைப்போல் நீயும் டாக்டராக வேண்டும்’ என்பார். சிறு வயதில் நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், என் தாத்தாவும் பாட்டியும் முதுமையால் நோய்வாய்ப்பட்டார்கள். `இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்னை டாக்டராகுமாறு தாத்தா சொல்லியிருப்பாரோ’ என்று தோன்றியது. என்னையும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது. 

பள்ளித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தேன். அந்தக் காலத்தில் ஆய்வு முறைகள் தொழில்நுட்பரீதியாக இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கவில்லை. பிரேதப் பரிசோதனை செய்ய உடல் கிடைக்காது. அதனால் எந்த நோயாளியாவது உயிரிழந்துவிடுவார் என்று தெரிந்தவுடன் பத்து நாள்கள் இரவு, பகலாக மருத்துவமனையிலேயே தங்கியிருப்பேன். உறவினர்களிடம், ‘உங்கள் அப்பா பிழைப்பதே கஷ்டம்’ என்று முன்னதாகவே தெரிவித்து, அந்த இழப்பைத் தாங்க மனதளவில் தைரியம் கொடுத்துக்கொண்டே இருப்பேன். அப்படிச் செய்யும்போது இறுதிக்கட்டத்தில் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுமதி கேட்கும்போது, ‘அதனால் என்ன டாக்டர்... தாராளமா செய்யுங்க’ என்பார்கள். இதுபோல ஒவ்வொரு சிரமத்தையும் கடந்து எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றேன்.

எம்.பி.பி.எஸ் முடித்ததும், உடன் படித்தவர்கள் மருத்துவம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.  நான் எம்.டி பொது மருத்துவம் படித்தேன். அப்போது இரண்டு இதயவியல் பேராசிரியர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் மருத்துவர்கள், நோயாளிகள் மத்தியில் கிடைத்த மரியாதை என்னை ஈர்த்தது. அதனால் நானும் இதயநோய் நிபுணராக வேண்டும் என்று நினைத்தேன்.என் தாத்தா, பாட்டிக்கு என்னால் சிகிச்சை அளிக்க முடியும். மற்ற உறுப்புகளைவிட, இதயக் கோளாறுகளைச் சரிசெய்துவிட்டால், நோயாளியை மீட்டெடுத்துவிட முடியும் என்று தோன்றியது.

எம்.டி முடித்ததும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் வகுப்பெடுத்தேன். பிறகு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றேன். அது, பெண்கள் மட்டுமே படிக்கும் மருத்துவக் கல்லூரியாக அப்போது இருந்தது. காலையில் வகுப்பெடுப்பேன், இரவில் நோயாளிகளைப் பார்ப்பேன். என் மாணவிகள், `உங்கள் குறிக்கோள் என்ன?’ என்று கேட்பார்கள். `இதயநோய் நிபுணராக வேண்டும்’ என்பேன். ‘அந்தப் படிப்பு வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி, டெல்லி போன்ற ஓரிரு இடங்களில்தாம் இருக்கிறது. அகில இந்திய அளவில் தேர்வுசெய்வார்கள். படிக்க ஆர்வம் இருந்தாலும் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை’ என்பேன். ஆனால் என் மாணவிகள், என்னை எப்படியாவது இதயநோய் மருத்துவம் படிக்கவைத்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்கள்.

எனக்குத் தெரியாமலேயே மாணவிகள் சிலர் வேலூர் சி.எம்.சி-க்குப் போய் விண்ணப்பப் படிவம் வாங்கி வந்தார்கள். ஒருநாள், வார்டில் நோயாளிகளைப் பார்த்துவிட்டு என் அறைக்குச் சென்றேன். அங்கு ‘With love and affection’ என்று எழுதி ஓர் உறை இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தால், விண்ணப்பப் படிவம். நான் மிகவும் நெகிழ்ந்த தருணம் அது. படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு அந்த மாணவிகளே அதை எடுத்துச் சென்று கல்லூரியில் சமர்ப்பித்தார்கள். நேர்காணலில் நான் தேர்வுசெய்யப்பட்டேன். டி.எம் (Doctorate of Medicine) படிக்க இடமும் கிடைத்தது. 

“உயிரை மீட்டெடுக்கும்போது கிடைக்கும் நிறைவு விலை மதிக்க முடியாதது!” - மருத்துவர் எஸ்.தணிகாசலம்

வேலூரில் படிக்கும் நேரத்தில் ஐந்து மணி நேரம்தான் என் குடியிருப்பில் இருக்க முடியும். 19 மணி நேரம் படிப்பு, மருத்துவமனை என்று ஓடிக்கொண்டே இருப்பேன். வார்டில் நான் மட்டும்தான் பணியில் இருப்பேன். வேலைப்பளு அதிகம்; நிறைய நோயாளிகளைப் பார்க்க வேண்டியிருக்கும், அதன் மூலம் அதிக அனுபவங்களைப் பெற முடியும் என்று நினைப்பேன். அங்கு என்னைவிட மூத்தவர்கள், அனுபவசாலிகள் இருந்தும், நான் மட்டுமே தேர்ச்சி பெற்றேன்; கடின உழைப்பின் பலன் அது. சி.எம்.சி.யில் மூன்றாண்டுகள் படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினேன்.

அதன் பிறகு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 18 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது நானும், என் சக மருத்துவர்களும் சேர்ந்து முதன்முதலில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மையத்தை நிறுவினோம். கருத்து வேறுபாடு காரணமாக நான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல நேர்ந்தது. மனநிறைவோடு என் அரசுப் பணியை நிறைவுசெய்தேன். பிறகு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு வந்தேன். வரும் ஆகஸ்ட் மாதத்துடன் இந்தக் கல்லூரியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். மருத்துவராக ஒரு நோயாளியைக் காப்பாற்றும்போது மனநிறைவு கிடைக்கும். இறக்கும்தறுவாயிலிருக்கும் ஒருவரின் நாடித்துடிப்பை மீட்டெடுத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, குணமாக்குவது மிகப்பெரிய நிம்மதியைத் தரும். அந்த நிறைவு எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது” என்றார்.

நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்!

ஒரு மருத்துவர், தன் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி  என்பதையும் அவரே கூறுகிறார்.


‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் இஸ்ரோ விஞ்ஞானிகள்வரை எல்லோருக்கும் ஒரு நாளென்பது 24 மணி நேரம்தான்.  வேலைகளையும் குடும்பத்துக்குச் செலவழிக்கும் நேரத்தையும் பகுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வீட்டிலும் பணியிடத்திலும் அமைதி இருக்கும். சாப்பாடு, தூக்கம் என அனைத்துக்கும் நேரம் ஒதுக்கி ஆரோக்கியமாக இருக்க முடியும்.

இப்போது வரும் நோயாளிகள் இணையத்தில் அனைத்தையும் தெரிந்துகொண்டு வருகிறார்கள். மருத்துவரிடமே நோயைப் பற்றி, சிகிச்சையைப் பற்றி விவாதிக்கிறார்கள். இதற்கு மருத்துவர்கள் கோபப்படக் கூடாது. மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும். `நோயாளிக்கு நோயைப் பற்றித் தெரிந்திருந்தால், அவருக்கு சிகிச்சை அளிப்பது சுலபம்’ என்று நினைக்க வேண்டும். சிகிச்சை பயனளிக்காமல் ஒரு நோயாளி இறந்துவிட்டால்கூட, அதைப் பொறுமையாக உறவினர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அது போன்ற நேரங்களில் மருத்துவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மருத்துவர்கள் மன அழுத்தம் இல்லாமல் ரிலாக்ஸ்டாக இருப்பது என்பது மனம் சார்ந்த விஷயம்தான். நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நோயாளியிடம் ஹாஸ்யத்துடன் பேசினால், அவருக்கும் இலகுவாக இருக்கும்; மருத்துவருக்கும் அழுத்தம் ஏற்படாமலிருக்கும். ஒரு வேலையைச் செய்யும்போதே அழுத்தம் இல்லாமல் ரசித்துச் செய்தால், மன அமைதிக்காக ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போகத் தேவையில்லை.

மருத்துவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரலாம், மாரடைப்பு வரலாம். அதனால் அவர்களும் தங்கள் உடல்நிலையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். நான் மாதந்தோறும் சர்க்கரைநோய் இருக்கிறதா, கொலஸ்ட்ரால் இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்கிறேன். ரத்த அழுத்தத்தையும் கண்காணித்துவருகிறேன். இவற்றை எல்லா மருத்துவர்களும் பின்பற்ற வேண்டும்.’’

வந்தனை செய்வோம்...

“உயிரை மீட்டெடுக்கும்போது கிடைக்கும் நிறைவு விலை மதிக்க முடியாதது!” - மருத்துவர் எஸ்.தணிகாசலம்

ஜெனி ஃப்ரீடா -  படங்கள்:  சொ.பாலசுப்ரமணியன்