Published:Updated:

மீண்டு வரும் புதுக்கோட்டை மக்கள்! - கஜா புயலுக்குப் பிந்தைய கதை

மீண்டு வரும் புதுக்கோட்டை மக்கள்! - கஜா புயலுக்குப் பிந்தைய கதை
மீண்டு வரும் புதுக்கோட்டை மக்கள்! - கஜா புயலுக்குப் பிந்தைய கதை

டல்சார் பகுதிகளை மட்டுமே தாக்கும் புயல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு டெல்டா மாவட்டங்களை, தன் இலக்காக்கிக் கடுமையான சேதத்தை ஏற்படுத்திச் சென்றது கஜா புயல். அந்தப் புயல் பாதிப்பைக் கடந்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அதிலிருந்து முழுவதுமாக மீண்டு வர இயலவில்லை.

விவசாயத்தை மட்டுமே பெரிதும் நம்பிய மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை ஆகியன வறட்சியின் பிடியில் ஏற்கெனவே உழன்று கொண்டிருந்த சூழலில் கஜா புயலின் தாக்கம், பேரிடியாக அந்த மாவட்ட மக்களின் மீது இறங்கியது. புயலின்போது தங்கள் வாழ்விடங்களிலேயே அவர்கள் அகதிகளாக்கப்பட்டனர். 

தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னார்வத்துடன் உதவி செய்ய இணைந்தவர்களால் மட்டுமே ஓரளவுக்காவது புயல் பாதிப்புகளிலிருந்து மீட்பு சாத்தியமானது. புயல் தாக்கத்தைத் தொடர்ந்து, அளிக்கப்பட்ட நிவாரணம் அப்போதைக்கான தீர்வாக மட்டுமே இருக்க முடியும். அந்தப் பகுதி மக்களின் மறுவாழ்வாதாரத்திற்கான முன்னெடுப்புகள் இன்னமும் தேவையாக உள்ளன.

டெல்டா மறுகட்டமைப்புக் குழுவும், கிரீன் விஷ் பவுண்டேசன் அமைப்பும் இணைந்து, கஜா புயலில் பாதிப்படைந்தவர்களுக்கான நிரந்தரத் தீர்வை நோக்கிய பயணத்தில் முதல் அடியை `தடம்’ என்ற பெயரில் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொழிற்பயிற்சி அளித்து அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைக்கும் முயற்சியாக அது இருக்கும். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மூலிகை பல்பொடி, குளியல்பொடி, துணி துவைக்கும் பொடி, வழலை (சோப்) தயாரித்தல், வலி நிவாரண தைலம், மூலிகை எண்ணெய், சுக்கு மல்லி பொடி, தேநீர் தூள், குங்குமம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரிப்பதற்கான பயிற்சியை முதற்கட்டமாக அளித்துள்ளனர்.

மகளிர் தினத்தில் முதல் உற்பத்தியைத் தொடங்கியிருந்த பெண்கள் உற்சாகமாக நம்மிடம் பேசத் தொடங்கினர். மூலிகை குளியல் பொடியை பாட்டிலில் அடைத்தவாறே அந்த கிராமத்தைச் சேர்ந்த பூமலர் பேசினார், ``கஜா புயலுக்கு முன்னாடி விவசாயக் கூலிகளாக வேலை பார்த்துட்டு இருந்தோம். புயலால் விவசாயப் பயிர்கள் எல்லாம் மொத்தமா அழிஞ்சுடுச்சு. எங்களோட வீடுகளின் கூரைகள் சேதமாகிருச்சு. புயல் முடிஞ்ச பிறகு எங்களுக்கான வேலை எதுவும் இல்லாமல் தவிச்சப்போ, உங்களுக்குக் கத்துக் கொடுக்கிறோம், வேலை செய்றீங்களான்னு கேட்டு வந்தாங்க. அந்தப் பயிற்சியில கிட்டத்தட்ட 50 பேர் கலந்துகிட்டோம்" என்றார்.

பூமலர் பேசிக் கொண்டிருக்கும்போதே, அதே ஊரைச் சேர்ந்த ராசாம்பாள் தொடர்கிறார், ``மூலிகைக் குளியல் பொடி, பல் பொடி எப்படிச் செய்றது, அவற்றுக்கு எந்தெந்தப் பொருள்களைப் பயன்படுத்துறது, எந்தளவில் கலக்க வேண்டும் என்பன போன்ற பயிற்சிகளை எங்களுக்குக் கொடுத்தனர். நிவாரணப் பொருள்களை மட்டும் கொடுத்துவிட்டுச் செல்லாமல் எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்காங்க. எங்களோட உழைப்பில் நாங்க வாழுறது, ரொம்பவே பெருமையா இருக்கு” என்றார்.

பெரியநாயகி கூறுகையில், ``யாரோட உதவியும் இல்லாம பெண்களாலும் தனியாகச் சாதிக்க முடியும். நாங்க தயாரிக்கிற பொருள்களுக்கான மூலப் பொருளையும் நாங்களே விளைவிக்கிறோம். இப்போதான் குழி எடுத்துக் கன்று ஊன்றி இருக்கிறோம்” எனச் சில மூலிகைச் செடிகளைக் காட்டினார்.

பயிற்சியளிக்கும் அமைப்பின் நிர்வாகி பிரபா செல்வத்திடம் பேசினோம், ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை கொடுப்பதில்தான் எங்க பணி ஆரம்பிச்சுச்சு. ஆனா, அது அப்போதைக்கான ரீலிஃப் ஆகதான் இருக்கும். நிரந்தரத் தீர்வுக்கு மறு கட்டமைப்பு அவசியமாக இருந்தது. எங்க அமைப்போட நிறுவனர் அம்மு ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரன் மற்றும் சிலருடன் சேர்ந்து இந்தப் பணியைத்  தொடங்கியிருக்கிறோம். இந்தக் கிராமத்தோடு நிற்காம பாதிக்கப்பட்ட கிராமங்கள் அனைத்திற்கும் இத்தகைய பயிற்சிகள் சென்று சேர வேண்டும். எங்களைப் போன்றவர்களால் சில பகுதிகளுக்கு மட்டுமே இதைக் கொண்டு செல்ல இயலும். அரசோட பங்களிப்பு இருந்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் உதவியா இருக்கும்” என்றார்.

டெல்டா மறுக்கட்டமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரனிடம் பேசியபோது, ``என்னோட சொந்த ஊரு புதுக்கோட்டை. புயலுக்கு முன்னாடிவரைக்கும் பண்டிகைகளுக்கு மட்டும் வந்து போறவனாத்தான் இருந்தேன். கஜா புயலின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம். மக்களிடம் தொடர்ச்சியாகப் பேசும்போதுதான், அவர்களுக்கான வேலை தேவையாக இருந்ததை உணரமுடிஞ்சுது. ஆர்வத்தோட இருந்த ஐந்து கிராமங்களில் முதற்கட்டமா ஒரு ஊரில் மட்டும் ஆரம்பிச்சு இருக்கோம். இதைப் பார்த்து மற்ற கிராமங்களிலும் சிறுசிறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது எங்க ஆசையாக இருக்குது. இந்த மக்கள் உற்பத்தி

செய்கிற பொருள்களை தடம் என்கிற செயலியின் மூலமாகவும், சென்னையில் சில கடைகளில் நேரடியாகவும் விற்பனை செய்றோம். மூலிகை சார்ந்த பொருள்கள் மட்டுமல்லாமல் வாழை மட்டையில் கூடை முடைதல் போன்ற கைவினைப் பொருள்கள் செய்வதற்கும் பயிற்சியளிக்கிறோம். அவர்களுக்கான மாற்று வாழ்வாதாரமாக இது அமையும்” என்றார்.

இறுதியாகப் புறப்படும்போது பூமலர் கூறிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, ``கஷ்டப்படுற நேரத்தில் தொழில் செய்ய கற்றுக்கொடுத்த இவங்கள எங்க குல தெய்வம்னே சொல்லலாம்யா” என்றார். அவர்களின் கண்களில் கஜா பாதிப்பிலிருந்து கடந்துவிட்ட நம்பிக்கையை மீண்டும் உணர முடிந்தது.

மீன் பிடித்துக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே அதிக பயன்தரும். அதுபோன்று `தடம்’ பதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துகள்.