Published:Updated:

மிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்!

மிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்!

உதய்க்கு பதவி... மா.செ-க்கள் மாற்றம்... சபாநாயகருக்கு செக்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற ஒற்றை வரியை மட்டும் வாட்ஸ் அப்பில் அனுப்பிய கழுகார் அடுத்த அரைமணி நேரத்தில் வருவதாகத் தகவலை அனுப்பினார். சொன்னதுபோலவே ஆஜரான கழுகாரிடம், “என்ன ஒரே நாடு... ஒரே தேர்தல் என்ற தகவல் மட்டும் அனுப்பியுள்ளீரே?”

மிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்!

“வரிசையாகச் சொல்கிறேன், கேளும். முதல்வர் டெல்லி பயணம் சென்றிருந்தார் அல்லவா, அந்தப் பயணத்தைக் குறிப்பெடுக்கச் சென்றிருந்தேன். முதல்வருடன் துணை முதல்வரும் டெல்லி செல்வார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வருக்கு மட்டுமே ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொள்ள பாஸ் வழங்கப்பட்டதால், துணை முதல்வரின் பயணம் தவிர்க்கப் பட்டதாம். இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்களைச் சந்தித்துள்ளார் எடப்பாடி.”

“என்ன பேசப்பட்டதாம்?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்!“முழுமையான விவரங்களை முதல்வர் தரப்பில் வெளியிடவில்லை. ஆனால், தமிழக அரசியல் நிலவரம் குறித்து சில விவரங்களை மட்டும் கோடிட்டுக் காட்டியுள்ளார் எடப்பாடி. அமித் ஷாவிடம் உள்கட்சிப் பிரச்னை பற்றி ஏற்கெனவே வேலுமணி, தங்கமணி சொல்லிவிட்டதால் முதல்வர் அதுகுறித்துப் பெரிதாக விவரிக்கவில்லை. ஆனால், ‘பி.ஜே.பி-க்கு அனுகூலமாக இருப்போம்’ என்பதை மட்டும் மறக்காமல் சொல்லிவிட்டு வந்துள்ளார்.”

“ஒரே நாடு... ஒரே தேர்தல் என்று சொன்னீரே?”

“ஆம், ஜூன் 19-ம் தேதி மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. அப்போது ஐந்து முக்கிய விஷயங்கள்குறித்துப் பேச உள்ளார்கள். அதில் பிரதானமாக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாம். இதற்கு மாநிலக் கட்சிகள் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்று தெரிய வில்லை. இப்படித் தேர்தல் நடந்தால், அது ஒரு கட்சி சார்பாகச் சென்றுவிடுமோ என்கிற அச்சம் பிராந்தியக் கட்சிகளிடம் உள்ளது.” 

மிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்!

“எதற்காக இந்தத் திடீர் முடிவாம்?”

“பி.ஜே.பி-யின் நீண்டகால கனவு இது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், அது தங்களுக்குச் சாதமாக இருக்கும் என்று அமித் ஷா - மோடி நினைக்கிறார்கள். ஐந்து மாநில தேர்தலில் பி.ஜே.பி தோல்வி அடைந்த பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெறவில்லையா? அதைப்போல் மாநிலங்களிலும் பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்றால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யுக்தி கை கொடுக்கும் என்று நினைக்கிறார்கள். தவிர, எதிர்காலத்தில் தங்களது ‘ஒரே கட்சி... ஒரே தேசம்... ஒரு மொழி... ஒரே கொள்கை’ அஜெண்டாவுக்கும் இந்தத் திட்டம் அடித்தளமாக இருக்கும் என்கிற எண்ணமும் அவர்களிடம் உள்ளது.”

“அச்சச்சோ!”

“ம்! இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வேறு தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட காங்கிரஸ் கட்சி பெற முடியாது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்கள். இந்தக் கூட்டத்தொடரிலே பி.ஜே.பி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடப்போகிறது.”

“சிங்கப்பூர் பயணம் சென்றுள்ளாரே ஸ்டாலின்?”

“குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணம் என்று சொல்லப்பட்டாலும் சிங்கப்பூர் பயணத்துக்குப் பின்னால் பல சீக்ரெட் விஷயங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்கள். மகன் உதயநிதி, மகள் செந்தாமரை குடும்பத்தினருடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். ஒரு வாரம் பயணம் முடிந்து ஜூன் 19-ம் தேதி சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பிய பின் தி.மு.க-வில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.”

“என்னவாம்?”

“நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க அபார வெற்றிபெற்றாலும் ‘தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் கோட்டைவிட்டதுதான்’ என்கிற வருத்தம் ஸ்டாலின் மனதில் நீங்காத வடுவாகப் பதிந்துவிட்டது. என்னதான் சமாதானங்களைச் சொன்னாலும் தோல்விக்கான காரணங்களை முழுமையாக அறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். சிங்கப்பூர் போகும் முன்பே இதுகுறித்து கட்சியின் சீனியர்களிடம் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, ‘தென் மாவட்டங்களில் எதனால் தி.மு.க வீழ்ந்தது?’ என்பது குறித்து ஸ்டாலின் பலரிடமும் விசாரித்துள்ளார். விளாத்திகுளம் மற்றும் சாத்தூரில் தி.மு.க தோல்வி அடைந்ததற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர், கீதாஜீவன் உள்ளிட்ட சிலர்மீது புகார் வாசித்துள்ளார்கள். அதேபோல், நிலக்கோட்டை தொகுதியைக் கோட்டைவிட்டதிலும் ஐ.பெரியசாமி தலை உருள்கிறது. ‘உங்களிடம் இருந்த நெருக்கம் காரணமாக சோளிங்கர் தொகுதியை வேலூர் மாவட்டச் செயலாளரான ராணிப்பேட்டை காந்தி கண்டுகொள்ளவில்லை’ என்று புகார் வாசித்துள்ளார்கள்.”

“ம்!”

“இதற்குப் பிறகுதான் சிங்கப்பூர் கிளம்பும்போது ஒன்பது தொகுதிகள் தோல்வி குறித்து விசாரிக்க தனிக்குழுவை அமைக்க முடிவு செய்தார் ஸ்டாலின். இதற்கான அறிவிப்பு, அவர் சிங்கப்பூரில் இருக்கும்போதே வெளியானது.” 

“கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்லும்...”

“வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்... இந்தக் குழுவுக்கும் தி.மு.க நிர்வாகிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் ஸ்டாலின். இதில் நான்கு எம்.எல்.ஏ-க்கள், நான்கு வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவருமே ஜூனியர் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணமாம். உதாரணமாக, நிலக்கோட்டை தொகுதியை விசாரிக்கும் பொறுப்பு எம்.எல்.ஏ கருணாநிதிக்கும் வழக்கறிஞர் அருணுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகுதியின் மாவட்டச் செயலாளர் ஐ.பெரியசாமி. சீனியரான இவரிடம் இந்த இருவரும் என்ன விசாரித்துவிட முடியும்? இவர்கள் பெரியசாமியை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா? அதனால், கட்சியில் சீனியர்களை வைத்து விசாரித்தால்தானே இதற்கு முடிவு கிடைக்கும் என்ற குரல்கள் மேலோங்கியுள்ளன.”

“ஆனால், சீனியர்கள்தான் பழம் தின்று கொட்டை போட்டவர்களாயிற்றே?”

“அதுவும் உண்மைதான். அதற்காகத்தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புதியவர்கள் விசாரணையின் முடிவில் சொல்லும் கருத்தைக் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டுமே. 2014-ம் ஆண்டு தேர்தல் தோல்வியை ஆராய ஒரு குழுவை அமைத்தார் கருணாநிதி. அந்தக் குழு அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று விசாரித்து ஓர் அறிக்கையை அளித்தது. அதில், ‘வாரிசுகளுக்கு சீட் என்கிற நிலையை மாற்ற வேண்டும்’ என்று சொல்லியிருந்தார்கள். அப்போது அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார் கருணாநிதி. ஆனால், இப்போதுவரை நிலைமை மாறவில்லையே. இதனால், ‘குழு அமைத்தால் மட்டும் குறையை நிவர்த்தி செய்துவிட முடியாது. தொகுதிக்குச் செல்லும் குழுவைக் கவனிக்கும் பொறுப்பே மாவட்டச் செயலாளர்கள் கையில் உள்ளது. அவர்கள் எப்படிக் கவனித்து அனுப்புவார்கள் என்று தெரியாதா?’ என்று அதிருப்தியுடன் முணுமுணுக்கிறார்கள் உடன்பிறப்புகள்!”

“சரி, நடவடிக்கை எதுவும் இருக்குமா?”

“உறுதியாகச் சொல்வதற்கில்லை... கீதாஜீவன் உள்ளிட்ட நான்கு மாவட்டச் செயலாளர்கள் பதவிக்குப் பங்கம் வரலாம் என்கிறார்கள். விளாத்திகுளம் தொகுதியில்தான் அ.தி.மு.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்குக் காரணம் கீதாஜீவனின் அலட்சியம் என்று பலரும் புகார் சொல்லியுள்ளனர். அதேபோல் தென் மாவட்டத்தில் கோலோச்சும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறாராம். உள்கட்சி சிக்கலில் இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சரிக்கட்ட பதவி பறிப்புச் சம்பவங்கள் அரங்கேறலாம். இந்த முடிவுகள் அனைத்தும் சிங்கப்பூரில் சீக்ரெட்டாக எடுக்கப்பட்டிருக்கின்றனவாம்.”

“உதயநிதிக்கு பதவி என்றார்களே?”

“கேளும்... உதயநிதி விவகாரம்தான் இப்போது கட்சிக்கு உள்ளேயும் குடும்பத்துக்கு உள்ளேயும் பெரிதாக ஓடுகிறது. உதயநிதிக்கு இளைஞர் அணியில் பதவி உறுதியாகிவிட்டது. ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போகிறது. இளைஞர் அணி செயலாளராக இருக்கும் வெள்ளக்கோவில் சுவாமிநாதனிடம் ஒரு மாதத்துக்கு முன்பே இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டார்கள். அவர் ஏற்கெனவே தனது ராஜினாமா கடிதத்தையும் தலைமையிடம் கொடுத்துவிட்டாராம்.”

“பிறகு ஏன் உதயநிதி பதவிகுறித்த அறிவிப்பு வரவில்லை?”

“சில காரணங்களைச் சொல்கிறார்கள். எல்லாமே ஜோதிடம் சம்பந்தப்பட்டவை. ஏற்கெனவே உதயநிதி, ‘ஜோதிடர்கள் கைகாட்டிய தென் திசையான தென்சென்னை தொகுதியிலிருந்து தான் மார்ச் 21-ம் தேதி பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார்’ என்று ஒரு தகவல் ஓடுகிறது. அதே ஜோதிட சென்டிமென்ட்தான் இப்போதும் கூறப்படுகிறது. ‘இப்போது உதய நிதிக்கு நேரம் சரியில்லை; ஒரு மாதத்துக்குப் பதவியேற்பு வைபவத்தைத் தள்ளிவையுங்கள்’ என்று ஒருதரப்பில் சொல்லியிருக் கிறார்களாம். இன்னொரு தரப்பிலோ, `தலைவர் இறந்து ஓராண்டுகூட நிறைவடைய வில்லை... சுபநிகழ்ச்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனாலேயே, உதயநிதியின் பட்டாபிஷேகம் தள்ளிப்போயுள்ளது என்கின்றனர்.’’

“ஓஹோ!”

“எப்படி இருந்தாலும் ஜூலை மாதத்துக்குள் உதயநிதிக்குப் பதவி கிடைத்துவிடும். இனி, உதயநிதியின் பேச்சுகளில் அரசியல் வாடை அதிகம் இருக்கும் என்கிறார்கள். அதற்கான ஆரம்பம்தான் திருச்சியில் அவர் பேசிய கூட்டணி சீட் பங்கீடு குறித்த கறார் பேச்சு.”

“சபரீசனுக்கும் பதவி என்கிறார்களே?”

“இப்போதைக்கு இல்லை. அதிலும், சபரீசனுக்கு ராஜ்ய சபா பதவி என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். அவரும் அதை எதிர்பார்க்கவில்லையாம். ஆனால், மத்திய அரசுடன் தி.மு.க-வை இணக்கமாகக் கொண்டு செல்லும் வேலையைச் சத்தமில்லாமல் செய்துவருகிறது சபரீசன் தரப்பு. தி.மு.க-வின் இரண்டு ராஜ்ய சபா சீட்களில் ஒன்றை சண்முகத்துக்கும் மற்றொன்றைச் சிறுபான்மையினர் தரப்பில் குன்னூர் முபாரக், திண்டுக்கல் பஷீர், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோரில் ஒருவருக்கும் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் களாம்!”

“சட்டமன்றம் விரைவில்கூட இருக்கிறதாமே?”

“நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்காகக் காத்திருந்தார்கள். அது தொடங்கிவிட்டதால் ஜூன் 21-ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் மறைந்த விக்கிரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ-வான ராதாமணி உள்ளிட்ட சிலருக்கான இரங்கல் தீர்மானத்துடன் முதல் நாள் சபை ஒத்திவைக்கப்படலாம். மறுநாள் தி.மு.க தரப்பு சபாநாயகர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இருக்கிறது என்கிறார்கள். இந்தத் தீர்மானம் தோல்வி அடையும் என்று தி.மு.க தரப்புக்குத் தெரிந்துள்ளது. இருந்தாலும் எடப்பாடி அரசுக்கு ஒரு கிலியை ஏற்படுத்த வேண்டும் என்பது தி.மு.க-வின் திட்டமாம்!” 

மிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்!

“ஆளுங்கட்சித் தரப்பு என்ன நினைக்கிறதாம்?”

“இந்தக் கூட்டத்தொடரில் கூடுதல் பலத்துடன் தி.மு.க கலந்துகொள்ள இருப்பதால், அவர்களுக்குச் சட்டமன்றத்தில் மட்டும் நெருக்கடி கொடுத்தால் போதாது; வெளியிலும் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.”

“விளக்கமாகச் சொல்லும்...”

“சில நாள்களுக்கு முன், முதல்வர் வீட்டில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் முக்கிய அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமே, ‘ஸ்டாலின்மீது என்ன வழக்குத் தொடரலாம்?’ என்பதுதானாம். ஏற்கெனவே, சாதிக் பாட்ஷா விவகாரம்குறித்து ஸ்டாலின்மீதும் ராசா மீதும் ஜனாதிபதி வரை புகார் அளிக்கப்பட்டது. அதைவைத்து எதுவும் செய்ய முடியுமா என்று ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அதேபோல், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீதுள்ள புகார்களையும் தூசுதட்ட உத்தரவிடப்பட்டுள்ளதாம்.”

“விடாக்கொண்டனாக இருப்பார் போலிருக்கிறதே எடப்பாடி!”

“இல்லையென்றால் இரண்டு ஆண்டுகள் இந்த ஆட்சியை நகர்த்தியிருக்க முடியுமா? மத்திய அரசு எடப்பாடி ஆட்சியைத் தொடர்ந்து தூக்கிப்பிடித்து வந்தாலும் எடப்பாடி மீது மத்திய அரசுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லையாம். ‘நம்மை மாதம்தோறும் இவர்கள் கவனிக்கும் விதமே... இவர்கள் எப்படிப் புகுந்து விளையாடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது’ என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி சிரிக்கிறார்களாம் டெல்லி மேலிட பி.ஜே.பி-யினர்” என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்!

அட்டைப்படம்: கே.ஜெரோம்

படம்: சு.குமரேசன்

துணை சபாநாயகர்!

நா
டாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவியேற்பைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியேற்பு நடக்க வேண்டும். கடந்த முறை அ.தி.மு.க-வுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது. இந்தமுறை ஐக்கிய ஜனதா தளம் அல்லது பிஜு ஜனதா தளத்துக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறது டெல்லி வட்டாரம்!

பா.ம.க-வுக்கு ராஜ்ய சபா சீட்?

பா
.ம.க-வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என்று தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை அ.தி.மு.க நிறைவேற்றாது என்ற பேச்சு கிளம்பியது. எடப்பாடி பழனிசாமியின் மனநிலையும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்ததாம். ஆனால், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல், வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை மனதில்வைத்து பா.ம.க-வைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம் எடப்பாடி. தவிர ராஜ்யசபா சீட்டுக்காக எடப்பாடி அணியில் தம்பிதுரை, தளவாய் சுந்தரம் ஆகியோரும் பன்னீர்செல்வம் அணியில் நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோரும் மல்லுக்கட்டுகிறார்கள்.

மிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்!

விக்கிரவாண்டியில் யார்?

வி
க்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான ராதாமணி சில நாள்களுக்கு முன் இறந்துபோனார். இதனால், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க-வில் யாருக்கு சீட் என்கிற ரேஸ் இப்போதே தொடங்கிவிட்டது. இங்கு திராவிட தலைவரான ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் பெயர் அடிபடுகிறது. ஆனால், இவருக்கும் மாவட்டச் செயலாளர் பொன்முடிக்கும் ஆகாது. எனவே, பொன்முடி தரப்பில் அவரின் ஆதரவாளர்கள் மூன்று பேர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்!