Published:Updated:

“தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்!” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்!” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி!
“தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்!” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி!

“தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்!” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி!

பிரீமியம் ஸ்டோரி

அ.தி.மு.க-வுடனான கூட்டணி, எதிர்க்கட்சிகளின் நிலை, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி... இப்படி எந்தக் கேள்வியைக் கேட்டாலும் வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன். நாகர்கோவிலில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவரைச் சந்தித்து உரையாடினோம்.

“தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்!” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி!

‘‘மத்திய பி.ஜே.பி அரசின் இரண்டாவது ஐந்தாண்டு செயல்பாடுகள் எப்படி இருக்கும்?’’

‘‘கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வரும் ஐந்து ஆண்டுகளில் உலக அளவில் நம் நாடு மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்து முதல் நிலைக்கு வரும்.’’

‘‘தமிழகத்தில் பி.ஜே.பி-யைப் பலப்படுத்த என்ன மாதிரியான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன?’’

‘‘கட்சித் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவார்கள். அதன் பிறகுதான் மற்ற விஷயங்களை முடிவு செய்வார்கள்.’’

‘‘தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த 37 எம்.பி-க்களும் தங்கள் சொத்தை விற்றாவது விவசாயக் கடன், கல்விக் கடனை அடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறீர்களே?’’

‘‘மூன்று படி அரிசி லட்சியம்... ஒரு படி நிச்சயம் என்றார்கள். ஆனால், ஒரு படி அரிசி கூட தி.மு.க கொடுக்க வில்லை. எது செய்ய முடியுமோ அதை மட்டும் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். இல்லையென்றால், சொத்தை விற்றாவது அதைச் செய்ய வேண்டும். அதனால்தான் அப்படிச் சொன்னேன். நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து உள்ளவர்களும் இருக்கி றார்கள். பலபேர் அந்தச் சொத்தை எப்படிச் சேர்த்தார்கள் என்பதே பெரிய கேள்விக்குறிதான்.’’

‘‘ஆனால், ‘தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு எதுவும் செய்யாது; அதனால் எம்.பி-க்கள் சொத்தை விற்று மக்கள் பணி செய்யட்டும்’ என்கிற அர்த்தத்தில் நீங்கள் பேசியதாகச் சர்ச்சை கிளம்பியிருக்கிறதே?’’

‘‘கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தமிழகத்துக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால், ‘கோ பேக் மோடி’ என்றார்கள். ஆனால், மோடி ஒன்றும் ஓடிவிட வில்லையே. ‘நீங்கள் என்னை விரட்டினாலும் நான் உங்களுக்கு நல்ல விஷயங்களைத் தருவேன்’ என்றே பல்வேறு திட்டங்களைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்தார். அதனால், தமிழகத்துக்கு மத்திய அரசு எதுவும் செய்யாது என்கிற அர்த்தத் தில் ஒருபோதும் நான் சொல்லமாட்டேன்’’

‘‘நீங்கள், ‘அ.தி.மு.க கூட்டணி தொடரக் கூடாது என்று நான் சொல்லமாட்டேன்... தொடரவேண்டும் என்றும் சொல்லமாட்டேன்’ என்று சொன்னீர்கள். அதன் உள் அர்த்தம் என்ன?’’

‘‘வெளிப்படையாகத்தான் கூறியிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க வலிமைமிக்க கட்சியாக மாறிவிட்டால், அவர்கள் எதை விரும்புவார்கள்? கூட்டணி என்பது ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்படக்கூடிய தேவை. அது சூழ்நிலையைப் பொறுத்துதான் அமையும். அதைத்தான் நான் சொன்னேன். இதை அனைத்துக் கட்சியினரும் சொல்ல முடியும்.’’

‘‘பி.ஜே.பி வலுவானால் அ.தி.மு.க கூட்டணி தேவை இல்லைதானே?’’

‘‘இதுவும் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். தி.மு.க வலுவாக இருந்தால் நான்கு சீட்டுகளை கம்யூனிஸ்ட்டு களுக்குக் கொடுப் பார்களா? காங்கிரஸுக்குப் பத்து சீட்டுகளைக் கொடுத்திருப் பார்களா?’’

‘‘மத அமைப்பு ஒன்று, ‘கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனை நாங்கள்தான் தோற்கடித்தோம்’ என்று தெரிவித்திருக்கிறதே?’’


‘‘காங்கிரஸின் வெற்றி முழுக்க முழுக்க மதவாதி களுடையது. சிறிது நாள்களில் அந்த மத அமைப்புகளும்கூட கிளைக் கழகங்களாக மாற்றப் பட வாய்ப்பு உருவாகும்.’’

‘‘நீங்களும் கிறிஸ்தவ பிஷப்புகளிடம் ஆசி பெற்றீர்களே?’’

‘‘1991-லிருந்து ‘உங்கள் ஓட்டு எனக்கு வேண்டும்’ என்று கேட்பது என் வழக்கம். ‘தயவுசெய்து மக்களைச் சுதந்திரமாக ஓட்டுப் போட விடுங்கள். ஒரு குறிப்பிட்ட உணர்வை ஊட்டி வைக்காதீர்கள்’ - இது நான் எல்லா மதத்தினரிடமும் சொல்லக்கூடிய விஷயம். அதைத்தான் அப்போதும் தெரிவித்தேன்.”

‘‘உங்களுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி அல்லது கவர்னர் பதவி கொடுப்பார்கள் என்கிறார்களே?’’

‘‘என்னைப் பொறுத்தவரை தோற்றுப்போன ஒரு வேட்பாளருக்குப் பதவி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தோற்றுப்போன எனக்குப் பதவி வேண்டாம். அடிப்படையில் நான் ஒரு பணியாள். கட்சியைப் பலப்படுத்துவது என் பணி. நாடு முழுவதும் 303 பேர் பி.ஜே.பி-யிலிருந்து வெற்றிபெற்றிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதவி கொடுக்காமல் தோற்கடிக்கப்பட்ட வருக்குக் கொடுக்கச்சொல்ல என்ன உரிமை இருக்கிறது?’’

‘‘ஆனால், தமிழ்நாட்டில் கட்சிப் பணிசெய்து, தேர்தலில் போட்டியிட்டவர்களை விட்டுவிட்டு... நிர்மலா சீதாராமன் போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறதே?’’

‘‘டெல்லி மாநிலத்தின் அனைத்து இடங்களை யும் வெற்றிபெற வைப்பதற்கு அவருக்குப் பொறுப்பு கொடுத்தார்கள். அதை அவர் செய்துமுடித்தார். தேர்தலில் நின்று ஓர் இடத்தில் ஜெயிப்பது பெரிதா, ஒரு மாநிலம் முழுவதும் வெற்றிபெற வைப்பது பெரிதா?’’

- ஆர்.சிந்து

படம்: ரா.ராம்குமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு