Published:Updated:

பொது மன்னிப்பு அனைவருக்கும் பொதுவானதா? - நியாயம் கேட்கும் முஸ்லிம் சிறைவாசிகள்

பொது மன்னிப்பு அனைவருக்கும் பொதுவானதா? - நியாயம் கேட்கும் முஸ்லிம் சிறைவாசிகள்
பொது மன்னிப்பு அனைவருக்கும் பொதுவானதா? - நியாயம் கேட்கும் முஸ்லிம் சிறைவாசிகள்

``டா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 11 இஸ்லாமிய சிறைவாசிகள், 25 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை” என்கிற செய்தியைச் சமீபத்தில் கடந்து வந்திருப்போம். தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டிருந்த அந்த 11 பேரையும் விடுதலை செய்து நாசிக் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இந்திய நீதித்துறையின் பாதகமான அம்சங்களில் ஒன்று, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகள் மற்றும் வழக்கு விசாரணையில் ஏற்படுகிற கால தாமதம் ஆகியவையே. வழக்கு விசாரணையில் ஏற்படுகிற கால தாமதத்திற்குப் பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. என்றாலும், சமீப காலமாக குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதிகளாகவே நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கவலையளிக்கக்கூடியதாகவே உள்ளது.

பல ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களில் பெரும்பாலும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுமே அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் இஸ்லாமியர்கள் 3 பேர் மீது பசுவதை செய்த குற்றத்திற்காக காங்கிரஸ் அரசு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது அதற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

வழக்குகள் பதிவதிலும், வழக்கு விசாரணைகளிலும் இந்திய நீதி அமைப்பில் இதுபோன்ற சமத்துவமின்மை நிலவுகிற சூழலில் தண்டனை பெற்ற கைதிகளுக்குக் கிடைக்கிற அரசின் பொது மன்னிப்பு என்பது இஸ்லாமிய கைதிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டும் நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டையொட்டியும், 2017-ல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டியும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களில் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே இஸ்லாமியர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. விடுதலை கோரி விண்ணப்பித்த பெரும்பாலான இஸ்லாமியர்களின் மனுக்கள் சிறை அதிகாரிகளின் நன்னடத்தை சான்று இருந்தபோதிலும் பரிசீலிக்கப்படாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்குப் பின்னர், அதிக காலம் ஆயுள் கைதிகளாகச் சிறையிலிருந்து வருபவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கைதிகளே எனலாம். ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படுகிற பொது மன்னிப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழகச் சிறைகளில் உள்ள உமர் பாரூக், ஹரூம் பாஷா, இப்ராஹிம், ஜாகீர், எம்.எம்.ஹக்கீம், யாசுதீன், அமானுல்லா, சாகுல் ஹமீது உள்ளிட்ட எட்டுக் கைதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவர்கள் தவிர, வேறு இரண்டு வழக்குகளில் ஊமை பாபு மற்றும் இப்ராஹிம் உள்ளிட்ட கைதிகளின் மனுக்களையும் பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது.

தடா போன்ற தீவிரவாதத் தடுப்புச் சட்டங்கள் அல்லாத மற்ற குற்றப்பிரிவுகளின் கீழ் இவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளில் அமானுல்லா, எம்.எம்.ஹகீம், உமர் பாரூக் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரை பொது மன்னிப்பின் அடிப்படையில் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் மற்றவர்களின் மனுக்களை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் சி.டி.செல்வம், எஸ்.ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. பொது மன்னிப்பில் கைதிகளை விடுதலை செய்யும் அரசு உத்தரவுகளை நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது. எனினும், அதில் ஏதேனும் குறைகள் இருப்பின் நீதிமன்றம் தலையிட வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

`பொது அமைதிக்கு ஆபத்து, கைதிகளின் உயிருக்கு ஆபத்து’ என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கைதிகளின் விடுதலைக்கு எதிராகக் கூறிய காரணங்களை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். ``சட்டம் - ஒழுங்கைக் காப்பது என்பது அரசாங்கத்தின் பணி, கைதிகள் அல்லாமல் மற்றவர்களால் ஏற்படலாம் என்று கூறப்படுகிற குற்றச்சாட்டுகளுக்காகக் கைதிகளை விடுவிக்காமல் தடுப்பது என்பது நீதிக்கு எதிரானது. இதுபோன்ற காரணங்களுக்காக அவர்களை விடுவிக்காமல் தடுத்தால், காலம் முழுவதும் இதே காரணங்களைச் சொல்லி, இவர்களின் விடுதலை மறுக்கப்படலாம். எனவே இவர்களின் மனுக்களை இரண்டு வார காலத்திற்குள் பரிசீலித்து கைதிகள் வேறெந்த வழக்குகளிலும் சம்பந்தப்படவில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என நீதிபதிகள் கூறியிருந்தனர். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படும் கைதிகளின் குடும்பத்தினரிடம் அவை எத்தகையது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதையும் தீர்ப்பில் பதிவு செய்திருந்தனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்து இரண்டு மாத காலம் ஆன போதிலும் இன்றுவரை அவர்களை விடுவிக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். எனவே உமர் பாரூக்கை தாமதிக்காமல் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடந்த 4-ம் தேதி நாகப்பட்டின மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நிஜாம் பேசுகையில் ``முன்கூட்டியே விடுதலை செய்வது என்பதைக் கருணையாகப் பார்க்கின்றனர். அது அவர்களின் உரிமை, இவர்கள் அதற்கு முழுவதும் தகுதியுடையவர்களே. இரண்டு முறை பொது மன்னிப்பு வழங்கப்பட்டதில் இந்தக் கைதிகளுக்கான உரிமை என்பது மறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கைதிகளுக்கான நன்னடத்தைச் சான்றிதழ்களும் சிறை அதிகாரிகளால் வழங்கப்பட்டு விட்டது. ஆனாலும் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பின் மீது அரசு முடிவெடுக்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்குச் செல்ல வேண்டும். அதைச் செய்யாமல் கிடப்பில் போடத்தான் பார்க்கின்றனர்” என்றார்.

நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத நிலைதான் நிலவுகிறது எனத் தெரிவித்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் தொடர்ந்து, ``விடுதலையாவதற்குத் தகுதியுடைய நாற்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய கைதிகள் தொடர்ந்து சிறைகளில் உள்ளனர். ஆனால் அவர்களை விடுதலை செய்வதற்குப் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கைதிகள் விடுதலையாவதில் அனைத்து அரசுகளும் ஒரே விதமான அணுகுமுறையைத்தான் கையாள்கின்றன. அண்ணா நூற்றாண்டின்போது பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவர்களில் குறைவானவர்களே இஸ்லாமியர்கள். அதுவும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் அவர்களும் வெளியில் விடப்பட்டனர். விடுதலை என்பது மட்டுமல்லாமல், கைதிகளுக்குக் கிடைக்கின்ற பரோல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுமே மறுக்கப்படுகின்றன. பல இடங்களிலும் பொய்யான வழக்குகள் பதியப்படுவதும் தெரிய வந்துள்ளது. நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், அதைச் செயல்படுத்தாமல் இருந்தால் அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டும்” என்றார்.

விடுதலை செய்யக்கோரி உத்தரவிடப்பட்டுள்ள உமர் பாரூக் சகோதரர் புருஹானுதின் கூறுகையில், ``பல ஆண்டுகளாக என்னுடைய சகோதரரை பொது மன்னிப்பில் வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து முதலமைச்சருக்கு முறையிட்டு வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டே வந்தது. விடுதலை செய்வதற்கான அனைத்துத் தகுதியும் இருக்கும் போது காரணத்தைத் தெரிவிக்காமல் வெளியே விட மறுத்து வருகின்றனர். மாநில மனித உரிமைகள் ஆணையம் என் சகோதரருக்கு வழங்கிய நன்னடத்தைச் சான்றிதழை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கோரியபோதும் தர மறுத்துவிட்டனர். தற்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்தபிறகும் கூட அரசின் போக்கு அதே போலத்தான் உள்ளது. காலம் தாழ்த்திக் கிடப்பில் போடவே பார்க்கின்றனர்” என்றார்.

சென்னைப் புழல் சிறை துணை ஐ.ஜி.முருகேசன், ``ஆயுள் தண்டனைக் கைதிகள் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் அரசு சம்பந்தப்பட்டவை. சிறைத்துறை இதில் தனித்து முடிவெடுக்க முடியாது. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் உத்தரவு கிடைத்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க முடியும். தற்போதுவரை அரசுத் தரப்பிலிருந்து இதுதொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான உத்தரவும் வரவில்லை” என்றார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான விவாதங்களுக்கிடையே ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற குரலும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``7 தமிழர்களின் விடுதலையோடு, தமிழகச் சிறைகளில் விடுதலை செய்ய எல்லாத் தகுதிகளும் உடைய ஆயுள் தண்டனை பெற்ற 41 இஸ்லாமிய கைதிகளையும் விடுவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரசின் பதிலுக்காக, விடுதலையை எதிர்நோக்கியிருக்கும் சிறைக் கைதிகள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.