Published:Updated:

சறுக்கல்களை சாதனைகளாக மாற்றிய டாடா குழுமம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சறுக்கல்களை சாதனைகளாக மாற்றிய டாடா குழுமம்!
சறுக்கல்களை சாதனைகளாக மாற்றிய டாடா குழுமம்!

நிகழ்வுவாசு கார்த்தி

பிரீமியம் ஸ்டோரி

ந்தியத் தொழில் சாம்ராஜ்யத்தில் 150 ஆண்டுகளாகக் கோலோச்சி வருவது டாடா குழுமம். இந்த குழுமத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஷசாங்க் ஷா (Shashank Shah) புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். ‘The Tata Group: From Torchbearers to Trailblazers’ என்னும் இந்தப் புத்தகத்தின் அறிமுக விழா சமீபத்தில்  மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் புத்தக ஆசிரியர், டாடா கெமிக்கல்ஸ் நிர்வாக இயக்குநர் முகுந்தன் மற்றும் டி.சி.எஸ் சென்னை பிரிவு தலைமை அதிகாரி சுரேஷ் ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 150 ஆண்டு கால டாடா வரலாற்றில், அவ்வப்போது எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள், டாடா குழுமம் சந்தித்த வெற்றிகள், சறுக்கல்கள் எனப் பலவற்றையும் ஆசிரியர் எழுதியுள்ளார். சில முக்கிய நிகழ்வு களைக் குறித்து ஷசாங்க் ஷா பேசியபோது...

சறுக்கல்களை சாதனைகளாக மாற்றிய டாடா குழுமம்!

‘‘இந்தப் புத்தகத்தை எழுத எனக்கு சுமார் பத்து மாதங்கள் ஆகின. ஆனால், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக டாடா குழுமத்தில் அதிகாரிகளுடன் விவாதித்த பிறகுதான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன்” என்றவர், தொடர்ந்து பேசினார்.

“இப்போது வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தொழிலில் பிரச்னை என்றால், வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், 1922-ம் ஆண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் கடன் பிரச்னை. நிறுவனத்தை நடத்த முடியாத சூழல். நிறுவனத்தை மூடவேண்டும் என்னும் நிலையில்கூட ‘என்னுடைய இறப்புக்குப் பிறகுதான் அது நடக்கும்’ என அப்போதைய டாடா தலைவர் சொன்னார். டாடாவின்  தனிப்பட்ட சொத்துகள் மற்றும் மனைவியின் நகைகளை விற்று ஒரு கோடி ரூபாய் திரட்டி மீண்டும் நிறுவனத்தை நடத்தினார்.

சறுக்கல்களை சாதனைகளாக மாற்றிய டாடா குழுமம்!இதேபோல, 1992-ம் ஆண்டு டாடா ஸ்டீலில் மீண்டுமொரு சிக்கல். 40,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவேண்டிய சூழல். அதைச் செய்தபோது, சர்வதேச அளவில் அப்படி ஒரு சலுகையை யாரும் தந்திருக்க முடியாது என்கிற அளவுக்கு சலுகையைத் தந்து, எந்தச் சிக்கலும் இல்லாமல் அந்த 40,000 பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் 2.5% சமூக வளர்ச்சிக்காகச் செலவு செய்யவேண்டும் என்னும் விதி இருக்கிறது. ஆனால், இதனை டாடா குழுமம் ஆரம்ப காலத்திலிருந்தே செய்துவருகிறது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் தொடங்குவதற்கு  அப்போதைய டாடா குழும இயக்குநர் குழு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் 50%  சொந்தப் பணத்தை முதலீடாகக் கொண்டு அந்த நிறுவனத்தை ஜாம்ஷெட்ஜி டாடா கொண்டு வந்தார். இவ்வளவு தொகையை முதலீடு செய்த பிறகு, டாடா என்னும் பெயர் வைக்காமல், இந்தியன் இன்ஸ்டிடியூட் என்று பெயர் வைத்தது ஏன் என்ற கேள்விக்கு, இந்தக் கல்வி நிறுவனம் ஒவ்வொரு இந்தியருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இண்டியன் இன்ஸ்ட்டிடியுட் என்று பெயர் வைத்திருப்பதாக டாடா பதில் அளித்தார். 

சறுக்கல்களை சாதனைகளாக மாற்றிய டாடா குழுமம்!

இந்தியன் ஹோட்டல் நிறுவனத்தில் ஒரு பிரச்னை. எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் பொருள்கள் திருடுபோவதைத் தடுக்க முடிய வில்லை. திருட்டைத் தடுப்பதற்காகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்போது இரு பணியாளர் கள்தான் திருட்டைச் செய்ததாகக் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தச் சமயத்தில் ஹோட்டலில் விழா என்பதால், ஜே.ஆர்.டி டாடா வந்திருந்தார். விஷயம் அவரிடம் சொல்லப்பட்டது.

விசாரணைக்குப்பிறகு அவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டார்கள். குற்றம் செய்த இரண்டு பணியாளர்களும் வெளியேறியபிறகு, ஜே.ஆர்.டி டாடா எடுத்த முடிவு முக்கியமானது. ‘‘அவர்கள் செய்த தவற்றுக்கு அவர்களை நீக்கிவிட்டோம். சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கிறார்களா என்று விசாரியுங்கள். இருந்தால், அவர்களின் கல்விச் செலவை டாடா குழுமம் ஏற்கும்’’ என்கிற முடிவை அறிவித்தார் ஜே.ஆர்.டி டாடா.

தொழிலிலும் முதலீட்டாளர்களுக்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுப்பதிலும் டாடா குழுமம் சிறப்பாகச் செயல் பட்டிருக்கிறது. 1990-களில் டாடா குழுமத்தின் புதிய தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார். அப்போது ஹார்வேர்டு நிர்வாகக் கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் ரத்தன் டாடாவுடன் உரையாடினார்கள்.

அப்போது டாடா குழுமம் இப்போதிருக்கும் முறையில் செயல்பட்டால், நீண்ட காலத்துக்கு சந்தையில் இருக்கமுடியாது. பல தொழில் களிலிருந்து வெளியேறி, குறிப்பிட்ட தொழிலில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்னும் ஆலோசனை ரத்தன் டாடா முன்வைக்கப்பட்டது. ஆனால், ரத்தன் டாடா அவர்களுடைய ஆலோசனையை ஏற்கவில்லை. மாறாக, இவரின் காலகட்டத்தில் டாடா குழுமம் ஐந்து மடங்கு உயர்ந்தது. இதில் 67% வரை வெளிநாடுகளிலிருந்து வருமானம் கிடைத்தது. தவிர, இந்தியாவின்    ஜி.டி.பி-யில்   டாடா குழுமத்தின் பங்கு  குறிப்பிடத் தக்கது. வரி வருமானத்தில் டாடா குழுமத்தின் பங்கு 2.25% என்பதும் கவனிக்கத்தக்கது.

சறுக்கல்களை சாதனைகளாக மாற்றிய டாடா குழுமம்!

1992-ம் ஆண்டு டாடா குழுமத்திலிருந்து  பட்டியலிடப்பட்ட 16 நிறுவனங்களில் ஒரு லட்சம் ரூபாயைச் சரிசமமாக முதலீடு செய்திருந்தால், 2017-ம் ஆண்டு முடிவில் இந்தத் தொகை ரூ.40 லட்சமாக இருக்கும். ஆனால், பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ-யில் முதலீடு செய்தி ருந்தால் ரூ.10 லட்சம் மட்டுமே கிடைத்திருக்கும். இந்த 25 ஆண்டுகளில் பெர்க்‌ஷயர் ஹாத்வே கொடுத்த வருமானத்தைவிட டாடா குழுமம் அதிக வருமானம் கொடுத்திருக்கிறது.

1990-களில் ஐ.டி துறை செழிப்பு காரணமாக   டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 97,000 கோடியாக இருக்கும் என கிரெடிட் சூஸ் நிறுவனம் கணித்திருந்தது. இந்தச் சமயத்தில் ஐ.பி.ஓ வெளியிட்டால், டாடா குழுமத்தின் இதர நிறுவனங்களின் கடன் பிரச்னையைச் சமாளித் திருக்கலாம். ஆனால், அந்தச் சமயத்தில் டி.சி.எஸ் ஐ.பி.ஓ வெளியிடவில்லை. இதுகுறித்து ரத்தன் டாடா, ‘‘இந்த மதிப்பில் ஐ.பி.ஓ வெளியிட்டால், இதே சூழல் இன்னும் சில காலத்துக்குக் கிடைக்காது. அதனால் பங்குதாரர்களுக்கு லாபம் கிடைக்காது’’ என மறுத்துவிட்டார். அதன்பிறகு, சென்செக்ஸ் 6250 புள்ளியிலிருந்து      4300-ஆகக் குறைந்தபிறகு, டி.சி.எஸ் ஐ.பி.ஓ வெளியிடப்பட்டது’’ என டாடா குழுமத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத பல தகவல்களைச் சொன்னார்.

பணியாளர்கள் மீதான அக்கறை, சமூக அக்கறை, முதலீட்டாளர்களுக்கு வருமானம் உள்ளிட்ட பல சாதகமான விஷயங்களை மட்டுமே சொல்லாமல்,  டாடா குழுமத்தின் சில தவறுகளையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷசாங்க். 

‘‘டாடா குழுமம் இந்தியாவின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவுக்கு கெமிக்கல் நிறுவனம் வேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்டது டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் லாபம் ஈட்ட 10 ஆண்டுகளுக்குமேல் ஆனது. டாடா வழியில் தொழில்புரிவது என்பது குறித்து இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். தொழில்முனைவோர்கள், மாணவர்களுக்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்” என்று ஷசாங்க் பேசினார். எம்.பி.ஏ மாணவர்கள் இந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசிக்கலாமே! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு