Published:Updated:

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - எதிர்காலத்துக்குத் தயாராக்கும் புதிய திறன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திறன் பழகு, திறமை மேம்படுத்து! - எதிர்காலத்துக்குத் தயாராக்கும் புதிய திறன்கள்!
திறன் பழகு, திறமை மேம்படுத்து! - எதிர்காலத்துக்குத் தயாராக்கும் புதிய திறன்கள்!

ரீஸ்கில்லிங் பற்றிய புதிய தொடர் -2சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

பிரீமியம் ஸ்டோரி

திறன் மேம்பாட்டினை ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். படிப்பை முடித்துவரும் மாணவர்களுக்கும் வேலைக்குப் புதிதாக வரும் ஊழியர்களுக்கும் கற்றுத்தருவது அடிப்படைத் திறன் வளர்ப்பு. அதாவது, ஒரு வேலையை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம் என்று யோசித்துப் பயிற்சி அளிப்பதுதான் திறமை மேம்பாடு. ஒருவர் பல வருடங்கள் அனுபவம் பெற்ற துறையிலிருந்து மாறி, வேறு துறையில் புதிய திறன்களைக் கற்பது மறுமேம்பாடு. பெரும்பாலான டிஜிட்டல் சார்ந்த திறன்கள் இந்த வகையைச் சேரும். நாளைய தேவைக்குத் திட்டம் தீட்டி தயாராவதுதான் புதுத் திறன் மேம்பாடு.

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - எதிர்காலத்துக்குத் தயாராக்கும் புதிய திறன்கள்!

இன்றைக்கு என்ன படிப்பது என்றே தெரியாதபோது, நாளைக்கு என்ன வேண்டும் என்று எப்படி நமக்குத் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். இதை அனைவரும் செய்யவேண்டாம். இதற்கான முக்கியப் பொறுப்பு பேராசிரியர்கள், தொழில் நிறுவனங்களை நடத்திவரும் தலைவர்கள், கொள்கை வடிவமைப் பவர்கள், நிபுணர்களிடமே இருக்கும். வல்லுநர்களின் கருத்தைக் கேட்பது, சர்வே நடத்துவது, எந்த வேலைக்கு எவ்வளவு ஆள்கள் தேவை எனக் கணக்கெடுப்பது, கணிப்பது போன்ற வழிமுறைகளை  இதற்கு ஐ.எல்.ஓ (International Labour Organization) ‌பரிந்துரைத்திருக்கிறது.

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - எதிர்காலத்துக்குத் தயாராக்கும் புதிய திறன்கள்!தொலைநோக்குப் பார்வையுடன் தங்களை மாற்றிக்கொள்ளாத நிறுவனங்கள், காணாமல் போனதற்கு உதாரணங்கள் பல உள்ளன. ஊட்டியில் இருக்கும் ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் டிஜிட்டல் கேமரா வருவதை முன்கூட்டியே அறிந்து, அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைக்கு அந்த நிறுவனம் மூடப்படும் சூழ்நிலை உருவாகியிருக்காது. பல ஆயிரம் பணியாளர்கள் வேலை இழக்கவேண்டிய அவசியமும்  ஏற்பட்டிருக்காது.

உலக அளவில் ஜெராக்ஸ், கோடாக் போன்ற நிறுவனங்கள் தங்களின்முன் எழுந்த டிஜிட்டல் அலையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், வாய்ப்பைத் தவறவிட்டதன் விளைவு, தொழில் உலகிலிருந்து காணாமல் போகவேண்டிய நிலை உருவானது.

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - எதிர்காலத்துக்குத் தயாராக்கும் புதிய திறன்கள்!

அதேசமயம், புதுப்புது வேலைகள் இணையதளங்களிலும் செய்தித்தாள்களிலும் வராத நாளே இல்லை என்றே சொல்லலாம். இந்த வாரத்துக்கான உதாரணம், அமேசானின் கிடங்குகளில் (warehouse) கோடிக்கணக்கான பொருள்களை அலமாரிகளில் கையாளும் தானியங்கி இயந்திரம். இது `எந்திரன்’ படத்தில் வரும் இயந்திர மனிதன்போல் இரண்டு கைகளும் கால்களும் கொண்டிருக்காது. இது சக்கரங்களில் ஓடி, அலமாரிகளை மனிதர்களுக்கு அருகில் எடுத்துச் செல்லும் இயந்திரம். இவை அனைத்தையும் கண்காணிக்க உருவாக்கப்பட்டிருக்கும் புதிய வேலை, Flow Control Specialist.

மூன்றுவிதமான பதவிகள்

இந்தத் திறன் மேம்பாட்டுத் தொடர்ச்சியைக் கவனிக்க, பலர் வேலை செய்யும் பெரிய நிறுவனங்களில் மூன்று பதவிகளை யோசிக்கலாம். அந்த மூன்று பதவிகள் தோட்டக்காரர், விவசாயி, காட்டு அதிகாரி (gardener, farmer, forester).

 தோட்டக்காரர், இன்றைய தேவைக்குத் தகுந்த திறன்களை வ‌ளர்ப்பதில் கவனம் செலுத்தவேண்டும். இந்தப் பதவி பயிற்சித் துறையில் (Learning & Development department) பாடங்கள் நடத்த, மதிப்பீடு செய்து திருத்தங்கள் செய்ய சரியானதாக இருக்கும். விவசாயிகள், சற்று தொலைநோக்குடன் அடுத்த சில‌ ஆண்டுகளில் வரப்போகும் தேவைகளுக்கேற்ப, புதிய திறன்களை அடையாளம் கண்டு வளர்க்கலாம். காட்டு அதிகாரி என்பவர் பதவியில் உள்ளவர்கள், தங்கள் தொழிலில் மட்டுமல்லாமல் டிஜிட்ட‌ல் மற்றும் மற்ற துறைகளில் நடக்கும் விஷயங்களைக் கவனித்து, அடுத்த 5 - 15 ஆண்டுகளின் தேவைக்குத் தகுந்த முதலீடுகளைத் திரட்டும் முயற்சிகளைச் செய்யவேண்டும்.

தொடர்ச்சியான தொடர்புகள்

புதிய‌ திறன் மேம்பாட்டை, வகுப்பறைக்குள் பாடங்கள் நடத்தி மட்டும் கொண்டுவர முடியாது. இது ஒரு கலாசார மாற்றம். இதில் குறிப்பிட்ட ‌திறன்கள் என்று எதுவும் கிடையாது. எதிர்காலப் பணியிடம் எப்படி இருக்குமோ, அதற்குத் தேவையான அனைத்து திறன்களும் முதலீடுகளும் அடக்கம். நாளைய பணியிடத்துக்கு வேண்டிய கருவிகள், தொழில்நுட்பங்கள், மென்பொருள் எழுதும் திறன்க‌ளும் அதற்குத் தேவையான பயிற்சியும் புதுத் திறன் மேம்பாடே.

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - எதிர்காலத்துக்குத் தயாராக்கும் புதிய திறன்கள்!

கல்வித் துறையானது  எப்போதும் தொழில் துறையின் மின்னல் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னை மாற்றிக்கொள்ள முடியாது. பேராசிரியர் களும் வல்லுநர்களும் மாணவர்களும் படித்து முடிக்கும்போது என்னென்ன திறன்க‌ள் தேவை என யோசித்து, அதற்குத் தகுந்த பாடங் களைக் கற்பிக்கவேண்டும். இது சுலபமல்ல. தொழில் நிறுவனங்களுடன் இன்டன்ஷிப், புராஜெக்ட்ஸ் எனத் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவசியம்.

ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக், கல்லூரியில் படித்து முடிக்கும் மாணவர்களின் திறனுக்கும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கும் உள்ள இடைவெளி பற்றி பலமுறை பேசியிருக்கிறார். அதில் முக்கியமானது, மென்பொருள் எழுதுவது (coding). அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ‘கோடிங்’ படிக்கவேண்டும் என்பது அவர் கருத்து. இது இந்தியாவுக்கும் பொருந்தும். வருங்காலத்தில் மென்பொருள் இல்லாத எந்தவொரு துறையும் இருக்காது என்றே சொல்லலாம்.

வாகனத் துறையில் திறன் மேம்பாடு

2016-ம் ஆண்டு பல நாட்டுத் தலைவர்கள் சேர்ந்து உலக வெப்பமயமாக்கலைக் குறைக்க‌, ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அதில் முக்கியமான ஓர் அம்சம். இதற்கு பெட்ரோல், டீசல் வண்டிகளைக் குறைத்து, மின் வாகனங்களை (Electric vehicle) அதிகம் பயன்படுத்த  வேண்டும்.

இந்த முயற்சியில் பல நிறுவனங்கள் தங்கள் திறனை வ‌ளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களைவிட மின் வாகனங்கள் தயாரிப்பது சுலபம். ஆனால், அதற்குப் புதுவிதமான திறன்கள், செயல்முறைகள், அனுபவம் மற்றும் பொருள்கள் தேவை. வண்டியின் இதயமான பேட்டரியில் உள்ள லித்தியம் போன்ற பொருள்கள் உலகில் மிக அரிதானவை.

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - எதிர்காலத்துக்குத் தயாராக்கும் புதிய திறன்கள்!

சமீபத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் தன் பொறி யாளர்களில் 75% பேரை இன்ஜின் வடிவமைக்கும் துறையிலிருந்து மின் வாகன தயாரிப்புக்கு மாற்றியது. இந்தத் துறையில் மொத்தமே 30,000 வல்லுநர்களே உள்ளனர். மிக அதிக தேவை இருக்கும் இந்தத் துறைக்கு எந்தக் கல்லூரியிலும் தனிப் பாடத்திட்டம் கிடையாது.

மருத்துவத் துறையில் திறன் மேம்பாடு

சுகாதாரத் துறை என்பது நோய் வந்தபிறகு மருத்துவம் செய்வது மட்டுமல்ல; வரும்முன் காப்பதற்கு உதவியாக உள்ள தொழில்நுட்பம் நம் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கையில் கட்டும் கடிகாரம்கொண்டு கண்காணித்துக் கொண்டே இருக்கும். மருத்துவர்களுக்கும் இன்று தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களைக் கற்றுக்கொள்ளும் அவசியம் உருவாகியுள்ளது.

ஆக மொத்தத்தில், இன்று நாம் காணும் இந்த‌த் தொழில்நுட்ப அலை, எந்தவொரு துறையையும் விட்டு வைக்கவில்லை. இதற்கான திறனை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளப்போகிறோம்?

(திறன் வளரும்) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு