Published:Updated:

+11 வைரங்கள் என்றால் என்ன..? பிரேமலதாவுக்கு கலைஞரின் ’பதில்’!? ஹலோ ப்ளூடிக் நண்பா!

+11 வைரங்கள் என்றால் என்ன..? பிரேமலதாவுக்கு கலைஞரின் ’பதில்’!?  ஹலோ ப்ளூடிக் நண்பா!
+11 வைரங்கள் என்றால் என்ன..? பிரேமலதாவுக்கு கலைஞரின் ’பதில்’!? ஹலோ ப்ளூடிக் நண்பா!

+11 வைரங்கள் என்றால் என்ன..? பிரேமலதாவுக்கு கலைஞரின் ’பதில்’!? ஹலோ ப்ளூடிக் நண்பா!

2016-ல் பண மதிப்பீட்டு நடவடிக்கையின்போது தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர், சூரத் வைர வியாபாரிகளிடம் தன் கறுப்புப் பணம்கொண்டு இரண்டு லட்சம் காரட் வைரங்களை வாங்கியதாகவும், தற்போது அதில் பாதியை குறைந்த விலைக்குத் திரும்ப விற்றதால் வைரங்களின் விலை மூன்றில் ஒரு பங்கு சரிந்துவிட்டதாகவும் செய்தி. அதையொட்டி டைமண்ட் லேடி, `வைரத் தாரகை' எனச் சமூக ஊடகங்களில் கிசுகிசு கேலிகள் பறக்கின்றன. வைரத் தாரகை யாராக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு பெரும் பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது. உறுதியான குற்றச்சாட்டு வெளிவரும் வரை, நாம் இதில் கருத்துச் சொல்ல முடியாது. ஆனால், நாம் அந்த வைரங்களைக் கவனிப்போம்.

அதென்ன +11 வைரங்கள்? உதிரி வைரங்கள் (Loose Diamonds) ப‌ல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. உதாரணம், Round, Square, Cushion, Heart, Octagon, Oval, Pear, Radiant, Trillion, Castle, Marquise, Triangle, Princess. போக, வைரங்களின் அளவு (Size) மற்றும் எடை (Weight) கொண்டு அவற்றைப் பிரிப்பார்கள். அளவு மில்லிமீட்டரில் இருக்கும். எடை காரட்டில். துலக்கம் (Clarity), நிறம் (Colour) ஆகியவற்றின் அடிப்படையிலும் பாகுபாடுக‌ள் உண்டு.

வட்ட வைரங்களுள் (Round Diamonds) குறிப்பிட்ட அளவு, எடை கொண்டவையே இந்த +11 வைர‌ங்கள். மிகத் தரமான, உயர்ரக வைரங்கள். அதனால் இவற்றின் விலையும் மிக‌ அதிகம். இந்தியாவில் சூரத்தில்தான் இந்த வகை வைரங்களை விற்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், +11 என்ற எண்ணுக்கும் இதற்கும் இந்த‌ வைரங்களுக்கும் என்ன சம்பந்தம்?

வைரங்களை அளவின் அடிப்படையில் சலித்து வகை பிரிக்க, பிரத்யேகச் சல்லடைகள் (Sieve) பயன்படுத்துவார்கள். இவற்றை எண்களால் குறிப்பார்கள் (உதாரணம் 2.0, 6.5). இது மோதிரம் செய்ய அளவு எடுக்கும்போது பிளாஸ்டிக் வட்டத்தில் விரல் விடச்செய்து அளவெடுத்து குறிப்பிட்ட வட்டத்தின் எண்ணைக் குறித்துக்கொள்வார்களே... அதுபோல். இவற்றில் 11 முதல் 14 வரையிலான எண் கொண்ட சல்லடைகளை +11 என்ற குடையின் கீழ் குறிப்பிடுவார்கள். அந்த அளவுகளில் சலித்துப் பிரிக்கப்படும் வைரங்களே +11 வைரங்கள். (மேலே குறிப்பிட்ட அளவுகளுடன் இவை பொருந்தும்.)

அடுத்த முறை நகை வாங்கினால், `வைரத்தின் Sieve என்ன?' என‌ விசாரியுங்கள்!
***

இன்றைய தமிழ்ச் சமூக வலைதள உலகில் மிகவும் வசீகரமான‌ ஒரு பெயர், மீனம்மாகயல். அவரை அறியாதோர் இல்லை. அதேசமயம் `அவர் யார்?' என வினவாதோரும் இல்லை. அவர் பெண் என்பதும், அவர் எழுதும் பாலியல் சார்ந்த விஷயங்களும் அவரது பிரபல்யத்துக்குச் சமமான காரணிகள். இரண்டில் ஒன்று இல்லை என்றாலும், அவரது புகழ் பாதியாய் இருந்திருக்கும். அடையாளம் மறைத்து எழுதுவது கூடுதல் ஆர்வத்தை அளிக்கிறது. எழுத்தைக்கொண்டு இன்னார் எனத் துப்புத்துலக்க முயல்கிறார்கள். அது மேலும் அவரை பேசுபொருளாக்குகிறது. இதற்கு முன்னுதாரணங்கள் உண்டு. உதா: இட்லி-வடை, பேயோன், தோட்டா, அரட்டைகேர்ள்.

மீனம்மாகயல், தன் சிறுகதைகளைத் தொகுத்து `மது’ என்ற கிண்டில் மின் நூலாக வெளியிட்டிருக்கிறார்.  நான் கிண்டில் கருவியில் வாசித்த முதல் நூல் இதுவே. தன் புத்தகத்துக்கு அழகான, கோட்டோவிய‌ அட்டையை வடிவமைத்திருப்ப‌தும் அவரே!

மொத்தம் ஒன்பது சிறுகதைகள் (மற்றும் கொசுறாய்க் கொஞ்சம் குறுங்கவிதைகள்). கடந்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே அவை வெளியானபோது படித்தவைதாம். இப்போது நூலாய்ச் சேர்த்துப் படிக்கும்போது அவரது எழுத்துலகைத் தொகுத்துக்கொள்ள முடிகிறது. இவற்றில் `நீடூழி வாழ்க’ மற்றும் `கானல்நீர்’ இரண்டு மட்டும் மற்றவற்றிலிருந்து விலகிய கதைகள். மீதி ஏழு கதைகளும் ஆண் - பெண் பாலியல் உறவின் சிக்கல்களைப் பற்றிப் பேசுபவை. அவற்றில் சில, உங்களை அதிர்ச்சியுறவும் வைக்கும்.

இந்தக் கதைகள் யாவற்றிலும் `மது' என்ற பெயருடைய பெண்களே முதன்மைப் பாத்திரம் (உதா: மது, மதுமிதா, மதுவந்தி). `மது'க்கள் மீளும் பழங்காதல் தாண்டி தன் பெண் மகவின் மீது ப்ரியம் இருப்பதைக் கண்டுகொள்ளும் தாயாக வருகிறார்கள், கணவனை இழந்ததை மறைத்து ஆண்களிடம் பழகமுனையும் கைம்பெண்ணாக வருகிறார்கள், இளைஞர்கள் தம்மை ஊறுகாயாகப் பயன்படுத்திக்கொள்வதை உணறும் மத்திம வயதுப்பெண்ணாக வருகிறார்கள், திருமணம் தாமதமாகும் காலத்தில் அறிமுகமாகும் ஆண் நண்பனைப் பயன்படுத்திக்கொள்பவளாக‌ வருகிறார்கள், பாலியல் புரியாத பருவத்தில் ஓரினச்சேர்க்கைகொள்ளும் பதின்மப்பெண்ணாக வருகிறார்கள், பதின்ம மகனால் ஒழுக்கத்தின் திசை திருத்தப்படும் தாயாக வருகிறார்கள், மணம் தள்ளிப்போவதால் ஏற்படும் ஏக்கங்களைச் சுமந்த முதிர்கன்னியாக வருகிறார்கள். கண்ணாடி முன்போ குளியலைறையில் தம் நிர்வாணத்தை ரசித்து வெட்கமோ பெருமிதமோகொள்கிறார்கள்.

இவர்களை எல்லாம் அறிந்து முடிக்கையில், உலகம் ஒவ்வொரு கணமும் காமத்தால்தான் இயங்கிக்கொண்டிருப்பதான பிரமை தட்டுகிறது. அது ஓரளவு உண்மையும்கூட!

நிறைய இடங்களில், மதுவுடைய‌ மனவோட்டங்கள் அட்டகாசமாக வந்திருக்கின்றன; பிரச்னையின் இரு தரப்பையும் பேசுகின்றன; உளவியல் மருத்துவரின் நுட்பம் சும‌ந்திருக்கின்றன.

உதாரணமாய் `அற்றவள்’ கதையில் அடுத்தவன் மனைவியைக் கவர்கிறோம் என்ற கிளர்ச்சியில்தான் ஆண்கள் தூண்டப்படுவார்கள் என்கிறார். `அன்பின் சரோ’வில் திமிர்பிடித்தவள் என்று ஆண் சொன்னதற்கு மகிழ்ந்த மனம் அப்படி அல்ல என்றதற்கும் மகிழ்வதைக் குறிப்பிடுகிறார். `அற்றவள்’-ல் ஆரம்பத்தில் இல்லாத வளையலைச் சரிசெய்வதாய்ச் சொல்லும் இடத்திலேயே கதையின் முடிச்சுக்கான க்ளூவை விட்டுவைக்கிறார். இந்த மாதிரி நுண்ணிய தருணங்களும் எழுத்தின் க்ராஃப்ட்டும் ஆங்காங்கே!

தொகுப்பின் குறைகள், இரண்டாம் முறை படித்து கதைப் போக்கை, நடையை, பத்திப் பிரிப்பைக்கூட‌ச் சீராக்காத அலட்சியம். ஏராள இலக்கணப்பிழைகள் மற்றும் சில எழுத்துப்பிழைகள்.

மீனம்மாவின் சீரியஸ் முகத்தை அறிய விரும்புவோருக்கு, இந்தத் தொகுதி உதவும்.

****

கூட்டணி விஷயத்தில் பிரேமலதா புதிய உயரங்கள் தொட்டிருக்கிறார். பொதுவாய் ஒரே சமயத்தில் இரு எதிரெதிர்க் கட்சிகளிடம் ஒரு கட்சி கூட்டணி பேரம் பேசுவது ரகசியமாகவே நடக்கும். இந்த முறை தே.மு.தி.க அப்படிச் செய்ததை ஏதோ கடுப்பில் துரைமுருகன் பொதுவெளியில் போட்டுடைத்தது அரசியலுக்குப் புதிது. பெரிதாய் மறுக்காமல் ஒப்புக்கொண்டு ``கல்யாண வயதில் பெண் இருந்தால் அப்படித்தான் நான்கு பேர் வந்து கேட்பார்கள்'' என்று விசித்திர உவமை கொடுத்தார் பிரேமலதா.

கலைஞர் இருந்திருந்தால், மணப்பெண்ணுக்கு விபரீதமாய் பதில் தந்திருப்பார்!
***

ராய்கா ஸேதாப்ச்சி என்கிற இரானியப் பெண் இயக்கிய `Period. End of Sentence.’ 91-வது ஆஸ்கரில் ஆவணக் குறும்படப் பிரிவில் விருது பெற்றுள்ளது. ஒரு முக்கிய இந்தியப் பிரச்னையையும் அதற்கான தீர்வையும் மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.

பெண்களின் மாதவிலக்குச் சுகாதாரம் தொடர்புடையது அது. படத்தில் இந்தியப் பெண்களில் வெறும் 10 சதவிகிதத்தினரே சானிட்டரி பேட் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். மீதி அனைவரும் பொருளாதாரம், சங்கடம், கிடைக்காமை எனப் பல காரணங்களால் இன்னும் ஆபத்தான வழிகளில்தான் மாதச்சுழற்சி நாள்களை எதிர்கொள்கிறார்கள். இரு பாலினருமே அதைப் பற்றிப் பேசவே தயங்குகிறார்கள். கடவுளே தீட்டென ஒதுக்கிய விஷயமல்லவா! கனிமொழியின் கவிதையொன்று நினைவுக்குவருகிறது.

எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை.

நம் ஊர் அருணாசலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஹபூர் என்கிற உத்தரப்பிரதேச கிராமப் பெண்கள் எப்படித் தங்களுக்கான பேட்களைத் தயாரித்துக்கொள்கிறார்கள் என, படம் காட்டுகிறது. தவிர, Fly என்ற பெயரில் அதை மற்ற பெண்களுக்கும், கடைகளிலும் விற்க முனைகிறார்கள். அதன்மூலம் தம் சொந்தப் பயன்பாட்டுக்கு என்பது தாண்டி சுயதொழிலாகவும் அந்தப் பகுதியில் இது பெண்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

டெல்லி போலீஸில் சேர விரும்பும், அந்தக் கிராமத்தில் உள்ள‌ சினேகா என்கிற பெண்ணை மையமாக்கி, இந்த 26 நிமிடக் குறும்படம் நகர்கிறது. உள்ளடக்கம் சிறப்பு என்றாலும் பொதுவாய் சாதாரண ஓர் ஆவணப்படம் என்ற எண்ணமே எழுகிறது. அதனால் இதற்கு ஆஸ்கர் என்பது ஆச்சர்யம்தான். ஆனால், பொதுவாய் இந்தியா போன்ற நாடுகளின் ஏழ்மையை, பின்தங்கிய நிலையைப் படமெடுத்தால் ஆஸ்கர் உறுதி (முந்தைய உதாரணம்: Slumdog Millionaire) என்பதையும் இணைத்துப் பார்க்கலாம். 

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களை கேட்க ஆர்வமாக இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்!

அடுத்த கட்டுரைக்கு