Published:Updated:

"பொது இடம் என்பது, ஆண்களுக்கான இடம்தானே!" திருநங்கை மதுமிதா கோமதிநாயகம்

"பொது இடம் என்பது, ஆண்களுக்கான இடம்தானே!" திருநங்கை மதுமிதா கோமதிநாயகம்
"பொது இடம் என்பது, ஆண்களுக்கான இடம்தானே!" திருநங்கை மதுமிதா கோமதிநாயகம்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா நீண்ட காலமாக நிறைவேறாமல் தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. `33% இடங்கள் இல்லை, மக்கள் தொகையில் சரிபாதி உள்ள பெண்களாகிய எங்களுக்கு 50% இடங்களை ஒதுக்க வேண்டும்' என்கிற கோரிக்கையை சக்தி என்கிற அமைப்பு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடுத்தகட்டமாகப் பெண்கள் தினத்தையொட்டி, எட்டு மாநிலங்களில் சக்தி அமைப்பினர் பல்வேறு அமைப்பினருடன் இணைந்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருந்தனர். பெண்களுக்காக நாடாளுமன்றத் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் 50% இடங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் என்பதை மையமாக வலியுறுத்தி இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு இடையிடையே மாற்று ஊடக மையத்தினரின் கலை நிகழ்ச்சிகளும், நங்கேளி தொடர்பான நாடகமும் இடம்பெற்றன.

சக்தி அமைப்பின் சென்னை ஒருங்கிணைப்பாளர் ஜோதிலஷ்மி சுந்தரேசன் பேசுகையில், ``ஆயுத தொழிற்சாலைகளில் பணி செய்த பிரெஞ்சுப் பெண்கள், திருவாங்கூர் சமஸ்தானத்தில் மேல்தோள் சேலை போராட்டத்தில் ஈடுபட்ட நங்கேளி, வேலு நாச்சியாரின் வெற்றிக்கு வித்திட்ட குயிலி என அனைவருமே பெண்ணின் ஆற்றல் பேராற்றல் என்பதற்குச் சான்றாக இருக்கின்றனர். மக்கள் தொகையில் சரிபாதி உள்ள பெண்கள் அரசியல் அதிகாரத்தில் சரிபாதி இருக்க வேண்டும் என்பதற்கான போராட்டம்தான் இது” என்றார்.

திருநங்கை செயற்பாட்டாளரான மதுமிதா கோமதிநாயகம் பேசுகையில் ``பாலின வரிசையிலேயே ஆண்கள் என்பதைத்தான் முதலாவதாகச் சொல்கின்றனர். பெண் என்பதுதான் முதலாவது பாலினம். இந்தச் சமூகத்தின் அடிப்படையே பெண்களுக்கு எதிரானதாக உள்ளது. பெண்களுடைய பங்களிப்பு என்பது எதிலும் அங்கீகரிக்கப்படாமலே உள்ளது. வீடு, வேலை எனச் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்கள் சரிசமமாக இருக்கிறபோது ஐம்பது சதவிகித இடங்களுக்காக இன்று போராட வேண்டிய நிலை உள்ளது. அதுவும், அரசியல் கட்சிகளிடம் வழியில்லை என்பதால் தேர்தல் ஆணையத்திடமே நேரடியாக முறையிட வேண்டிய சூழல் இருக்கிறது. அரசியல் அமைப்பே ஆணாதிக்கம் நிறைந்ததாக இருக்கிறது. அரசியலிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமானால்தான் இந்த நிலைமை மாறும். பெண்களும் தங்களுக்கான வட்டம் இதுதான் என்கிற குறுகலான எண்ணத்தில் இருக்கின்றனர். அந்த மனத்தடையை முதலில் உடைத்தெறிய வேண்டும். பின்னர் சமூகத் தடைகள் என்பது தானாக உடையும். பெண்கள் முதலில் உணர வேண்டும், பெண்கள் தான் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்ப வேண்டும்.” என்றார்

ஐ.ஐ.டி பேராசிரியை கல்பனா கருணாகரன் பேசுகையில் ``வெறும் அரசியல் மட்டத்தில் மட்டுமல்லாமல், சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பெண்களுக்குச் சரிபாதி பங்களிப்பு, தலைமைத்துவம் வேண்டும் என்பதை நோக்கியதாக நம்முடைய பயணம் இருக்க வேண்டும். `பெண்ணுக்கான இடம் இதுதான்’ என வரையறுத்துள்ள சமூக சிந்தனை ஓட்டத்தை நாம் களைய வேண்டும். பொது இடம் என்பதே இங்கே ஆணுக்கான இடமாகத்தான் இருக்கிறது. உலக அளவில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. இது மூன்றாம் உலக நாடுகளின் பிரச்னை என்பதான பிம்பம் உள்ளது. ஆனால், சமீபத்தில் அயர்லாந்தின் தேசிய பெண்கள் ஆணையம் பெண்களுக்கான தனி ஒதுக்கீட்டு இடங்கள் வேண்டும் எனக் கோரியிருந்தனர். இது உலகளாவிய பிரச்னை. பெண்களை வேட்பாளராக ஏற்றுக்கொள்வதிலே இங்கு பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் கட்சிகள் பெண்களை வேட்பாளராக நிறுத்த முன்வருவதில்லை. இங்கு பல பெண்கள், பல்வேறு துறைகளில் சாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால், இங்கு பெண்மைக்கான அர்த்தம் என்பது மாறிவிட்டதா? இன்றளவும் தாய்மை, குழந்தை வளர்ப்பு என்பதுதான் பெண்மைக்கான பொறுப்பாக உள்ள சூழல்கள் மாறவில்லை, இது சமமான தளம் இல்லை. இவ்வளவு பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால்தான் இடஒதுக்கீடு வேண்டும் என்கிற குரல் அவசியமாகிறது” என்றார்.

சக்தி அமைப்பின் நிறுவனர் தாரா கிருஷ்ணசாமி பேசுகையில், ``இது இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை, ஒதுக்கீடு என்பதே தவறான வார்த்தை. எங்களுக்கான இடங்களைக் கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம். இதைப் பல கட்டமாக வலியுறுத்தி தற்போது தேர்தல் சமயம், வேட்பாளர் தேர்வு நடைபெறுவதால் தேர்தல் ஆணையத்திடம் இந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்கிறோம். தேர்தல் ஆணையத்தின் ’நியாயமான மற்றும் நேர்மையான முறையில்’ தேர்தல்களை நடத்த வேண்டும் என்பது, வெறும் 8% மட்டுமே பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிற போது அது எப்படி நியாயமான தேர்தலாக இருக்க முடியும். எனவே, பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி சக்தி அமைப்பு போராடுகிறது. அடுத்தடுத்த கட்டங்களைப் பொறுத்து சக்தியின் அணுகுமுறையிலும் மாற்றங்கள் இருக்கும்” என்றார்.