Published:Updated:

இனிக்க இனிக்கப் பேசும் காதலன்... நல்லவனா...? கண்டுபிடிக்க 7 டிப்ஸ்!

``உங்கள் காதலன் இப்படி உங்களிடம் கேட்டால், `நெட்டில் பார்த்துக்கோடா' என்று அந்தப் பேச்சை கட் பண்ணி விடுங்கள். ஒரு ஆணிடம் `நீ அழகி' என்று சர்ட்டிஃபிகேட் வாங்குவதைவிட, புத்திசாலியாக இருப்பதுதான் முக்கியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.''

இனிக்க இனிக்கப் பேசும் காதலன்... நல்லவனா...? கண்டுபிடிக்க 7 டிப்ஸ்!
இனிக்க இனிக்கப் பேசும் காதலன்... நல்லவனா...? கண்டுபிடிக்க 7 டிப்ஸ்!

பொள்ளாச்சி வல்லுறவு பற்றிய பேச்சும், அவர்களால் உடலும் மனமும் உடைந்துபோய் கிடக்கிற பெண்கள் பற்றிய பேச்சுமாகத்தான் தமிழ்நாடு தற்போது இருக்கிறது. குற்றவாளிகளுக்குக் காவல்துறையும் சட்டமும் அதி விரைவில் நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிற அதே வேளையில், இதுபோன்ற கயவர்களிடம் பெண்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான வழிமுறைகள், பல ஆண்களிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டால், அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்றும் சைக்காட்ரிஸ்ட் ஷாலினி இங்கே சொல்லித் தருகிறார். 

* நண்பன் அல்லது காதலன் என்று வந்துவிட்டால், அவர்களைக் கண்மூடித்தனமாக நம்புகிற உளவியல் பலவீனம் ஒன்று பெண்களிடம் இருக்கிறது. இதை முதலில் பெண்கள் புரிந்துகொண்டாலே, மோசமான ஆண்களால் வருகிற பல பிரச்னைகளிலிருந்து பெண்கள் தப்பித்து விடலாம்.

 * பெண்கள் எல்லோரும் ஆண்களைப் பற்றிய ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆண்களுடைய இயல்பே, அவர்கள் காரணமில்லாமல் பேச மாட்டார்கள். அவர்களுக்குப் பெண்களைக் கவருகிறபடி பேச தெரியாது. கொஞ்சம் கட முடா பேச்சுதான் அவர்களுடைய இயல்பு. இயற்கை, ஆண்களை அப்படித்தான் படைத்திருக்கிறது. இதற்கு மாறாக, ஓர் ஆண் வலிந்து பல மணி நேரம் உங்களிடம் மொக்கை போடுகிறான் என்றாலோ அல்லது பயங்கர ஸ்வீட்டாகப் பேசுகிறான் என்றாலோ, அவனிடம் நிறையவே எச்சரிக்கையாக இருங்கள்.

* காதலிக்கிற பெண்ணிடம், `நீ என்னை உண்மையா லவ் பண்ணா, உன்னுடைய அந்த உடல் பாகத்தைப் போட்டோ எடுத்து வாட்ஸ் அப் பண்ணு' என்கிற வக்கிரமான காதலன்கள் அதிகரித்துவிட்டார்கள். உங்கள் காதலன் இப்படி உங்களிடம் கேட்டால், `நெட்டில் பார்த்துக்கோடா' என்று அந்தப் பேச்சை கட் பண்ணி விடுங்கள். ஓர் ஆணிடம் `நீ அழகி' என்று சர்ட்டிஃபிகேட் வாங்குவதைவிட, புத்திசாலியாக இருப்பதுதான் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

* உங்களை நிஜமாகவே காதலிக்கிற ஆண், `உன் பேரன்ட்ஸ் கிட்டே பேசட்டுமா; எங்க அம்மாகிட்டே போனில் பேசுறியா' என்று திருமணத்துக்கான அடுத்தகட்ட நகர்வுகளைத்தான் செய்வார்களே ஒழிய, செக்ஸூவலாகப் பேச மாட்டார்கள். 

* இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும், பொள்ளாச்சிக் கயவர்களைப் போல திட்டம்போட்டு சில ஆண்கள் உங்களைப் பிடித்துவிட்டார்கள் என்றால்...  முடிந்தவரை உயிர் போகிற அளவுக்குக் காயம் ஏற்படாமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் மானம் இருப்பதாக குழப்பிக் கொள்ளாதீர்கள் பெண்களே. உங்கள் உடலில் இருக்கிற செல்கள் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். ஆனால், உயிர்தான் போனால் வராது. அதேபோல, தற்கொலை முடிவையும் எடுக்காதீர்கள். தப்பு செய்த ஆண்கள் உயிரோடு இருக்க, பாதிக்கப்பட்ட நீங்கள் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். தவிர, இன்றைக்கு நிறைய பெண்கள் அமைப்புகள் இருக்கின்றன. அவற்றின் உதவியுடன், உங்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கள். குற்றவாளிகளுக்கு தன்டணை வாங்கிக் கொடுப்பதற்காகவாவது நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். 

* பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், `நான் நம்பிப் போனதால்தானே இப்படி ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் காரணம், நான் தான்' என்ற குற்றவுணர்ச்சியில் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளியே வாருங்கள். உடம்பில் இருக்கிற காயங்கள் ஆறினாலும், நம்பிய ஆண் செய்த நம்பிக்கை துரோகத்தால், மனதின் காயங்கள் பெரும் ரணமாகத்தான் இருக்கும்.  ஒரு சைக்காட்ரிஸ்ட்டைச் சந்தித்து, உங்களுடைய மனதின் காயங்களை ஆற்றிக்கொள்ளுங்கள். 

* இதுபோல பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள், நடந்த சம்பவத்தைக் குத்திக்காட்டி பேசாதீர்கள். அவர்கள் நடந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர உதவுங்கள்..!