Published:Updated:

இன்டர்நெட்டில் முதன்முதலாக அப்லோடு செய்யப்பட்ட போட்டோவைப் பார்த்திருக்கீங்களா? #Web30

ஒட்டுமொத்த உலகையும் ஒற்றைத்தளத்தில் இணைத்து வைத்திருக்கும் வேர்ல்டு வைடு வெப்-பிற்கு நேற்று 30-வது பிறந்தநாள்.

இன்டர்நெட்டில் முதன்முதலாக அப்லோடு செய்யப்பட்ட போட்டோவைப் பார்த்திருக்கீங்களா? #Web30
இன்டர்நெட்டில் முதன்முதலாக அப்லோடு செய்யப்பட்ட போட்டோவைப் பார்த்திருக்கீங்களா? #Web30

லகில் எந்த மூலையிலிருந்தாலும், நமக்குத் தேவையான தகவலை யாருடைய உதவியும் இல்லாமல் இணையத்தின் மூலம், அதாவது கூகுள் மூலம் தேடித் தெரிந்துகொள்கிறோம். இதற்குக் காரணம் இணையத்தின் தந்தையான டிம் பெர்னர்ஸ் லீ தான். ஒட்டுமொத்த உலகையும் ஒற்றைத்தளத்தில் இணைத்து வைத்திருக்கும் வேர்ல்டு வைடு வெப்-பிற்கு நேற்று 30-வது பிறந்தநாள். 1989-ம் ஆண்டு டிம் பெர்னர்ஸ் லீ வேர்ல்டு வைடு வெப் (WWW) எனப்படும் வலையமைப்பின் மாதிரியைச் சமர்ப்பித்த மார்ச் 12-ம் தேதியை இணையத்தின் பிறந்தநாளாகக் கொண்டாடிவருகின்றனர். 

1960-ம் ஆண்டிலிருந்து இணையத்தைப் பயன்படுத்தி வந்தாலும், 1989-ம் ஆண்டு முதல்தான் இணையத்துடன் வலைதளத்தைப் பயன்படுத்துகிறோம். தற்போதைய காலகட்டத்தில் மக்களின் தேவைக்கு ஏற்றப்படி, 200 கோடிக்கும் அதிகமான வலைதளங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஆனால், இவ்வளவு வலைதளத்துக்கும் அடித்தளமாக இருப்பது Info.cern.ch தான். வேர்ல்டு வைடு வெப் (WWW) வலையமைப்பிற்குப் பின், 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ம் தேதி உலகின் முதல் வலைதளத்தை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

1989 மார்ச் 12-ம் தேதி ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) ஆய்வாளரான டிம் பெர்னர்ஸ் லீ வேர்ல்டு வைடு வெப் (WWW)எனப்படும் வலையமைப்பைச் சமர்ப்பித்து நேற்றுடன் 30 வருடங்கள் முடிந்துவிட்டன. இணையதளம் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி வந்திருந்தாலும் வேர்ல்டு வைடு வெப் (WWW)தான் இந்த உலகிற்குப் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1989-ம் ஆண்டு இவர் உருவாக்கிய மீயுரை (HTTP) திட்டத்தை இணையத்துடன் இணைத்து உலகளாவிய வலை எனும் வேர்ல்டு வைடு வெப் உருவாக்கி பிரவுசர் மூலம் அணுகும் வகையிலான முயற்சியை மேற்கொண்டார். உலக வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக WWW கருதப்படுகின்றது. 1994-ம் ஆண்டு CERN நிறுவனத்தை விட்டு வெளியேறிய டிம் பெர்னர்ஸ் லீ சர்வதேச அளவில் இணையத்தை ஒரே மாதிரியாக உருவாக்க அடிப்படை கோட்பாடுகளை வடிவமைக்க World Wide Web Consortium (W3C) என்ற மையத்தைத் தொடங்கினார். அதன் பிறகே Mosaic மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோர் தேடுதளம் அறிமுகமானது.

இணையத்தில் முதன்முறையாக புகைப்படம் ஒன்றை வலைதளத்தில் 1992-ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி டிம் அவர்கள் மைக்கேல் என்பவரின் உதவியுடன் பதிவிட்டார். அந்தப் புகைப்படம் Les Horribles Cernettes எனப்படும் பேன்ட் குழுவினரின் புகைப்படமாகும்.

இவரின் நோக்கம் என்னவென்றால், `இணையம் என்பது கலாசாரம் மற்றும் புவியியல் சார்ந்த எல்லைகளைக் கடந்து அனைவரும் ஒருவருக்கொருவர், செய்திகளைப் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான திறந்த மேடையாக இருக்க வேண்டுமென்பதே. ஆனால், இன்றைக்கு சமூக வலைதளங்கள் மூலம், நல்ல நோக்கங்களை நிறைவேற்றினாலும் பயன்படுத்துகின்ற சில தீயவர்களால், இன்றைக்குக் குற்றங்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துள்ளது. இணையத்தின் பிறந்தநாளையொட்டி டிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றைய வலைதளங்கள் மூன்று மிகப்பெரிய குறைகளைக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

1. ஹேக்கிங், குற்றச் செயல்களுக்கான ஆதரவு மற்றும் ஆன்லைன் தொல்லைகள் போன்றவை அதிகரித்துள்ளது.

2.விளம்பர அடிப்படையிலான வருவாய் மாதிரிகள், போலியான செய்திகள், வணிக ரீதியாகப் போலிச் செய்திகள் வைரலாகப் பரவுவது.

3. தவறான தகவல்கள் மற்றும் ஆன்லைன் சார்ந்த தகவலின் நம்பகத்தன்மை.

இன்றைக்கு இணையத்தில் முதன்மையான வலைதளமாக விளங்கும் கூகுள் நிறுவனம், வேர்ல்டு வைடு வெப் (WWW)-யை கௌரவிக்கும் விதமாகச் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பழைய கணினியைப் பின்புலமாகக் கொண்டு இணையத்தினை அணுகுவதைப் போல டூடுலை வெளியிட்டுள்ளது.

தற்போது இளைஞர்கள் / இளம்பெண்கள் நேரம் காலம் பார்க்காமல் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகிக்கொண்டு வருகின்றனர். நம் அன்றாட தேவைக்காக இணையத்தையே நாடிச் செல்கின்றோம். நாம் அனைவரும் இணையத்தின் மூலம் மிகச் சுலபமாகக் கண்காணிக்கப்படுகிறோம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது இல்லாமல் நாம் வாழவே முடியாது என்ற நிலை வரும்போது, அது மெதுவாக நமக்கு எதிராகத் திரும்பும் என்பதே உண்மை.