Published:Updated:

`கிரிக்கெட் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை!’ - 90’ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

`கிரிக்கெட் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை!’ - 90’ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்
`கிரிக்கெட் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை!’ - 90’ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

முந்தைய பகுதிகள் : பகுதி 1 l பகுதி 2 l பகுதி 3

``இந்தியா, உலகத்துலேயே ஏழாவது பெரிய நாடு. மக்கள் தொகையில் இரண்டாவது இடம். பல சாதிகள், பல மதங்கள், பல மொழிகள் எனக் கலாசார வேறுபாடுகள் நிறைந்த நாடு. இப்படிப் பல விஷயங்களில் வேற்றுமைபட்டுக் கிடந்தாலும், ஒரு விஷயத்தில் மட்டும்
நம் இந்தியர்களோட ஒற்றுமையை அடிச்சுக்கவே முடியாது. அதுதான் கிரிக்கெட்!’’ 
- தோழர் வெங்கட்பிரபு

90’ஸ் கிட்ஸுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்துவிதமான கிட்ஸுக்கும் கிரிக்கெட் பிரதானமான பேசுபொருளாக இருந்திருக்கிறது. கோலிக்குண்டில் ஆரம்பித்து கொய்யாபழம் வரை கைக்கு உருண்டையாக எது கிடைத்தாலும், அனிச்சையாக பவுலிங் போட ஆரம்பிப்பதே இதற்கு பெரும் சான்று. உண்மையில், கைக்குக் கிடைத்ததை எல்லாம் வைத்து கிரிக்கெட் விளையாடிய வரலாற்றுச் சிறப்பு 90’ஸ் கிட்ஸுக்கு உண்டு. ஒரு சோளக்கருதை வாங்கித் தின்றுவிட்டு, அந்தக் கட்டையை இரு துண்டாய் உடைத்து, அதில் ஒரு துண்டை எடுத்து, கட்டைவிரல் அளவு கட்டையைப் பந்தாகவும், பரீட்சை அட்டையைப் பேட்டாகவும் பயன்படுத்தி விளையாடியிருக்கிறோம். ஒரு சைக்கிள் டியூபை எங்கிருந்தாவது கொண்டாந்து குறுக்கும் நெடுக்குமாக வெட்டி, ஒன்றின் மேல் ஒன்றாகச் சுற்றி பந்தாக்கி, தென்னைமட்டையைப் பேட்டாக்கி விளையாடியிருக்கிறோம். இதேபோல், காலி வாட்டர் பாக்கெட்டுக்குள் பேப்பர்களைத் திணித்து பந்தாக மாற்றுவது, ஜூஸுக்கு வைத்திருக்கும் எலுமிச்சம்பழத்தில் `கேட்ச் அண்ட் கேட்ச்’ விளையாடுவது என எல்லாவற்றையும் கண்கள் கிரிக்கெட் பந்தாகவே பார்த்த காலம் அது. 

``எல்லாம் மாயா, எல்லாம் சாயா’’  - தோழர் பாபா

மட்டி ப்ளாஸ்டிக் பால், ஹீரோ பால், பெப்ஸி பால், டென்னிஸ் பால், விக்கி பால், ஸ்டம்பர் பால், கிரிக்கெட் பால், ஐஸ்க்ரீம் பால், ரேடியம் பால். இவை எல்லாம் அனைத்துலக கல்லி கிரிக்கெட் அசோஷியேசன் சார்பில் அஃபீஷியலாக அறிவிக்கப்பட்ட பந்துகள். இந்த ஒவ்வொரு பந்துக்குப் பின்னாலும் ரத்தமும் சதையும், அதிர்ச்சியும் ஆச்சர்யமுமான கதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளில் `நறுக்’, `சுருக்’ எனச் சில கதைகள் மட்டும்.

2003 கிரிக்கெட் உலகக் கோப்பைதான் எங்கள் செட்டுக்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது. அந்தக் காலத்தில்தான் பேட்டைத் தூக்கிக் கொண்டு தெருவுக்குள் குதித்தோம். பந்தை எடுக்க முட்செடிக்குள் கையைவிட்டு கீரியிடம் கடி வாங்கியது, யோசிக்காமல் சாக்கடைக்குள் கையைவிட்டது, சன் ஷேடில் விழும் பந்துகளை எடுக்க புதுக்கருவி ஒன்று கண்டுபிடித்தது என அதிர்ச்சியும் ஆச்சர்யங்களும் நிறைந்த காலகட்டம். பெரும் புயலோ, கடும் மழையோ, கொட்டும் வெயிலோ... எதுவும் எங்கள் கிரிக்கெட்டை பாதித்ததில்லை, அந்தப் பக்கத்து வீட்டு கிழவியைத் தவிர!

ப்ளாஸ்டிக் பந்து விரைவில் நெழிந்துவிடும் என்பதால், எளிதில் நெளியாத பந்தைத் தேர்ந்தெடுக்க, மாற்றி மாற்றி தொடையில் வெறிகொண்டு எரிந்து பார்த்து டெஸ்ட் செய்வோம். இப்படிப்பட்ட தியாகங்களை எல்லாம் செய்துவிட்டு, தெருவில் ஸ்டெம்பை ஊன்றினால், (இங்கே ஸ்டெம்ப் என்பது ஆயில் டின்) பாட்டி மாடியிலிருந்து தண்ணீரை ஊற்றிவிடும். `சரி, அடிக்கிற வெயிலுக்கு இதுவும் குளுகுளுன்னுதான் இருக்கு’ என அப்படியே விளையாட ஆரம்பித்துவிடுவோம். இதற்கு அடுத்தகட்ட அச்சுறுத்தலாக, அரிசி புடைத்துக்கொண்டே வாசலுக்கு வந்து அமர்ந்துவிடும்.

பந்து, பாட்டியின் பத்து அடி தூர எல்லைக்குள் சென்றுவிட்டால்போதும் குடுகுடுவென ஓடிவந்து பந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் கிளம்பிவிடும். ஒவ்வொருமுறை விளையாடும்போதும் எப்படியும் இரண்டு, மூன்று பந்துகளைப் பாட்டி அபகரித்துவிடும். எல்லா கிரிக்கெட் அத்தியாயமும் ஒரு ரத்தக்காவில்தான் முடிவடையும். அப்படித்தான் இந்த அத்தியாயமும் முடிவுக்கு வந்தது.

ஒருநாள், வழக்கம்போல் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம், பாட்டியும் வழக்கம்போல் அரிசி புடைக்க முறத்தைத் தூக்கிக்கொண்டு வந்தது. எங்களில் ஒருவன் சரியாகப் பந்தைப் பாட்டியின் எல்லைக்குள் அடிக்க, பாட்டியோ பந்தை எடுக்கக் குதூகலத்தில் குடுகுடுவென ஓடிவர, நாங்கள் எல்லோரும் `போச்சுடா’ எனத் தலையில் கைவைக்க, தரையில் கால் வைத்த பாட்டி தடுக்கி விழுந்து மூர்ச்சையானது. அடுத்த ஐந்தாவது நொடியில், ``டேய் ரத்தம் வருதுடா’’ என அலறினான் செல்வா. அன்று அவரவர் வீட்டுக்குத் தெறித்து ஓடியவர்கள்தான். அதன்பின் ஐந்தாறு வாரத்துக்கு பேட்டைத் தொடவில்லை. `காரைக்குடியில் இருந்த பாட்டியின் மகள், காரில் வந்து பாட்டியை அழைத்துப்  போய்விட்டார்’ எனப் பிரபாவின் அம்மா சொன்னதாக அவன் சொன்னான். 

``காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பைய்யடா!’’

அப்போது ப்ளாஸ்டிக் பந்திலிருந்து விக்கி பந்துக்கு மாறியிருந்தோம். டீமுக்குப் பெயர் சூட்டும் வைபவமும் நடந்து முடிந்திருந்தது, `டிராகன் பாய்ஸ்.’ சிரிக்காதீங்க, `பல்லி பயலுகளாம், பேர் வெச்சிருக்காய்ங்க பாரு’ என என் அப்பாவே ஒருமுறை கலாய்த்திருக்கிறார். நான் ராகுல் டிராவிட்டின் ரசிகன் என்பதால், `ப்ரிட்டானியா’ பேட் வாங்கி விளையாட வேண்டுமென்பது என் வாழ்நாள் கனவாய் இருந்தது. வாரக்கணக்கில் காலில் விழுந்து மன்றாடியதன் விளைவாக, பேட்டும் கைக்கு வந்து சேர்ந்தது. ஆனால், அது `ப்ரிட்டானியா’ கிடையாது, `ஹீரோ ஹோன்டா.’ நொந்துவிட்டேன்! பெயர் நோகடித்தாலும், புது பேட் சந்தோஷப்படுத்தியது.

எல்லோர் வீட்டுக்கும் சென்று, புது பேட்டைக் காட்டி விளையாட கூட்டி வந்தேன். விக்கி பாலில், முதல் பந்தை பேட்டில் வாங்கியதற்கே சப்பாத்தி மாவின் நடுவில் குத்தியதுபோல் பேட்டில் குழி விழுந்தது. அதைப் பார்த்து என் மனதுக்குள் பெரும் பள்ளமே விழுந்தது. ஆயில் பேட் வாங்கித் தரச் சொன்னால், மலிவு விலையில் கிடைக்குமென மாவு பேட் வாங்கிவந்திருக்கிறார்கள் என அப்போதுதான் புரிந்தது. அந்தப் பேட்டை அப்படியே, கொண்டுபோய் வீட்டில் வைத்துவிட்டு, புது பேட் ஒன்று உருவாக்கினேன்.

வீட்டில் கழட்டிவைத்திருந்த மரக்கட்டிலின் கால் ஒன்றை எடுத்து, ஹேண்டில் எல்லாம் சீவி, அன்றைய மேட்சில் அடி அடியென அடித்துத் துவைத்தேன் பவுலர்களை. அதற்கு `மேன் ஆஃப் தி மேட்ச் விருது’ வழங்க, கட்டிலின் இன்னொரு காலோடு என் வீட்டில் காத்திருந்தார்கள். அப்புறமென்ன, அவர்கள் என்னை அடிஅடியென அடித்துத் துவைத்தார்கள். அன்றிலிருந்து நான்கைந்து மாசம் கிரிக்கெட் பக்கமே போகவில்லை. 

``நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை!’’

கிரிக்கெட் விளையாடுவது கிட்டத்தட்ட போர்களத்தில் இருப்பதுபோல் திகிலாகவே இருக்கும். எப்போது எந்தத் திசையிலிருந்து எவன் அட்டாக் செய்வான் என்பதே தெரியாது. சிங்கிள்ஸ் ஆடும்போது யாரையாவது குனிய வைத்து அவனிடம் பேட்டிங் ஆர்டர் கேட்பார்கள். குனிந்தவன், தப்பித்தவறி நிழலைப் பார்த்துவிட்டால் போதும், மூச்சுக்குத்தாய் இறக்குவார்கள். பந்தில் அடிவாங்கினாள்கூட வீரத்தழும்பு எனத் தேய்த்துவிட்டு கிளம்பிவிடலாம், பேட்டில் அடிவாங்கினால் என்ன செய்வது!

ஒருமுறை, வகுப்புகளை முடித்துவிட்டு மாலையில் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தோம். இரண்டு ட்விஷன்களுக்கு இடையேயான மேட்ச் அது. நான் கீப்பிங் நின்றுகொண்டிருந்தேன். எதிர் டிவிஷன் பையன் ஒருவன், ஒரு கையால் ரஷ்னா குடித்துக்கொண்டே, இன்னொரு கையால் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தான். ஒருகடத்தில் அவன் அவுட்டாகி, அந்த விரக்தியில் பேட்டை தலைக்கு மேல் தூக்கி வீச, அது பல மரக்கிளைகளில் பட்டுத் தடுமாறி நேராக என் தலையில் வந்து விழுந்தது. ரத்தம் வடிய ஆரம்பிக்க, கேங் வாரும் ஆரம்பித்தது.

அதை வெற்றிகரமாய் முடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து, எனக்கு ஃபர்ஸ்ட்-எய்ட் செய்ய ஓடிவந்தார்கள், நண்பர்கள் எனும் குட்டிச்சாத்தான்கள். அந்த ஃபர்ஸ்ட் எய்ட் வேறு ஒன்றுமல்ல, காபி பொடி. காபி பொடியைக் கைகளில் கொட்டி காயம்பட்ட இடத்தில் அப்பிவிட்டார்கள். அதன்பின், இரண்டு வாரத்துக்கு கமகமவென காபி பொடி வாசத்தோடு அலைந்துகொண்டிருந்தேன். ஸ்கோரில் இரண்டு ரன்களை சேர்த்துச் சொன்னதுக்காக, ஸ்டம்பை எடுத்து கழுத்திலேயே போட்டது, ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கிறேன் என கீப்பரின் தாழ்வாய்கட்டையைப் பிளந்தது என ரத்தக்களரியாக இருக்கும் கிரிக்கெட் களங்கள்.

அதிலும் ஷேவாக்கை மானசிக குருவாக ஏற்றுக்கொண்ட சில முரட்டு பிளேயர்கள் இருப்பார்கள், அவர்கள் அடிப்பதை ஃபீல்டிங் செய்தாலே உள்ளங்கை வலிக்கும். கெரகத்த! அதேபோல், ப்ரெட் லீயைவிட வேகமாக எரியும் பவுலர்கள் இருப்பார்கள், அப்போது கீப்பராய் நிற்பவன் செத்தான். அப்படி இரண்டும் கலந்த முரட்டு பிளேயர் ஒருவர் எங்கள் ஊரில் இருந்தார், பெயர் படையப்பா!

இந்தப் படையப்பனோட இன்னொரு முகம், ஆறுமுகம். அதை நீ பார்க்காத, தாங்கமாட்ட, நொந்துடுவ!

- தோழர் ஆறுபடையப்பன்

என் ஊரில் தொட்டுத் தொடரும் ஒரு பட்டு பாரம்பர்யமான கிரிக்கெட் டீம் ஒன்று இருக்கிறது, சுடுஃபாரஸ்ட். பயப்படாதீர்கள், சுடுகாடு என்பதைத்தான் சுடுஃபாரஸ்ட் என மொழிபெயர்த்திருக்கிறார்கள். இப்போது அதைவிடப் பயமாய் இருக்கிறதா! உண்மையில், இந்த டீமின் பெயரைக் கேட்டாலே மற்ற டீமும் அரளும். ஸ்டம்பர் பந்து கிரிக்கெட்டில் சுடுஃபாரஸ்டை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்ற நிலை இருந்தது. அந்த டீமில் படையப்பா என்ற பிளேயர் இருந்தார். அவரின் நிஜப்பெயர் என்னவென்று இன்றுவரை தெரியாது.

ஸ்டம்பைவிட இரண்டு அடி உயரமாய் இருப்பார், ஆர்ம்ஸ் தெரிய அரைக்கை சட்டையும் லுங்கியும்தான் அணிந்திருப்பார். பந்துகளை அடித்து நொறுக்குவதைத் தாண்டி கிழித்து, உடைத்துவிடுவார் மனிதர். பந்துகளுக்கு கையும் வாயும் இருந்தால், அவர் காலைப் பிடித்து கதறியிருக்கும். கிரவுண்டுக்கு எந்த நேரம் சென்றாலும் படையப்பாவை பார்க்கலாம். செருப்புகூட அணியாமல் வெறும் கால்களோடு முள்ளுக்காட்டுக்குள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருப்பார். டீமுக்கு ஆள் இல்லாமல், சுற்றி முற்றி பார்த்தபோது, சிரித்துமுகமாக நான் நின்றிருக்கிறேன். `வா' என டீமில் சேர்த்துக்கொண்டார்கள்.

நான் படையப்பாவின் எதிர் டீம். இதை ஒருவரி திகில் கதையாகவே எடுத்துக்கொள்ளலாம். எனக்கு `பக்பக்’கென இதயம் அடித்துக்கொண்டது. ``நீ போய் ஸ்லிப்ல நில்லு’’ என மிட் விக்கெட்டில் ஃபீல்டிங் நிறுத்தினார்கள். முதல் பந்திலேயே, என் வயிற்றுக்கு `சலுப்'பென பந்தைச் செலுத்தினார் படையப்பா. அப்பப்பா... கண் இரண்டும் இருள, குப்பென வியர்த்து, சுருண்டுவிட்டேன். முழித்துப்பார்க்கும்போது, பத்து ஓவர் ஆடிவிட்டு, நாட் அவுட் பேட்ஸ்மேனாகப் படையப்பா, பவுலிங் போட ரெடியாகிக்கொண்டிருந்தார். அன்று அந்தக் கிரவுண்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் போட்ட கும்பிடு. பல வருடங்கள் கழித்து, டென்னிஸ் பாலில் விளையாட ஆரம்பித்தேன். ஸ்டம்பர் பந்துகளை இப்போது பார்த்தாலும் அடிவயிறு கலங்குகிறது.

சில வாரங்களுக்கு முன்னர், சொந்த ஊரிலுள்ள என் தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டுக்குச் செல்லும் வழியில், கையில் பேட்டோடு படையப்பா என்னைக் கடந்து போய்க்கொண்டிருந்தார். அதே அரைக்கை சட்டை, லுங்கி, காலில் இன்றும் செருப்பில்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்த கதை நிச்சயம் அவருக்குத் தெரிந்திருக்காது. ஆனால், அவர் வாழ்க்கையை கிரிக்கெட் முடித்துவிட்டது என்பது எனக்குத் தெரிந்திருந்தது.