Published:Updated:

டெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய டஸ்ட்டர்... என்ன எதிர்பார்க்கலாம்?

டெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய டஸ்ட்டர்... என்ன எதிர்பார்க்கலாம்?

பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கும் விதமாக, புதிய டஸ்ட்டரின் பானெட்டின் உயரத்தை அதிகரித்துள்ளது ரெனோ.

டெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய டஸ்ட்டர்... என்ன எதிர்பார்க்கலாம்?

பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கும் விதமாக, புதிய டஸ்ட்டரின் பானெட்டின் உயரத்தை அதிகரித்துள்ளது ரெனோ.

Published:Updated:
டெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய டஸ்ட்டர்... என்ன எதிர்பார்க்கலாம்?

டஸ்ட்டர்... க்விட்டுக்கு முன்பாக ரெனோவின் பெயரை இந்திய கார் சந்தையில் நிலைநிறுத்திய பெருமைக்குச் சொந்தக்கா(ர)ர். கச்சிதமான சைஸில் கட்டுமஸ்த்தான டிசைனுடன் களம்கண்ட இந்த மிட்சைஸ் எஸ்யூவி, நம்பகத்தன்மையான இன்ஜின் - சிறப்பான சஸ்பென்ஷன் - நல்ல இடவசதியுடன்கூடிய கேபின் என நீண்டதூரப் பயணங்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட கார் என்பதை பலரும் உணர்ந்திருப்பர். இந்த செக்மென்ட்டில் க்ரெட்டா `ரூட் தல' ஆகிவிட்டாலும், டஸ்ட்டருக்கு என ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது.

எனவே, ஏப்ரல் 1, 2020 முதலாக அமலுக்கு வரவிருக்கும் BS-6 மாசு விதிகள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப காரை மேம்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ரெனோ. சர்வதேசச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் முற்றிலும் புதிய டஸ்ட்டர் (HJD: குறியிட்டுப் பெயர்) 2019-ல் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் தகவல் சிலருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கும். புதிய டஸ்ட்டர் சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டபோது, அதைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான வி.அஸ்வின் கெளதம். 

காரில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கும் விதமாக, புதிய டஸ்ட்டரின் பானெட்டின் உயரத்தை அதிகரித்துள்ளது ரெனோ. இன்ஜினுக்கும் பானெட்டுக்குமான இடைவெளி அதிகமாகியிருப்பதால், ஒருவேளை காரின் முன்பக்கத்தில் பாதசாரிகள் யாராவது மோதினால், அவர்கள் காயமடைவதற்கான சாத்தியம் குறையும். மேலும், அதற்கேற்ப புதிய கிரில்லுடன்கூடிய பம்ப்பரும் இடம்பெறும். ஹெட்லைட்டின் டிசைன் தற்போதைய மாடலில் இருப்பதுபோலவே இருந்தாலும், LED DRL சேர்க்கப்பட்டிருப்பது ப்ளஸ்.

காரின் ரூஃப் பகுதியில் புதிய ரூஃப் ரெயில் தவிர சன்ரூஃப் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்! அலாய் வீல்கள் - பின்பக்க பம்ப்பர் - டெயில் லைட் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். தவிர, விரைவில் டிரைவர் காற்றுப்பை, ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் மற்றும் சீட் பெல்ட் வார்னிங் ஆகியவை தற்போதைய டஸ்ட்டரில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற கட்டுமானத்தை கார் கொண்டிருப்பதால், அதில் எந்த மாற்றமும் இருக்காது.

கடந்த மாதத்தில், மேம்படுத்தப்பட்ட க்விட் உடன் மாற்றியமைக்கப்பட்ட வேரியன்ட்களுடன்கூடிய டஸ்ட்டரை அறிமுகப்படுத்தியது ரெனோ. அதில் முன்பிருந்த டீசல் ஸ்டாண்டர்டு, RXL, RXZ AMT ஆகிய வேரியன்ட்கள் நீக்கப்பட்டன. எனவே, அதற்குப் பதிலாக RXS பெட்ரோல் வேரியன்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸும், RXS டீசல் வேரியன்ட்டில் AMT கியர்பாக்ஸும் ஆப்ஷனல் ஆக்கப்பட்டன. ஆனால், 110bhp RXZ வேரியன்ட்டில் மட்டுமே AWD அம்சம் இருக்கிறது. இதனால் டஸ்ட்டரை RxE - RxS - RxZ எனும் மூன்று வேரியன்ட்களில் மட்டுமே வாங்க இயலும்.

மேலும், க்விட் போலவே ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தை டஸ்ட்டரிலும் வழங்குகிறது ரெனோ. இப்படி சிற்சில முன்னேற்றங்கள் தற்போதைய மாடலிலேயே மேற்கொள்ளப்பட்டுவிட்டதால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவர உள்ள புதிய டஸ்ட்டரில் கேபினில்தான் பெரும்பான்மையான மாற்றம் இருக்கும். முன்பைவிட தரமான பிளாஸ்டிக்கால் ஆன டேஷ்போர்டில், முற்றிலும் புதிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம் இடம்பெறலாம். கூடவே கேப்ச்சரில் இருந்தும் சில விஷயங்கள் பெறப்படும். 

இன்ஜின்-கியர்பாக்ஸ் விலை எப்படி இருக்கும்?

தற்போதைய மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் H4K பெட்ரோல்/K9K டீசல் இன்ஜின்களே BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் எனத் தெரிகிறது. ஆனால், 110bhp (THP) பவரில் மட்டுமே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வெளிவரும் என்பதுடன், 85bhp மாடலின் விற்பனை நிறுத்தப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது. மற்றபடி பெட்ரோல் இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல்/CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனும், டீசல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் தொடரும்.

2012-ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்ட்டர், இரண்டாவது முறையாக பேஸ்லிஃப்ட் பெறவிருக்கிறது. 2016-ம் ஆண்டு வந்த முதல் பேஸ்லிஃப்ட்டில், காரின் தோற்றம் மாறியதுடன் கூடுதல் வசதிகளும் இடம்பெற்றது தெரிந்ததே. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் களமிறங்கப்போகும் டஸ்ட்டர், புதிய மாடல் போன்ற உணர்வைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரெட்டா தவிர எஸ்-க்ராஸ், கிக்ஸ், BR-V, கேப்ச்சர் ஆகிய மிட் சைஸ் எஸ்யூவிகளுடன் போட்டிபோடுகிறது டஸ்ட்டர் பேஸ்லிஃப்ட். தற்போதைய மாடல் 8-12.15 லட்சம் ரூபாய்க்கு (சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை) கிடைக்கும் நிலையில், புதிய மாடலின் விலை நிச்சயம் அதைவிட அதிகமாகவே இருக்கும்.