Published:Updated:

‘‘என் மகனுக்கு வீட்டிலேயே கல்யாணம் செய்துவைத்தேன்!’’ புதுப்புயலைக் கிளப்புகிறார் பொள்ளாச்சி திருவின் தாயார்

திருநாவுக்கரசு யாரையும் ஏமாத்தல. அவனத்தான் ரெண்டு பொண்ணுங்க ஏமாத்தினாங்க. அவனே நோயாளி, அவன் எப்படி இத்தனை பொண்ணுங்கள ஏமாத்துவான்.?

‘‘என் மகனுக்கு வீட்டிலேயே கல்யாணம் செய்துவைத்தேன்!’’ புதுப்புயலைக் கிளப்புகிறார் பொள்ளாச்சி திருவின் தாயார்
‘‘என் மகனுக்கு வீட்டிலேயே கல்யாணம் செய்துவைத்தேன்!’’ புதுப்புயலைக் கிளப்புகிறார் பொள்ளாச்சி திருவின் தாயார்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல, அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் பரஸ்பரம் புகார்க்கணைகளை வீச, விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களைக் காப்பாற்ற, முன்னுக்குப் பின் முரணாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து வருகின்றனர் போலீஸ் அதிகாரிகள். ஒரே நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு அதன்பிறகு சி.பி.ஐ-க்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க பொள்ளாச்சி நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், திருநாவுக்கரசின் பெற்றோரைச் சந்திப்பதற்காக, பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். அவரது வீட்டுக்கு வழி கேட்டபோது, பலரும் பயந்து விலகி, வழிசொல்ல மறுத்துவிட்டனர். ஒரு வழியாக அவரது வீட்டைக் கண்டுபிடித்துச் சென்றோம்.

வீட்டு வாசலில் ஸ்ரீ வெங்கட பாலாஜி ஃபைனான்ஸ் என்ற பெயர்ப்பலகை வரவேற்கிறது. அதில், திருநாவுக்கரசு மற்றும் அவரின் தந்தை கனகராஜ் ஆகியோரின் தொடர்பு எண்கள் இருக்கின்றன. வீட்டுக்கு வெளியே மூன்று கார்களும், வீட்டின் உள்ளே ஒரு காரும் என மொத்தம் நான்கு கார்கள் இருந்தன. திருநாவுக்கரசின் தாய் லதா வெளியில் வந்து நம்மைச் சந்தித்தார். நம்மை அறிமுகப்படுத்தியபோது, தன்னுடைய சோகங்களைச் சொல்லி ஆதங்கப்பட்டார். அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

“திருநாவுக்கரசு மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அவன் எம்.பி.ஏ படிச்சிருக்கான். படிச்சு முடிச்சு எங்க சின்னப்பம்பாளையம் வீட்டுக்குப் போய்ட்டு வரப்ப கார்ல ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. ஓப்பன் சர்ஜரி மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணோம். வாய்கூடப் பேச முடியல. லட்சக்கணக்குல செலவு பண்ணித்தான் அவன காப்பாத்தினோம். அதுக்காக இப்பவும் அவன் மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கான். அதுக்கப்பறம் ஃபைனான்ஸ் பண்றேன்’னு சொன்னான். எங்க வீட்டுக்காருகிட்ட பணம் கேட்டேன். தொடக்கத்துல மறுத்துட்டு, பிறகு 110 சென்ட் இடம், மூணு ஏக்கர் நிலத்த எல்லாம் வித்து காசு கொடுத்தாரு. எனக்கும் அவருக்கும் ஏழு வருஷமா பேச்சுவார்த்தை இல்லை. ஆனா, குழந்தைங்களை நல்லா வளர்த்தாரு. ஒவ்வொரு வருஷமும் இன்கம்டாக்ஸ் கட்டிட்டு இருக்காரு. என் மகன், காலைல 6 மணிக்கு வீட்டவிட்டுப் போனா, ராத்திரி 10.30 மணிக்குத்தான் திரும்பி வருவான்.

அவன நாங்க தப்பா வளர்க்கல. நான் தப்பானவளும் இல்லை. அவன் பொண்ணுங்கள எல்லாம் ஏமாத்தல. எங்க சொந்தக்கார பொண்ணைத்தான் ரொம்ப வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தான். அந்தப் பொண்ணும் இவன் மேல உயிரா இருந்தா. நிச்சயதார்த்தம் எல்லாம் முடிஞ்சு, கல்யாணத்துக்காக மண்டபத்துல அட்வான்ஸ் கொடுத்துருந்தோம். அப்பத்தான், அந்தப் பொண்ணு அரைகுறை ஆடைகளோட வேற ஒருத்தன்கூட இருக்கற போட்டோ திருவுக்கு வந்துச்சு. அதனால, அந்தப் பொண்ண வேண்டாம்’னு சொல்லிட்டான். அப்பறம், நகைக் கடைக்காரப் பொண்ணு, இவன் மேல ஆசைப்பட்டுச்சு. இவனுக்கும் அந்தப் பொண்ண ரொம்பப் பிடிச்சுருந்துச்சு. கைல பச்சை எல்லாம் குத்தியிருந்தான். வீட்லயே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சேன். ஆனா, கல்யாணம் நடந்த விஷயம் அவங்க வீட்டுக்குத் தெரியாது. கொஞ்சநாள் கழிச்சு, அவங்க பெற்றோர் சம்மதத்தோடு ஊரக்கூட்டி கல்யாணம் பண்ணிக்கலாம்’னு அந்தப் பொண்ணு சொல்லுச்சு. இவன் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆன ‘கேப்’புல, அவ இன்னொரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இவன் யாரையும் ஏமாத்தல. இவனத்தான் ரெண்டு பொண்ணுங்க ஏமாத்தினாங்க. அவனே நோயாளி... அவன் எப்படிப் பொண்ணுங்கள ஏமாத்துவான்?’’

“தவறு செய்யவில்லை என்றால் எதற்காகத் திருவை அடித்தார்கள்?”

“இங்க நிக்கறதுல ரெண்டு கார்தான் எங்களது. மீதி ரெண்டும் ஃபைனான்ஸ் கார். கார் வாங்கிட்டு ஃபைனான்ஸ் பண்ணிட்டு இருந்தான். தொழில் போட்டி அதிகம். இவனோட வளர்ச்சி பலருக்குப் பிடிக்கல. பரமகுரு, ஆனந்த், அருண் வெங்கடேஷ், லோக விக்னேஷ் எல்லோரும் சேர்ந்து இவனுக்கு எதிராக சதி பண்ணாங்க. வாங்கின காச, திருப்பிக் கொடுக்கிறதாச் சொல்லி கூப்பிட்டுப் போய், இவன எல்லாரும் சேர்ந்து அடிச்சாங்க. செல்போன் எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. கோவை கே.எம்.சி.ஹெச் ஆஸ்பத்திரியில அவன அட்மிட் பண்ணிருந்தேன்.

எட்டு நாள் என் பையனோட செல்போன் அவங்ககிட்டத்தான் இருந்துச்சு. அதுல அவங்க என்னென்னவோ ஏத்தி வெச்சுருக்கலாம். அவங்களே, யாரையோ கூப்பிட்டு, செட் அப் பண்ணி இந்த வீடியோவ எடுத்துருக்காங்க. அதுல என் பையன் இல்ல. இப்ப சமூக வலைதளங்கள்ல பரவிட்டு இருக்கற போட்டோ எல்லாம், திருவோட சொந்த தங்கச்சி கூட எடுத்தது. அவங்க எப்பவுமே போட்டோ எடுத்துட்டுத்தான் இருப்பாங்க. அண்ணன், தங்கச்சின்னுகூட பார்க்காம, இப்படி அபாண்டமா பொய் குற்றம் சொல்லிட்டு இருக்காங்க. என் பொண்ணு காலேஜ்க்குப் போக மாட்டேன்’னு சொல்லி அழுதுட்டே இருக்கா. தற்கொலை பண்ணிக்கறேன்’னு சொல்றா.

நான் திருப்பதி சாமியத்தான் கும்பிடுவேன். அவன கைது பண்ணப்போறாங்க’னு தகவல் வந்ததும், நான்தான் அவன திருப்பதி போகச் சொன்னேன். எப்பவும் நெத்தி நிறைய பொட்டு வைப்பேன். இப்ப, பொட்டு எல்லாம் வைக்கறது இல்லை.”

“திருவோட சேர்ந்து இப்போது கைதாகியுள்ள நண்பர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?”

“எல்லாம் அப்பப்ப வருவாங்க. போவாங்க. வசந்தகுமார் எங்க உறவுக்காரப் பையன். அவன், திருவுக்கு ஃபைனான்ஸ்க்கு உதவி பண்ணிட்டு இருக்கிறான். தினமும் வீட்டுக்கு வருவான். ஆனா, இவங்க எல்லாம் சேர்ந்து பண்ணை வீட்டுல அப்படித் தப்புப் பண்றதாச் சொல்றதெல்லாம் தவறு. அது பண்ணை வீடு இல்லை. கிராமத்துல இருக்கற வீடு. அதச்சுத்தியும் நிறைய வீடுகள் இருக்கு. நான், எப்பவாது அங்க போவேன். அப்பத்தான் திருவும் அங்க வருவான். அங்க அவன் தனியாகப் போகமாட்டான்.”

``இதில், அரசியல் தொடர்பு இருப்பதாகத் திருவே சொல்லியிருந்தாரே?”

எனக்கு அதப்பத்தி எதுவும் தெரியல. அவனோட அப்பா காங்கிரஸ்ல இருந்தது உண்மைதான். ஆனா, இவன் எந்தக் கட்சிலயும் இல்லை. தொழில் போட்டிதான் காரணம். சின்னப்பம்பாளையம்ல இருக்கற எங்க வீட்டுக் கதவை உடைச்சு, பீரோல இருந்து நிறைய ஆவணங்கள எடுத்துருக்காங்க. என் குடும்பத்துக்குச் சொல்ல முடியாத அவமானத்தை எல்லாருமா சேர்ந்து கொடுத்துட்டீங்க. இப்ப, எங்களுக்கு காசு கொடுக்க வேண்டிய யாரும் காசு கொடுக்க மாட்டேங்கிறாங்க. போலீஸ்ல சொல்லிருவேன்’னு மிரட்டுறாங்க. எனக்கு லட்சக்கணக்குல கடன் இருக்கு. ஒருத்தன ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க. இப்படியே போன நாங்க சுடுகாட்டுக்குத்தான் போகணும். எனக்கும் என் பொண்ணுக்கும் பாதுகாப்பு வேணும். என் பையனுக்கு நீதி கிடைக்கணும்.”

இதில் இருக்கும் அரசியல் தொடர்பு குறித்து நாம் பலமுறை கேட்டும், அதற்கு லதா பதில் சொல்லவில்லை. மாறாக, தங்களுக்கு வர வேண்டிய பணம் குறித்தே அவர் அதிகம் கவலைப்பட்டார். மேலும், பெண் வீட்டுக்கே தெரியாமல் தன்னுடைய மகனுக்குத் திருமணம் செய்து வைத்தது, பிரச்னை ஆனதும் திருவை திருப்பதிக்கு அனுப்பியது என்று லதாவின் செயலிலும் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதை நன்கு உணர முடிந்தது. 

`அவனுக்கு கெரகம் சரியில்லை. ஆடி போய் ஆவணி வந்தா மகன் டாப்பாக வருவான்’ என இருக்கும் தாய்மார்கள் இங்கு அதிகம் என்பதை மட்டும் உணர முடிகிறது.