Published:Updated:

``தம்பி ஸ்டான்... இந்தக் காரைக் கொஞ்சம் பார்க்கிங் பண்ணு!” - இது வித்தியாச ரோபோ

விமான நிலையம் போன்ற இடங்களில் பார்க்கிங் செய்வது தற்பொழுது கடினமான வேலையாக இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த ரோபோ மூலமாக அந்த நிலை மாறலாம்.

``தம்பி ஸ்டான்... இந்தக் காரைக் கொஞ்சம் பார்க்கிங் பண்ணு!” - இது வித்தியாச ரோபோ
``தம்பி ஸ்டான்... இந்தக் காரைக் கொஞ்சம் பார்க்கிங் பண்ணு!” - இது வித்தியாச ரோபோ

உலகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் மிகப் பெரிய சிக்கல் போக்குவரத்து நெருக்கடியும் பார்க்கிங்கும்தான். பைக் என்றால் கூட எப்படியாவது பார்க் செய்துவிடலாம். ஆனால், கார் இருந்தால் வண்டியை நிறுத்தச் சரியான இடத்தைத் தேட வேண்டியிருக்கும்.  எங்கேயாவது அவசரமான வேலையாகச் செல்லும்போது இந்தநிலை ஏற்பட்டால் நிலைமை திண்டாட்டம்தான்.  

விமான நிலையங்களை எடுத்துக்கொள்ளலாம். அங்கே செல்வதற்காகப் பெரும்பாலோனோர் கார்களைத்தான் பயன்படுத்துவார்கள். அப்படி ஒரு நாள், நீங்கள் செல்ல வேண்டிய விமானம் புறப்படத் தயாராக இருக்கிறது. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால்தான் காரில் விமான நிலையத்துக்குள்ளே நுழைகிறீர்கள். சில நிமிடங்களில் உள்ளே சென்றுவிட்டால் விமானத்தில் ஏறிவிடலாம். ஆனால், காரையும் பார்க்கிங் செய்ய வேண்டும், அதற்கான இடம் உடனடியாகக் கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். காரையும் விட முடியாது விமானத்தையும் விட முடியாது என்ற நிலையில் விமானப் பயணம் தடைப்படக் கூடும். எதிர்காலத்தில் இந்தச் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கலாம். எந்த வித குழப்பமும் இன்றி ஓரிடத்தில் காரை பார்க்கிங் செய்வது எளிதாக இருக்கக் கூடும். காரை பார்கிங் செய்யும் வேலையைச் செய்வதற்காக ஒரு ரோபோ வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

எப்படிச் செயல்படுகிறது இந்த ரோபோ?

கட்டடங்கள் இல்லாமல் வெளிப் புறப்பகுதிகளில் நிறுத்தப்படும் கார்களை பார்க்கிங் செய்வதற்காகப் பயன்பாட்டில் இருக்கும் உலகின் முதல் ரோபோ இதுதான். பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டான்லி ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனம்தான் இந்த ரோபோவை வடிவமைத்திருக்கிறது. இந்த ரோபோவுக்கு இதை உருவாக்கிய நிறுவனத்தின் பெயரைச் சுருக்கி ஸ்டான் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகில் பல இடங்களில் இதைப் போன்ற பார்க்கிங் செய்யும் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ஸ்டான் மற்ற ரோபோக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இப்போது பல நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் ரோபோக்கள் நிலையாகப் பொருத்தப்பட்டவை. காரை அதன் அருகில் சென்று நிறுத்தினால் அதற்காகக் கட்டப்பட்டுள்ள அடுக்குகளில் காரை கொண்டு போய் இந்த ரோபோக்கள் வைத்துவிடும். ஆனால், ஸ்டான் தரையில் எங்கே வேண்டுமானாலும் நகரும் திறன் கொண்டது. இது முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஓரிடத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்குப் பெரிய அளவில் மாற்றங்கள் எதையும் செய்ய வேண்டியிருக்காது. ஸ்டான் பயன்பாட்டில் இருக்கும் இடத்துக்கு எப்போதும்போல காரை ஓட்டிச் செல்லலாம். பின்னர் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் ஓர் அறையில் காரைக் கொண்டுபோய் நிறுத்திவிட வேண்டும். பின்னர் காரில் எடுக்க வேண்டிய பொருள்களை எடுத்துவிட்டு பார்க்கிங் வேலையை ஸ்டானின் கையில் ஒப்படைத்துவிடலாம்.

அறைக்கு வரும் ஸ்டான் ரோபோ இரண்டு சக்கரங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் புகுந்து காருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அப்படியே மேலே உயர்த்தும். அதை அப்படியே நகர்த்தி எந்த இடம் காலியாக இருக்கிறதோ அந்த இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும். வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால் சொன்னால் போதும் காரை பார்க்கிங் செய்யப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தூக்கி வந்து அறையில் நிறுத்திவிடும் ஸ்டான். அதன் பின்னர், எந்த சிரமமுமின்றி காரை எடுத்து ஒட்டிச் செல்லலாம்.

விமான நிலையம்தான் என்றில்லை பார்க்கிங் சிக்கல் இருக்கும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த ரோபோவைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்னால் பிரான்ஸில் இருக்கும் இரண்டு விமான நிலையங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தியவர்களில் 95% பேர் இதன் சேவை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். யுனைட்டெட் கிங்டம்மில்  இருப்பதிலேயே இரண்டாவது பெரிய விமான நிலையமான கேட்விக்கில் இந்த வருட இறுதியில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது ஸ்டான் ரோபோ

மீனம்பாக்கத்துக்கு வந்தால், தலை பத்திரம் ஸ்டான். இங்கே அடிக்கடி கூரை இடிந்து விழும்.