Published:Updated:

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

இயற்கை வேளாண்மை

கடந்த இதழ் தொடர்ச்சி...

தே
னி மாவட்டம், எரசப்பநாயக்கனூரில், ‘சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாய முறை’யில்… ஐந்தடுக்குச் சாகுபடி செய்து வரும் ஓய்வுபெற்ற வேளாண்மை இணை இயக்குநர் நாட்ராயன் குறித்துக் கடந்த இதழில் எழுதியிருந்தோம். தனது மகாராஷ்டிர மாநிலப் பயணம் குறித்தும் அங்கு கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்தும் நாட்ராயன் சொன்ன விஷயங்கள் இங்கே…

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

“சுபாஷ் பாலேக்கர் வழியில் விவசாயம் செய்யும் விவசாயிகளில் அதிகமானோர், வட மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான வெற்றி விவசாயிகள் இருக்கிறார்கள். அப்படிச் சிறப்பாக விவசாயம் செய்யும் விவசாயிகளின் பண்ணைகளைப் பார்வையிடும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அப்போது கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநராகப் பணியிலிருந்தேன்.  வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தியிடம் அனுமதி வாங்கி, நானும் அந்தப் பயணத்தில் கலந்து கொண்டேன். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதில் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் பல்வேறு பண்ணைகளைப் பார்வையிட்டோம். முதலில் நாங்கள் சென்றது, திலீப் ராஷ்கர் என்ற விவசாயிக்குச் சொந்தமான கரும்புத்தோட்டம். அங்கு கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருந்தன.  அந்த நிலத்தின் முக்கியப் பிரச்னை, கடும் உப்புத்தன்மை கொண்ட பாசன நீர். உப்பின் அளவு 3,000 டி.டி.எஸ். அதனால், பயிர் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, நிலம் பாறைபோல மாறிவிட்டதாம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

பெரிய டிராக்டர் மூலம் சிரமப்பட்டுத்தான் உழவு செய்ய முடியுமாம். அதைச் சரி செய்யப் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார், திலீப். பல வேளாண் ஆராய்ச்சியாளர்கள் சொன்ன பரிந்துரைகளைச் செயல்படுத்தியும் பலன் கிட்டவில்லை அவருக்கு. ஒருகட்டத்தில், 6 லட்சம் ரூபாய் செலவில் வாய்க்கால் வெட்டி, அரசுக்குச் சொந்தமான பொது வாய்க்காலில் இணைத்துத் தண்ணீர் கொண்டு வந்து பாசனம் செய்திருக்கிறார். அப்போதும் பலன் இல்லை. அந்தச் சமயத்தில்தான் அவர் ஜீரோ பட்ஜெட் கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு கற்றுத்தரப்பட்ட முறைகளைக் கடைப்பிடித்து, கரும்புச் சாகுபடி செய்ததில் நல்ல மாற்றம் தெரிந்துள்ளது.

நாங்கள் பார்த்தபோது ஐந்து மாத வயதில் நல்ல நிலையிலிருந்தது கரும்பு. ‘இந்த முறையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தபிறகு, மண்ணின் குணம் மாறி, பொலபொலப்பாக மாறிவிட்டது. என்னால் நம்பவே முடியவில்லை’ என்றார், திலீப். அதிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், களர், உவர் மண் நிலம் மற்றும் உப்புத் தண்ணீர் உள்ள நிலம் போன்றவற்றுக்குப் பாலேக்கரின் இயற்கை விவசாய வழிமுறைதான் சிறந்த தீர்வு.

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

திலீப்பின் கரும்பு வயலில் ஆரம்ப வளர்ச்சி நிலையில் பயிர் இருந்தபோது, தண்டுத் துளைப்பான் தாக்கியிருக்கிறது. அதற்குப் பத்திலைக் கரைசல் (தஷ்பாரணி கஷாயம்)தெளித்திருக்கிறார். உடனடியாக பலன் கிடைக்காததால், 15 நாள்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பத்திலைக் கரைசலைத் தெளித்திருக்கிறார். அதன்பிறகு, தண்டுத் துளைப்பான் முழுமையாகக் கட்டுப்பட்டுள்ளது. அந்த வயலில் நின்றபடி விவசாயிகளின் சந்தேகங்களைப் பாலேக்கர் தீர்த்து வைத்தார்.

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

அடுத்ததாக டாக்டர் புரமோத் பகத் என்பவரின் கரும்புத் தோட்டத்துக்குச் சென்றோம். அவர் ஒரு ஏக்கரில் சராசரியாக 70 டன் மகசூல் எடுத்து வருகிறார். அங்கு விளையும் கரும்பில் சர்க்கரை விகிதம் 13 சதவிகிதம் இருக்கிறது. 30 ஏக்கரில் கரும்புச் சாகுபடி செய்கிறார். நாங்கள் பார்த்தது, பன்னிரண்டாவது தாம்பு. பாலேக்கரின் புத்தகத்தைப் படித்துத்தான் இயற்கை வேளாண்மை முறையைத் தெரிந்து கொண்டு கரும்புச் சாகுபடியை ஆரம்பித்தாராம். தக்கைப்பூண்டு விதைத்து மூடாக்கு தயார் செய்து நடவு செய்திருக்கிறார். வரிசைக்கு வரிசை 6 அடி, பயிருக்குப் பயிர் 2 அடி இடைவெளியில் நடவு செய்திருக்கிறார்.

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

முதல் ஆண்டு ஏக்கருக்கு 90 டன் மகசூல் கிடைத்திருக்கிறது. இரண்டாம் ஆண்டு, 80 டன் கிடைத்ததாம். ‘இந்த முறை போதுமான மழை கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் 50 டன் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். நான் ஏக்கருக்கு 5,000 ரூபாய் செலவு செய்கிறேன். 1 டன்னுக்கு 3,200 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அந்த வகையில் 50 டன்னுக்கு 1,60,000 ரூபாய் கிடைக்கும். அதில் செலவு வெறும் 3 சதவிகிதம் மட்டும்தான். 97 சதவிகிதம் லாபம்’ என்றார்.

அடுத்து ஒரு மாதுளைத்தோட்டத்துக்குச் சென்றோம். மாதுளைச் செடிகள் நல்ல காய்ப்புடன் இருந்தன. மூடாக்குப் போடப்பட்டிருந்தது. அவரது தோட்டத்தில், மாதுளைச் செடிகளை ‘பாக்டீரியல் பிளைட்’ நோய் தாக்கியதால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கில் பணம் செலவழித்துப் பயிர் பாதுகாப்பு மருந்துகளைத் தெளித்தும் நோய் கட்டுப்படவில்லை. அதனால், மாதுளையை அழித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார், அந்த விவசாயி. 

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

அந்த நேரத்தில்தான் அவர் ஜீரோ பட்ஜெட் பயிற்சி கூட்டத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்கள் அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும், ‘இவ்வளவு செலவு செய்து சரியாகாதச் செடிகள், இதில் மட்டும் சரியாகி விடுமா’ என்ற மனநிலையில்தான் பாலேக்கரின் விவசாய முறைகளைச் செயல்படுத்தியிருக்கிறார்.

ஜீவாமிர்தத்தைத் தொடர்ந்து பயன்படுத்தியதில், செடிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாலேக்கரின் வேளாண்மை முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்ததில், செடிகளில் நோய் நீங்கி, நன்றாகக் காய்த்திருக்கின்றன. இப்போது அவரது பண்ணை, முன்னோடிப் பண்ணையாக மாறிவிட்டது.

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

அடுத்து கங்காதர் காதவ் என்பவரின் வாழைத்தோப்புக்குச் சென்றோம். திசுவாழைத் தோட்டம். பச்சை வாழையின் இரண்டாம் கட்டை அறுவடை நிலையிலிருந்தது.

அவர் ஜீவாமிர்தத்தைப் பத்து நாள்களுக்கு ஒருமுறை நிலத்தில் பாசன நீருடன் சேர்த்துக் கொடுப்பதாகவும், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தத்தைத் தெளிப்பதாகவும் சொன்னார். ‘ரசாயன விவசாயம் செய்யும் பக்கத்துத் தோட்டங்களில் ஒரு தார் சராசரியாக 25 கிலோ அளவுதான் உள்ளது. என்னுடைய வாழைத்தார் 40 கிலோ எடை இருக்கிறது’ என்றார் கங்காதர்.

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

அதற்கடுத்து விஜய் ஆதவ் என்ற விவசாயியின் வாழைத் தோட்டத்துக்குச் சென்றோம். நிலம் முழுவதும் வாழைமட்டை கொண்டு மூடாக்குப் போடப்பட்டிருந்தது. அதுவும் பச்சை வாழைதான். மூன்றாம் கட்டை. வாழைத்தார்கள் பிரமாண்டமாக இருந்தன. அந்தத் தார்களைப் பார்த்ததும் விவசாயிகள் ஆச்சர்யப் பட்டார்கள். ஒரு தாரின் எடை 40 கிலோவுக்கும் அதிகமாக இருந்தது. காய்கள் நல்ல திரட்சியாக இருந்தன. 

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

ஒவ்வொரு தூரிலும் அறுவடை முடிந்த காய்ந்த மரம், தாருடன் உள்ள வாழை, மூன்றாம் தலைமுறை இளம் பக்கக் கன்றுகள் என மூன்று தலைமுறை வாழைகள் இருந்தன. அங்கு கற்றுக்கொண்ட பல விஷயங்களை நான் எனது வாழைத்தோப்பிலும் பயன்படுத்தி வருகிறேன்” என்ற நாட்ராயன் நிறைவாக,

“கல்லும் சரளையும் நிறைந்த பல நிலங்களில் ஜீவாமிர்தத்தை மட்டுமே பயன்படுத்திக் குடமிளகாய், மாதுளை, வெந்தயம், பந்தல் காய்கறிகள் எனச் சிறப்பாகச் சாகுபடி செய்கிறார்கள் மகாராஷ்டிர விவசாயிகள். அவற்றைப் பார்த்தவுடன், ஜீவாமிர்தத்தில் கல்லையும் கரைக்கக்கூடிய நுண்ணுயிர்கள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு நாட்ராயன் செல்போன்: 95852 06516.

ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

பயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்!

மாடுகள் வைத்திருந்தால் மானியம்!

ந்திர மாநில அரசு, 2015-ம் ஆண்டு, ஜனவரி மாதத்திலிருந்து இயற்கை வேளாண்மை திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. தலைமைச் செயலர் அந்தஸ்தில் பதவி வகித்து ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், இத்திட்டத்தின் ஆலோசகராக இருக்கிறார். அவருக்குக் கீழே வேளாண்மை இயக்குநர். அவருக்குக் கீழ் 13 மாவட்ட இணை இயக்குநர்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்துக்காகப் பிரத்யேகமாக வேளாண்மை உதவி இயக்குநர் அந்தஸ்தில் ஒரு திட்ட மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்டத்துக்காக நிதி விடுவிப்பு அதிகாரம், வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் மாவட்ட திட்ட மேலாளர் ஆகியோரின் கூட்டு வங்கிக் கணக்கில் நிர்வகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்டலம் என்று சொல்லக்கூடிய தாலூகாவுக்கு ஒரு மண்டல வேளாண் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேளாண்மைப்பட்டம் பெற்ற அலுவலர். அவரின் கீழ் இரண்டு சமூக தொடர்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாயிகளாக இருக்க வேண்டும் என்பது விதி.

இவர்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் என்ற கணக்கில் இருபத்தைந்து நாள்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மீதி ஐந்து நாள்கள் அவர்களது சொந்தப் பண்ணையில் கட்டாயம் வேலை செய்ய வேண்டும். தலா 50 விவசாயிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும், ஒரு குழு செயற்பாட்டாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குச் சம்பளம் மாதம் 10,000 ரூபாய். இவர் உள்ளூர் முற்போக்கு ஜீரோ பட்ஜெட் விவசாயியாக இருப்பார்.

இதற்கான நிதி ‘பரம்பராக் கிரிஷி விகாஸ் யோஜனா’ (PKVY) என்ற மத்திய அரசின் திட்டத்திலிருந்து பெறப்படுகிறது. தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தன்னார்வ நிதி பெறப்பட்டுள்ளது. இதற்கு விப்ரோ நிறுவன அதிபர் அஜித் பிரேம்ஜி 100 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

இத்திட்டப் பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட நவீன சாதனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாலேக்கரின் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள், படம் போட்டு விவசாயிகளுக்கு விளக்கிச் சொல்லித் தரப்படுகிறது. திட்டத்தின் அன்றாடப் பணிகள், ஸ்மார்ட்போனில் உள்ள ஜிபிஎஸ் மூலம் சென்ட்ரல் சர்வீஸில் பதிவாகிவிடுகிறது. மேலும் வாட்ஸ்அப் மூலம் திட்டச் செயல்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. பணியாளர்கள், தினசரி 2 முதல் 4 புகைப்படங்கள் அனுப்ப வேண்டும். அவற்றில் ஒன்று திட்டம் சம்பந்தமாக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் 5 நாட்டுப்பசுக்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்குச் சாணம், கோமியம் சேகரிக்க உள்கட்டமைப்புக்காக 50,000 ரூபாய் மானியம் தரப்படுகிறது. 2 முதல் 4 பசுக்கள் வைத்திருப்பவர்களுக்கு 25,000 ரூபாய் மானியம். பசுமாடுகளைப் பராமரிக்க இயலாத விவசாயிகளுக்கு இயற்கை விவசாய அங்காடிகள்மூலம் பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி போன்றவை விநியோகம் செய்யப்படுகிறது.

விஞ்ஞானிகளை ஆச்சர்யப்படுத்திய விளைச்சல்!

“ப
யணத்தின்போது, ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், சின்னமண்டம் தாலூகா, மல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்ற நெல் விவசாயியைச் சந்தித்தேன். நெல்லூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் என்ற விஞ்ஞானி, ‘NLR 23334’ என்ற ரக விதை நெல்லை இவருக்குக் கொடுத்திருக்கிறார். 2016-ம் ஆண்டு செப்டம்பரில் விதைத்து, ஜனவரியில் அறுவடை செய்திருக்கிறார். அது 150 நாள்கள் பயிர். வெங்கட்ராமன், ‘பாலேக்கர் முறை இயற்கை விவசாயி’ என்பது அந்த விஞ்ஞானிக்குத் தெரியாதாம். பயிர் வளர்ச்சியின்போது வயலில் வந்து பயிர் வளர்ச்சி அளவீடுகளை அவ்வப்போது சோதித்துள்ளார், அந்த விஞ்ஞானி. அப்போது, வெங்கட்ராமனின் வயலில் மட்டும் நெல் பயிர், சிறப்பான வளர்ச்சியடைந்தது அவரை யோசிக்க வைத்திருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட நிலத்தில் 22 விஞ்ஞானிகள் கொண்ட குழுவின் முன்னிலையில், 25 சதுரமீட்டர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. அதில், 24.5 கிலோ மகசூல் கிடைத்திருக்கிறது. ஒரு ஏக்கருக்கு 3,920 கிலோ. அந்தப் பகுதியில் பொதுவாக ஒரு ஏக்கரில் 30 மூட்டைகள் முதல் 35 மூட்டைகள் (60 கிலோ) வரைதான் மகசூல் கிடைக்குமாம். வெங்கட்ராமனின் மகசூல் அளவு, 65 மூட்டைகள். அதைப் பார்த்த விஞ்ஞானிகள், மிகுந்த ஆச்சர்யமடைந்துள்ளனர்” என்றார் நாட்ராயன்.