Published:Updated:

“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்!

“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்!
பிரீமியம் ஸ்டோரி
News
“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்!

பாரம்பர்யம்

பாரம்பர்ய வேளாண்மை செய்து வந்த முன்னோர், விதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அப்போது விதை உரிமை, விவசாயிகளின் கைகளில்தான் இருந்தது. 

“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்!

குறிப்பாக மானாவாரி விவசாயிகள், எப்போதும் விதைகளை இருப்பு வைத்திருந்தனர். அவற்றின் முளைப்புத்திறனைச் சோதனை செய்து பார்க்கத்தான், கோயில் விழாக்களில் முளைப்பாரி எடுத்து வரும் பழக்கத்தை உருவாக்கினர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த வகையில், கோயில் திருவிழாவில் சிறுதானியங்கள் மற்றும் பலவகையான விதைகளை வைத்து வழிபாடு செய்வதுடன், பாரம்பர்ய விளையாட்டுகளையும் நடத்தி வருகின்றனர், அயன்வடமலாபுரம் கிராமத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி அருகில் உள்ளது அயன்வடமலாபுரம் கிராமம். இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மானாவாரி விவசாயமும் கரிமூட்டமும்தான் முக்கியத் தொழில். இக்கிராமத்தில் நடைபெறும் காளியம்மன் கோயில் திருவிழாவின் ஒருபகுதியாக விதைகளை வைத்து வழிபாடு செய்கிறார்கள் கிராமத்தினர்.

“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்!

சமீபத்தில், இக்கோயிலில் நடந்த திருவிழாவின் மூன்றாம் நாள் அன்று, ஆண்கள், பெண்களுக்கான பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில், கலப்பை, மேக்கால், சால் கலப்பை, நீர் இறைக்கும் பெட்டி, நீர் இறைக்கும் கமலை வாளி, மாட்டின் கழுத்தில் கட்டும் வார் சலங்கை, மூங்கில் குடுவை உள்ளிட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. அப்பகுதியில் மானாவாரியாக விளையும் கம்பு, வெள்ளைச்சோளம், இருங்குச்சோளம், மக்காச்சோளம், நாட்டுப்பருத்தி, கேழ்வரகு, குதிரைவாலி, எள், உளுந்து, துவரை, கொத்தமல்லி, தட்டைப்பயறு உள்ளிட்ட விதைகளையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.

அன்று மாலையில், மக்களின் பங்களிப்பாக அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில்… வாட்டர் ஃபில்டர், ஸ்பீக்கர், இருக்கைகள், நோட்டு புத்தகங்கள், கருத்துப்படங்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் கல்விச் சீராக வழங்கப்பட்டன.

“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்!

தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கான திருகை சுற்றுதல், உலக்கை குத்துதல், பல்லாங்குழி, புளியமுத்து செதுக்குதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. திருகையில் தானியத்தை இட்டு, குறுகிய நேரத்தில் திருகையில் சுற்றி மாவாக்க வேண்டும் என்பது போட்டியின் விதிமுறை. 14 பேர் கலந்துகொண்ட இப்போட்டியில், 93 வயதான வெங்கட லெட்சுமி என்ற மூதாட்டிதான் முதல் பரிசு பெற்றார்.

ஆண்களுக்கு இளவட்டக்கல் தூக்குதல், உறியடித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இளவட்டக்கல்லைத் தூக்க முயற்சி செய்தவர்கள் 16 ஆண்கள். ஆனால், விதிமுறைப்படி தூக்கியது 6 பேர் மட்டுமே. இந்த 6 பேருமே 40 வயதுக்காரர்கள்.

“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்!

இவ்விழா குறித்து அயன்வடமலாபுரம், கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம். “நிலத்தை உழுது விவசாயம் செய்வது ஆண்களாக இருந்தாலும், விளை பொருள்களைப் பாதுகாத்து, பக்குவப்படுத்துவது பெண்கள் தான். எப்போதும் விதைகள் வீட்டுப் பெண்களின் வசமே இருந்தன. விதைப்புக்கு முன்பாகச் செய்யும் விதைப் பரிசோதனைதான், முளைப்பாரி வளர்த்தல்.

மண் பாத்திரத்தில மண்ணுடன் மட்கிய சாணத்தைக் கலந்து, அதுல தானிய விதைகளை போட்டு, கிணற்றுத் தண்ணீரை ஊற்றி, அதன் வளர்ச்சியை வீட்டிலேயே தெரிஞ்சிப்பாங்க. வளர்ந்த பயிர்களை வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் வரிசையாகக் கோயிலுக்கு ஊர்வலமாகப் போயி வழிபட்டு, ஆத்துல இல்லைனா குளத்துல விட்டுடுவாங்க.

“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்!

‘நாம் யாரிடம் விதை வாங்கலாம்’ங்கிறதை கோயிலில் நன்றாக வளர்ந்த முளைப்பாரியைப் பார்த்து முடிவு செய்வாங்க. இது விதைப் பரிசோதனையாக மட்டுமில்லாம காலப்போக்கில், கோயில் திருவிழாவில் ஒரு வேண்டுதலாகவும் மாறிடுச்சு. எங்க கிராமத்துல ஒவ்வோர் ஆண்டும் நடக்கிற திருவிழாவில், மானாவாரியாக நாங்கள் விதைக்கிற விதைகளையும் முளைப்பாரியாக வளர்த்துக் கோயிலுக்கு ஊர்வலமா எடுத்துட்டுப் போய் வழிபடுவோம். அனைத்து விதைகளிலும் ஒரு கைப்பிடி அளவு தாம்பூலத்தில் வைத்து எடுத்து வழிபாடு செய்து, ஓர் ஓலைப்பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கிறோம். இதை இறைவழிபாடாக மட்டும் நினைக்காம, விதைகளுக்கான வழிபாடாகவும் நினைக்கிறோம். ஏன்னா, விதைகள்தான் எங்க குலசாமி.

ஒவ்வொரு பட்டத்திலும் விதைப்புக்கு முன்ன, விவசாயிகள் எல்லோரும் மண் பாத்திரத்தில் விதைகளைப் போட்டு ஊர்க்கோயிலுக்கு எடுத்துட்டுப் போய் வழிபாடு செய்த பிறகுதான் விதைப்போம். சித்திரை மாதம் பொன்னேர் உழவின்போது, மாடுகளை அலங்கரித்து, கலப்பைகள், விதைகளைக் கோயிலில் வெச்சு வழிபாடு செய்து கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் முதல்ல உழவு ஓட்டிவிட்டுத்தான் சொந்த நிலங்களில் உழவு அடிப்போம். நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் நல்ல அறுவடையைத் தர வேண்டும் என்பதோடு, நிறைவான மழைப்பொழிவுக்குமான கூட்டுப்பிரார்த்தனை இது” என்றார் மகிழ்ச்சி பொங்க.

“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்!

நாட்டு விதைகள் குறித்துப் பேசிய கிருஷ்ணசாமி, “சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் நாட்டு விதைகளின் கருவூலமாகக் கிராமங்கள்தான் இருந்துச்சு. நெல், கத்திரி, முருங்கை, தக்காளி போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிற ஊரின் பெயரிலேயே இருந்துச்சு.

ஒவ்வொரு ஊரின் மண்வளத்தால் தனிச்சுவையோடு, நாட்டு விதைகள் நடமாடுச்சு. விதைப் பரிமாற்றத்தால் விதைகள் பரவலாச்சு. பசுமைப் புரட்சியின் விளைவால், நாட்டு விதைகளின் பயன்பாடு குறைந்து போயிடுச்சு. அதனால, தனக்கான விதைகளைப் பாதுகாப்பது, சேமிப்பது, பிற விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்வதெல்லாம் மறந்து, வீரிய ரகங்களின் பக்கம்  விவசாயிகள் திரும்பிட்டாங்க.

சமீபகாலமாக விவசாயிகள் மத்தியில், நாட்டு விதைகளுக்கு வரவேற்பு அதிகரிச்சிருக்கு. எங்க பகுதியில 80 சதவிகித விவசாயிகள் கம்பு, மக்காச்சோளம்னு நாட்டுவிதைகளை மட்டும்தான் விதைக்கிறாங்க. ‘விதைகளே பேராயுதம்’ என நம்மாழ்வார் ஐயா சொன்னதைப்போல, மீண்டும் நாட்டு விதைகள் பெருகினாதான், ‘உணவே மருந்து’ என்று வாழ முடியும்” என்று எடுத்துக்காட்டுடன் சொல்லி முடித்தார்.

இ.கார்த்திகேயன், படங்கள்: ப.கதிரவன்