Published:Updated:

30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்!

30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்!

மகசூல்

“விவசாயிகள் தங்களது விளை பொருள்களில் ஒருபகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், சந்தையில் ஏற்படும் விலை சரிவை ஈடுசெய்ய முடியும்” என்று காலங்காலமாக வேளாண் பொருளாதார வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள். இதைச் சரியாகக் கடைப்பிடித்து நல்ல வருமானம் ஈட்டும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா கோபாலகிருஷ்ணன். இவர் தனது 2 ஏக்கர் தென்னந்தோப்பில் ஊடுபயிராகப் பலவகைக் கீரைகளை இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்து வருவதோடு, கீரைகளை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறார்.  ஈரோடு அடுத்துள்ள நத்தக்கடையூர் இச்சிக்காட்டுவலசு கிராமத்தில் இருக்கிறது, சுகன்யாவின் பண்ணை. கணவர் கோபாலகிருஷ்ணனுடன் கீரை வயலில் வேலை செய்து கொண்டிருந்த சுகன்யாவைச் சந்தித்தோம். சுடச்சுடக் கீரை சூப் கொடுத்து உபசரித்த சுகன்யா, மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்!

“இங்கே, எங்க குடும்பத்துக்குச் சொந்தமா 5 ஏக்கர் நிலம் இருக்கு. கீழ்பவானி வாய்க்கால் பாசனம் உண்டு. வாய்க்காலில் தண்ணீர் இல்லாத சமயங்களில் கிணத்துத் தண்ணீர் கைகொடுக்கும். 2 ஏக்கர்ல தென்னையும் 2 ஏக்கர்ல கரும்பும் 1 ஏக்கர்ல மரவள்ளியும் இருக்கிறது. ஆரம்பத்தில் ரசாயன விவசாயம்தான் செய்தோம். ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான் இயற்கைக்கு மாறினோம். 7 வருஷத்துக்கு முன்பு, பசுமை விகடன்ல காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த சுப்புங்கிறவரை பத்தின செய்தி வந்தது. அதைப் படிச்சிட்டு அவர்கிட்ட போன்ல பேசினோம். அவர் எங்க தோட்டத்துக்கே வந்து தங்கியிருந்து இயற்கை விவசாயம் பத்திச் சொல்லிக்கொடுத்தார். அப்போதிருந்து முழு இயற்கை விவசாயம்தான் செய்றோம். அதுக்காக 5 நாட்டு மாடுகளை வளர்க்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்!

தென்னைக்கிடையில் ஊடுபயிரா வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, முடக்கத்தான், முசுமுசுக்கை, மல்லி, புதினா, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரைனு 10 வகையான கீரைகளைச் சாகுபடி செய்துகொண்டு இருக்கிறோம். வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், கரிசலாங்கண்ணி, முசுமுசுக்கை, முருங்கை ஆகிய 6 கீரைகளை மட்டும் நேரடியா விற்பனை செய்றது மட்டுமில்லாமல் இட்லிபொடி, சாதப்பொடி, சூப் மிக்ஸ்னு மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்கிறோம்.

30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்!

ஆரம்பத்தில் இந்த மதிப்புக்கூட்டல் பொருள்களை விற்பனை செய்ய  ரொம்ப சிரமப்பட்டோம். ஈரோடு, திருப்பூர், கரூர் நகரங்கள்ல வீதி வீதியா அலைந்தும், பெரிய வரவேற்பு இல்லை. அப்புறம் சுப்பு ஐயா கொடுத்த யோசனைப்படி, பசுமை விகடனின் ‘பசுமைச் சந்தை’க்கு எழுதி அனுப்பினோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய பேர் போன் பண்ணி ஆர்டர் கொடுத்தாங்க. அவங்களுக்கு எங்க பொருள்களோட சுவை பிடித்துப் போகவும் தொடர்ந்து ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதுக்கப்புறம் தான் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.தொடர்ந்து நிறைய வாடிக்கையாளர்கள் இனிப்பு வகைகளைக் கேட்டாங்க. அவங்களுக்காகச் சிறுதானிய லட்டு, தேங்காய் மிட்டாய், கடலைக் கருப்பட்டி மிட்டாய், முளைக்கட்டிய சத்து மாவு, கம்பு அப்பளம், சிறுதானிய வடகம்னு தயாரிக்க ஆரம்பித்தோம். அதுக்கும் பசுமைச் சந்தை மூலமா நல்ல விற்பனை வாய்ப்பு கிடைச்சது. ஈரோடு, திருச்சினு பசுமை விகடன் நடத்தின வேளாண் கண்காட்சிகள்லயும் ஸ்டால்கள் போட்டோம். அதுல எங்களுக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சது” என்ற சுகன்யா தங்களது தயாரிப்புப் பொருள்களை எடுத்துக் காட்டினார்.

30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்!

மகசூல் மற்றும் வருமானம் குறித்துப் பேசிய கோபாலகிருஷ்ணன். “இப்போதைக்கு மாதம் 150 கிலோ வரைக்கும் சூப் பவுடர், இட்லிப்பொடி, சாதப்பொடினு தயாரிக்கிறோம். மதிப்புக்கூட்டல் மூலம் மாதம் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மொத்தம் 10 வகை கீரைகளையும் சேர்த்து மாதம் 2,000 கட்டுகள்வரை விற்பனை செய்கிறோம். கீரைக்கட்டுகளை ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருக்கும் இயற்கை அங்காடிகளுக்குத்தான் அனுப்புகிறோம். ஒரு கட்டுக்கு 10 ரூபாய் விலை கொடுக்கிறாங்க. அந்த வகையில 30 சென்ட் பரப்பில் மாதம் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மொத்தம் 40,000 ரூபாய் வருமானம். அதில் எல்லாச்செலவுகளும் போக, 35,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. சிறுதானிய இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்றது மூலமா மாதம் 40,000 ரூபாய் லாபம் கிடைக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய சுகன்யா, “நாட்டு மாடுகளின் சாணம், சிறுநீர் கொண்டு பஞ்சகவ்யா தயாரித்து 15 நாள்களுக்கு ஒருமுறை பயிர்களுக்குக் கொடுக்கிறோம். இலைவழி ஊட்டமாவும் இதையேதான் கொடுக்கிறோம். சுழற்சி முறையில் சாகுபடி செய்றதால, வருஷம் முழுவதும் கீரை கிடைச்சுக்கிட்டே இருக்கு. இதனால, வருமானம் வந்துக்கிட்டே இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தனர்.

தொடர்புக்கு  சுகன்யா கோபாலகிருஷ்ணண், செல்போன்: 98426 48426.

ஜி.பழனிச்சாமி, படங்கள்: வ.இர.தயாளன்