Published:Updated:

வீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்!

வீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்!

மகசூல்

“நமது இருப்பிடமும் தோட்டமும் எவ்வளவு தொலைவு இருந்தாலும் சரி… விவசாயத்தை நேசித்துச் செய்தால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார், பெங்களூருவைச் சேர்ந்த பிருந்தா. இவரது தோட்டம், விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்பில் நகரம் கிராமத்தில் இருக்கிறது. விடுமுறையில் வந்திருந்த பிருந்தாவைச் சந்தித்தோம்.

வீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்!

“தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிதான் எனக்குச் சொந்த ஊர். தாத்தா காலத்தில் மானாவாரியா பருத்தி, துவரை, நிலக்கடலை, மக்காச்சோளம்னு சாகுபடி செய்து வந்தாங்க. அப்புறம் விவசாயத்தை விட்டுவிட்டோம். நான், ஸ்கூல், காலேஜ் படிச்சதெல்லாம், பெங்களூருவிலும் சென்னையிலும்தான். பொறியியல் படிப்பு முடித்துவிட்டுச் சென்னை, பெங்களூருனு 18 வருஷமா வேலை பார்க்கிறேன்.

தற்சமயம், பெங்களூருவில், ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துகிட்டு இருக்கிறேன். என் கணவர் பாலாஜியும் ஐ.டி துறையில்தான் இருக்கார். 2013-ம் வருஷம் அவரைப் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் செய்தது அவருடைய நிறுவனம். அந்தச் சமயத்தில் வேலையிலிருந்து விலகி, ஏதாவது பிசினஸ் செய்யலாமானு யோசிச்சேன். ஆர்கானிக் பொருள்களுக்கான கடை வைக்கலாம்னு முடிவு செஞ்சு, அதற்குத் தேவையான விஷயங்களை இன்டர்நெட்ல தேடும்போதுதான், நம்மாழ்வார் ஐயா, சுபாஷ் பாலேக்கர்  பத்தியெல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்!

தொடர்ந்து, கர்நாடகா, தமிழ்நாடுனு சுத்தி பல இயற்கை விவசாயப் பண்ணைகளைப் பார்வையிட்டேன். அதில், புளியங்குடி அந்தோணிசாமி ஐயாவின் கரும்புத் தோட்டமும் ஒன்று. அங்கிருந்த மண்வளம், இயற்கைச் சூழலைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அதுக்கப்புறம்தான் ‘இயற்கை விவசாயம் செய்யலாம்’னு முடிவு செய்தேன். 2015-ம் வருஷம் என்னுடன் வேலை செய்த கோபால், ‘பசுமை விகடன்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, அதைப் படிக்க ஆரம்பித்தேன். அதுக்கப்புறம், நிலம் தேடினப்போதான், இந்த இடம் கிடைச்சது. 2016-ம் வருஷம் ஜூலை மாசம் வாங்கினோம். கிட்டத்தட்ட 10 வருஷமா சும்மா கிடந்த நிலம். சீமைக்கருவேல் மரங்கள் மண்டி இருந்தது. நிலத்தை விவசாயத்துக்குத் தயார்ப்படுத்தவே ஒன்றரை வருஷம் ஆச்சு. நிலத்தைச் சுத்தப்படுத்தி, உயிர்வேலி, பண்ணைக்குட்டை இரண்டையும் அமைச்சேன். அதன்பிறகு, ஐந்தடுக்கு விவசாயத்தைத் தொடங்கினேன்” என்று முன்னுரை கொடுத்த பிருந்தா தொடர்ந்தார்.

வீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்!

“இது மொத்தம் 13 ஏக்கர் சுண்ணாம்புக்கல் கலந்த நிலம். இதில் 4 ஏக்கரில் ஐந்தடுக்கு விவசாயம் செய்கிறேன். தோட்டத்தின் உட்புறமாக நிலத்தின் ஓரத்தில் கம்பிவேலி அமைத்து, அதையொட்டி உயிர்வேலி அமைத்திருக்கிறேன். நொச்சி, ஆடாதொடை, இலுப்பை, கொடுக்காப்புளி, மருதாணி, வாதாங்கொட்டை, புங்கன் ஆகிய கன்றுகளை உயிர்வேலியாக நடவு செய்துள்ளேன்.

உயிர்வேலியிலிருந்து உட்புறமாக 2 அடி இடைவெளியில், 2 அடி அகலம், 3 அடி ஆழம், 10 அடி நீளம் என்ற கணக்கில் இரண்டடி இடைவெளியில் அகழி அமைத்திருக்கிறேன். 75 சென்ட் பரப்பளவில் 6 அடி ஆழத்தில் பண்ணைக்குட்டை அமைத்திருக்கிறேன். பண்ணைக்குட்டையின் கரையில் வெட்டிவேர் நடவு செய்திருக்கிறேன்.

வீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்!

ஐந்தடுக்கு விவசாய முறையில்  முருங்கை, தென்னை, நெல்லி, வாழை, மாதுளை, பப்பாளி, அத்தி, கொய்யா, மா, சப்போட்டா ஆகியவற்றை நடவு செய்திருக்கிறேன். வரப்புகளில் மலைவேம்பு, தேக்கு, சந்தனம், மகோகனி, தீக்குச்சி மரம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறேன். தற்போது ஒரு ஏக்கரில் நிலக்கடலை அறுவடை முடிந்துள்ளது” என்ற பிருந்தா நிலக்கடலை மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“அணில், மயில், முயல்கள் ஆகியவை சாப்பிட்டதுபோக, 1 ஏக்கரில் 604 கிலோ நிலக்கடலை மகசூல் கிடைத்தது. அடுத்த விதைப்புக்காக 25 கிலோ கடலையை எடுத்து வைத்துவிட்டு மீதியைப் பெங்களூருவில் நேரடியாக விற்பனை செய்துவிட்டேன். ஒரு கிலோ 65 ரூபாய் வீதம், 579 கிலோ கடலையை விற்பனை செய்ததில் 37,635 ரூபாய் வருமானம் கிடைத்தது. உழவு, விதை, இடுபொருள்கள், களையெடுப்பு, அறுவடைனு 20,000 ரூபாய் வரை செலவாகிவிட்டது. அதுபோக, 17,635 ரூபாய் லாபமாகக் கிடைத்திருக்கிறது. அடுத்து, துவரையையும் எள்ளையும் சாகுபடி செய்யலாம்னு முடிவு செய்திருக்கிறேன்” என்ற பிருந்தா நிறைவாக,

“பையனின் படிப்பு முடிய இன்னும் 5 வருஷம் இருக்கிறது. அதுக்கப்புறம் வேலையை விட்டுவிட்டுத் தோட்டத்திலேயே குடியேறிடலாம்னு இருக்கேன். இப்போ மாதத்துக்கு ரெண்டு தடவைதான் தோட்டத்துக்கு வந்துபோகிறேன். இங்கே ரெண்டு பேர் வேலை செய்றாங்க. நான் போட்டு வைத்திருக்கிற அட்டவணைப்படி களை எடுத்தல், ஜீவாமிர்தம் தயாரித்தல்னு எல்லா வேலைகளையும் அவங்களே பார்த்துக்கிறாங்க. தினமும் காலையிலும் மாலையிலும் போன் பண்ணி பேசிவிடுவேன். அதனால், எல்லாம் சரியாகப் போயிட்டிருக்கு” என்றபடியே விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பிருந்தா,  செல்போன்: 72999 24616.

இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கர் பரப்பில் நிலக்கடலைச் சாகுபடி செய்வது குறித்துப் பிருந்தா கூறிய தகவல்கள் பாடமாக இங்கே…

வீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்!

இறவைப் பாசனத்தில் நிலக்கடலைச் சாகுபடி செய்ய சித்திரை, வைகாசி, ஆடி, கார்த்திகை ஆகிய மாதங்கள் ஏற்றவை. தேர்வு செய்த நிலத்தை இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு தொழுவுரத்தைக் கொட்டி ஓர் உழவு செய்து 10 நாள்கள் காயவிட வேண்டும். பிறகு, ஒருசால் உழவு அடித்துச் சாலில் விதையை ஊன்ற வேண்டும். ஒரு ஏக்கர் பரப்பில் விதைக்க 16 கிலோ விதைக்கடலை தேவை. ஒரு சணல் சாக்கில் விதைக் கடலையைக் கொட்டிப் பரப்பி 1 லிட்டர் பீஜாமிர்தத்தைத் தெளித்து நிழலில் உலர்த்திய பிறகுதான் விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்வதால் வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காது.

விதைத்த 5 முதல் 8 நாள்களில் முளைப்பு தெரியும். 20-ம் நாள்வரை 4 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு தேவைக்கேற்ப தண்ணீர்ப் பாய்ச்சினால் போதும். 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை, 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 25 மற்றும் 45-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் பூக்கள் பூக்கும். அந்த நேரத்தில் இலைக்கருகல் நோய் தாக்கலாம். அதனால், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பத்திலைக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

60-ம் நாளுக்கு மேல் மண்ணில் வேர் இறங்கும். அந்த நேரத்தில் களை எடுத்து மண் அணைத்துவிட வேண்டும். தொடர்ந்து அசுவினி, சிவப்புக் கம்பளிப்புழு ஆகியவை தாக்கலாம் என்பதால்… தொடர்ந்து அறுவடை முடியும் வரை வாரம் ஒருமுறை பத்திலைக் கரைசல் தெளிக்க வேண்டும். 65-ம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கும். 90-ம் நாளுக்கு மேல், செடிகளின் மேற்பகுதி இலைகளில் கரும்புள்ளிகள் தென்படும். அந்த நேரத்தில் ஒரு சில செடிகளைப் பிடுங்கிப் பார்த்துக் கடலை முற்றியிருப்பதைத் தெரிந்துகொண்டு அறுவடை செய்யலாம்.