Published:Updated:

அணு உலைக் கழிவுமையம்... ஆபத்தா இல்லையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அணு உலைக் கழிவுமையம்... ஆபத்தா இல்லையா?
அணு உலைக் கழிவுமையம்... ஆபத்தா இல்லையா?

ஓவியம்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி

‘கூடங்குளம் அணு உலை’ சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அடிக்கடி பழுது, இயந்திர முறைகேடு, முறையற்ற மின் உற்பத்தி எனப் பல சர்ச்சைகளைத் தாண்டி, இப்போது அணு உலைக் கழிவு மையம் அமைப்பதில் புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ‘கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்குப் பொதுமக்களிடம் கருத்துகேட்புக் கூட்டம் ஜூலை 10-ம் தேதி ராதாபுரத்தில் நடைபெறும்’ என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் தெரிவித்தது. இப்போது இந்தக் கூட்டத்தை  தேதி அறிவிக்காமல் தள்ளிவைத்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினரும் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

அணு உலைக் கழிவுமையம்... ஆபத்தா இல்லையா?

கூடங்குளம் அணு உலை தொடர்பாக `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து அணு உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது, அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக்கழிவு மையத்தை (Away From Reactor) அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதுதான். கால அவகாசம் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய இருந்த நிலையில், பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றத்தில் இந்திய அணுமின் சக்திக் கழகம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் ``அணுக்கழிவு மையத்தைக் கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை. இந்தியாவில் முதல்முறையாக இதைச் செய்யப்போகிறோம். அதனால் இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் 2022-ம் ஆண்டுக்குள் அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு வரைக்கும் கால அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில்தான் பொதுமக்கள் கருத்துகேட்புக்கூட்டம் குறித்த அறிவிப்பு.

அணுக்கழிவு மையத்தை அமைக்க இருப்பது பற்றி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் `ஆழ்நிலைக் கருவூலம்’ (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும் தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் AFR போன்ற தற்காலிக வசதியை நம்பித் தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது கவலைக்குரியது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்கும் தொழில்நுட்பத்தை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் சோதனை எலிகளாகத் தமிழ் மக்களை மாற்றும் இந்த விபரீதமான விஷயத்திற்கு, கூடங்குளத்தில் AFR அமைக்கத் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. நிரந்தரக் கழிவுமையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தவேண்டும், மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிட வேண்டும். ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு நிகழ்ந்த புகுஷிமா அணு உலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதன் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் அதிகம்” என்கிறார்.

அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் அணுக்கழிவாக மாறுகின்றன. அந்த அணுக்கழிவுகளை, குறைந்த அளவு, பாதியளவு மற்றும் அதிக அளவு வீரியமுள்ள கழிவுகள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். குறைந்த அளவு வீரியமுள்ள கழிவுகள் கடலுக்குள் கலக்கப்படுகின்றன. பாதியளவு வீரியமுள்ள கழிவுகள் ஆங்காங்கே புதைக்கப்படுகின்றன. அதிக அளவு வீரியமுள்ள கழிவுகள் முறையாகச் சேமிக்கப்படும். அணு உலைக்கழிவு, அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது.  அணு உலைக் குட்டையில் எட்டு ஆண்டு களுக்கு மட்டுமே சேமிக்க முடியும். எனவே, அணு உலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவு, உலைக்கு வெளியே எடுக்கப்பட்டுப் பாது காப்பாக வைக்கப்படும். இது AFR (Away From Reactor) மற்றும் DGR (Deep Geological Repository) என்று இரண்டு முறைகளில் பாதுகாக்கப்படும்.

இப்போது கூடங்குளத்தில் அமைய விருப்பது, AFR என்ற தற்காலிக அணுக்கழிவு மையம். ஆனால், அணுக்கழிவை DGR எனும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் பாதுகாப்பானது. ஏனெனில் அணுக்கழிவுகளைப் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் சேமிக்க வேண்டும். தற்காலிகமாகச் சேமிக்கும் மையத்தில் ஆழம் அதிகமாக இருக்காது. ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் விளைவுகள் கொடூரமானதாக இருக்கும். உலகில் பல நாடுகளில் அணுக்கழிவுகள் அந்தந்த அணு உலை வளாகத்துக்குள்தானே சேமிக்கிறார்கள் என்று தோன்றலாம். அதற்கான பலனை செர்னோபில், புகுஷிமா போன்ற அணு உலை விபத்து மூலம் அந்த நாட்டு மக்கள் அனுபவித்துக்கொண்டி ருக்கிறார்கள்.

ஓர் அணு உலை இயங்கும்போது லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரத்தைக் கொடுக்கலாம். சில காலங்களில் அணு உலைகள் ஓய்வெடுத்துக்கொள்ளும். ஆனால், அதன்பின்னர் அணுக்கழிவுகள் ஓய்வை முடித்துக்கொண்டு தனது பணியினைத் தொடங்கக் காத்திருக்கும். அணுக்கழிவு மையத்தில்தான் பல டன் எடை கொண்ட அணுக்கழிவுகள் உறங்கிக்கொண்டி ருக்கும். இவற்றைக் குளிர்விப்பது நின்றுவிட்டால் அது விழித்துக்கொள்ளும். அப்போது நேரும் துயரம் கொடூரமானதாக இருக்கும். இந்த அணுக்கழிவுகளில் உள்ள சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் செயலிழக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் புளூட்டோனியம் முழுமையாகச் செயலிழக்க, குறைந்தது 48,000 ஆண்டுகள் தேவை. அந்த 48,000 ஆண்டுகள் அணுக்கழிவு மையத்தை எந்த ஒரு பேரிடரும் தாக்காமல் இருக்க வேண்டும். இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் அணுக்கழிவுகளைக் கையாளும் முறையான தொழில்நுட்பம் எந்த நாட்டிடமும் இல்லை.  இதுபோன்ற காரணங்களை முன்வைத்துதான் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அணு உலைக் கழிவுமையம்... ஆபத்தா இல்லையா?

மக்களிடையேயும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எழுந்த பலமான எதிர்ப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையம், அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூடங்குளம் அணு உலையின் முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள் மட்டுமே அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்றும் மற்ற அணு உலைக் கழிவுகள் அங்கு சேமிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சேமித்து வைக்கப்படும் கழிவுகளில் கதிர்வீச்சு அபாயம் இருக்காது. அதை எதிர்காலத்தில் மாற்று விஷயங்களுக்கு உபயோகிக்கலாம். அணுக்கழிவு மையத்தால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நிலம் மற்றும் நீர் ஆகியவை மாசுபடாது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றியே இந்த மையம் அமைவதால், சுற்றுப்புற நீர், நிலம், காற்று ஆகியன மாசடையாது. அணுக்கழிவு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும்விட முக்கியமானது மக்களின் பாதுகாப்புதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- துரை.நாகராஜன்;

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு