Published:Updated:

``என் வாக்கு.. என் உரிமை!” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்

``என் வாக்கு.. என் உரிமை!” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்
``என் வாக்கு.. என் உரிமை!” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களித்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளைஞர் ஒருவர் திருச்சி காவிரி ஆற்றில் உருவாக்கி உள்ள மணல் சிற்பத்தை பொதுமக்கள் கண்டு ரசித்துவருகிறார்கள்.

வரும் ஏப்ரல் 18 -ம் தேதி தமிழகம் முழுவதிலும், ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு வகையாக திருச்சி காவிரி ஆற்றில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஓசரவிளை கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் சசிவர்மா என்பவர், திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி ஓவியத்தை உருவாக்கியுள்ளார். நாடாளுமன்றத்தின் முகப்புத் தோற்றத்துடன் கூடிய இந்த ஓவியம், அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தியும், ``எனது வாக்கு எனது உரிமை” என்கிற ஆங்கில வாசகத்துடன் தேர்தல் ஆணையச் சின்னம் உள்ளிட்டவை அடங்கிய மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட 3 லாரி மணலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பத்தை பொதுமக்கள் பலரும் நேரில் வந்து  பார்வையிட்டனர். பார்வையாளர்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

நம்மிடம் பேசிய ஓவியர் சசி வர்மா, ``இயற்கை மருத்துவ சிகிச்சை மூலம் மக்களுக்குச் சேவை செய்துவரும் எனக்கு, சின்னவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். அதன் தொடர்ச்சியாகத்தான், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் ஓவியங்களைத் தொடர்ந்து உருவாக்கி அதை மக்களுக்கு அர்ப்பணிக்கும் பணியைச் செய்து வருகிறேன். இது எனது 122 -வது மணல் சிற்பம்.

நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களிடமும், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு மணல் சிற்பம் வடிவமைக்க அதிகாரிகள் கேட்டிருந்தனர் அதன்படி இந்த மாற்றத்தை உருவாக்கியுள்ளேன். இந்தச் சிற்பத்தை உருவாக்க 6 மணி நேரம் செலவிட்டுள்ளேன். மேலும், இதை உருவாக்கும் பணியில் என்னுடன் என் இரு நண்பர்கள் பெரும் உதவி செய்தார்கள். இவ்வளவு சிரமப்பட்டு உருவாக்கியுள்ள இந்த மணல் சிற்பத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளோம். அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என்றார்.