Published:Updated:

குடிபோதையில் இருந்த கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி - அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குடிபோதையில் இருந்த கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி - அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
குடிபோதையில் இருந்த கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி - அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை மனைவியே எரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவியை காவல்துறை கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மத்து மடக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மஞ்சுளா. மதுவிற்கு அடிமையான குணசேகரன் போதையில் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தனது கணவனை விட்டுப் பிரிந்து நக்கம் பாடியிலுள்ள தன் பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் தன் மனைவியை அழைத்து வருவதற்காக நக்கம் பாடி கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது போதையில் சென்றதால் மஞ்சளா மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் தகராறு ஏற்பட்டது. பின்னர் குணசேகரன் போதையில் அருகிலிருந்த வைக்கோல் போருக்கு தீ வைத்து விட்டு மத்து மடக்கி கிராமத்திற்குச் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த குணசேகரனின் மனைவி மஞ்சுளா மற்றும் அவரின் உறவினர்கள் மத்து மடக்கி கிராமத்திற்கு வந்து போதையிலிருந்த குணசேகரனைத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குணசேகரன் சுயநினைவற்று கிடந்துள்ளார். இதனால் குணசேகரன் இறந்துவிட்டதாக நினைத்த மஞ்சுளா மற்றும் உறவினர்கள் அவர் உடல் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனையடுத்து குணசேகரன் போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கிராம மக்களிடம் நாடகமாடினார். இதனையடுத்து கிராம மக்கள் இறந்த குணசேகரன் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இந்தநிலையில்  குணசேகரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது அக்கா கணவர் பழமலை, இரும்புலிக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது குணசேகரன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனின் மனைவி மஞ்சுளா மற்றும் கொலை செய்ததற்கான தடயங்களை அழிக்க முயன்றதாகத் திராவிட கழக மாவட்ட நிர்வாகி ராமச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்