Published:Updated:

``அது ஒரு அதிபயங்கரமான அனுபவம்!''- நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் தப்பிய தமிம் இக்பால்

``அது ஒரு அதிபயங்கரமான அனுபவம்!''- நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் தப்பிய தமிம் இக்பால்
``அது ஒரு அதிபயங்கரமான அனுபவம்!''- நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் தப்பிய தமிம் இக்பால்

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால், `அதிபயங்கரமான அனுபவம்' என்று ட்வீட் செய்துள்ளார். 

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு மசூதிகளில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள டீன் அவென்யூ அடுத்ததாக லின்வூட் அவென்யூ பகுதியில் உள்ள இரு மசூதிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் பலியானதாகச் சொல்லப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், நியூசிலாந்தின் கறுப்புதினம் என்று தெரிவித்துள்ளார். டீன் அவென்யூ பகுதி மசூதிக்குள் 200 பேர் இருந்துள்ளனர். மசூதியின் பின்புறமாக வந்த ஒருவர் துப்பாக்கியால் 15 நிமிடங்கள் சுட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். 

தற்போது நியூசிலாந்தில் வங்கதேச கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. கிறிஸ்ட்சர்ச் டீன் அவென்யூ பகுதியில் உள்ள மஸ்தித் அல் நுர் மசூதியில் தொழுகை நடத்த பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்து மசூதி அருகே வந்த போதுதான் உள்ளேயிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. ஏதோ அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்ததால்,  யாரும் பேருந்தை விட்டு இறங்கவில்லை. பேருந்தை உடனடியாகத் திருப்பிவிட்டனர். ஒரு விநாடி நேரத்தில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் உயிர் தப்பினர். 

வங்கதேச கிரிக்கெட் போர்டு செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ், `இந்தச் சம்பவத்தால் வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அனைவரும் ஹோட்டலில் பத்திரமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்' என்று கூறியுள்ளார். வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால், `தொழில்முறை கொலையாளிகளிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். அனைவரும் எங்களுக்காக பிரார்த்தியுங்கள். இது ஒரு அதிபயங்கர அனுபவம்' என்று ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே, கிறிஸ்ட் சர்ச் நகரில் நடைபெற இருந்த நியூஸிலாந்து- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்துசெய்யப்பட்டுள்ளது.