Published:Updated:

டெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய எம்பிவி... எர்டிகாவை விட குறைவான விலை?!

டெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய எம்பிவி... எர்டிகாவை விட குறைவான விலை?!

க்விட்டின் 3 சிலிண்டர் BR10 - 1.0 லிட்டர் SCe பெட்ரோல் இன்ஜின்தான், இந்த பட்ஜெட் எம்பிவியிலும் பயன்படுத்தப்படும். ஆனால் கூடுதல் செயல்திறனுக்காக, இதில் டர்போசார்ஜர் இணைக்கப்படும்!

டெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய எம்பிவி... எர்டிகாவை விட குறைவான விலை?!

க்விட்டின் 3 சிலிண்டர் BR10 - 1.0 லிட்டர் SCe பெட்ரோல் இன்ஜின்தான், இந்த பட்ஜெட் எம்பிவியிலும் பயன்படுத்தப்படும். ஆனால் கூடுதல் செயல்திறனுக்காக, இதில் டர்போசார்ஜர் இணைக்கப்படும்!

Published:Updated:
டெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய எம்பிவி... எர்டிகாவை விட குறைவான விலை?!

போட்டி மிகுந்த இந்திய கார் சந்தையின் எம்பிவி பிரிவில் கோலோச்சுவது, மாருதி சுஸூகியின் எர்டிகாதான். இந்த காரின் முதல் தலைமுறை மாடலுக்குப் போட்டியாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ரெனோ களமிறக்கிய கார்தான் லாஜி. இது எர்டிகாவுடன் ஒப்பிடும்போது அதிக இடவசதி - பவர்ஃபுல் இன்ஜின் - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் என மெக்கானிக்கலாக அசத்தியது என்றாலும், டஸ்ட்டர்/க்விட் ஈட்டித்தந்த வெற்றியை இந்த எம்பிவி ரெனோவுக்குப் பெற்றுத்தரவில்லை.

எனவே, எர்டிகாவைவிடக் குறைவான விலையில் ஒரு புதிய எம்பிவி-யைக் கொண்டுவர இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. RBC என்ற புனைபெயரைக்கொண்ட இது, கடந்த ஆண்டு முதலே டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. இந்நிலையில் இதைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகரான ஆர்.சரவணராஜ். இதில் என்ன ஸ்பெஷல்?

டிசைன் - கேபின் - வசதிகள் எப்படி இருக்கும்?

க்விட் தயாரிக்கப்படும் CMF-A பிளாட்ஃபார்மின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான CMF-A+ல், இந்த காம்பேக்ட் எம்பிவி தயாரிக்கப்பட உள்ளது. எதிர்பார்த்தபடியே லாஜிக்குக் கீழே பொசிஷன் செய்யப்படவிருக்கும் இது, நான்கு மீட்டருக்குட்பட்ட காராகும். எனவே, அதற்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி, குறைவான விலையில் ரெனோவின் பட்ஜெட் எம்பிவி அறிமுகமாவதற்கான சாத்தியம் உண்டு. டட்ஸன் கோ ப்ளஸ் காரைப்போலவே, மூன்று வரிசை இருக்கைகளை (7 சீட்டர்) இந்த கார் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. எனவே, க்விட்டைவிட அதிக நீளம் மற்றும் வீல்பேஸில் இந்த எம்பிவி களமிறங்கும். ஒரே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கோ மற்றும் கோ ப்ளஸ், டிசைனில் பெரிய வித்தியாசத்தைக் காட்டாததால் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. எனவே, ரெனோ அந்தப் பாணியை இந்த எம்பிவி-யில் செலுத்தாது என நம்பலாம்.

எனவே, Profile ஒரே மாதிரி இருந்தாலும், தோற்றத்தில் க்விட்டில் இருந்து இந்த எம்பிவி வேறு மாதிரி இருக்கும். க்விட்டில் ஒரே வைப்பர் மற்றும் 3 Lug Nut கொண்ட வீல்கள் இருந்தால், எம்பிவி-யில் இரட்டை வைப்பர்கள் மற்றும் 4 Lug Nut கொண்ட வீல்கள் உள்ளன. படத்தைப் பார்க்கும்போது, அது 14 இன்ச் வீல்களாக இருக்கலாம். LED DRL, ரூஃப் ரெயில், அகலமான கிரில், Washer உடன்கூடிய பின்பக்க வைப்பர் போன்றவை, காரின் ஸ்டைலிங்கை உயர்த்தும்.

டூயல் டோன் ஃப்னிஷில் இருக்கக்கூடிய கேபினில், ஆங்காங்கே க்ரோம் வேலைப்பாடு இருக்கலாம். தவிர, கேப்ச்சரின் ஸ்டீயரிங் வீல், க்விட்டில் இருக்கும் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் - ஏசி வென்ட்கள், இந்த பட்ஜெட் எம்பிவி-யில் இருக்கும். இப்படி மற்ற ரெனோ கார்களில் இருக்கும் பாகங்கள் கேபினில் இருந்தாலும், டேஷ்போர்டின் டிசைன் புதிதாக இருக்கும் எனத் தெரிகிறது. க்ராஷ் டெஸ்ட் விதிகளை மனதில்வைத்து இரண்டு காற்றுப்பைகள் - பின்பக்க பார்க்கிங் சென்சார் - ரிவர்ஸ் கேமரா - ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் - சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை காரில் இடம்பெறும். டாப் வேரியன்ட்களில் பக்கவாட்டுக் காற்றுப்பைகள் மற்றும் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் இருக்கலாம். 

க்விட்டில் இருக்கும் மூன்று சிலிண்டர் BR10 - 1.0 லிட்டர் SCe பெட்ரோல் இன்ஜின்தான், இந்த பட்ஜெட் எம்பிவி-யிலும் பயன்படுத்தப்படும். ஆனால், கூடுதல் செயல்திறனுக்காக, இதில் டர்போ சார்ஜர் இணைக்கப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது. இதற்கு 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கும்.

இதற்கு இணையான சிறிய சைஸ் டீசல் இன்ஜின் ரெனோவிடம் இல்லை என்பதுடன், இந்த எம்பிவி-யின் சிறிய இன்ஜின் Bay-வில் டீசல் இன்ஜினைப் பொறுத்துவது கொஞ்சம் கடினம். தவிர, BS-6 மாசு விதிகளின்படி டீசல் இன்ஜின்களின் விலை அதிகரிக்கும் என்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்த காம்பேக்ட் எம்பிவி-யில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருப்பதற்கான சான்ஸ் குறைவுதான்!

ஜூன் 2019 வாக்கில் வரவிருக்கும் இந்த பட்ஜெட் எம்பிவி, மிட்சைஸ் ஹேட்ச்பேக்குகளுக்கு இணையான விலையில் வெளிவரலாம். இந்தப் புதிய ரெனோ கார், 4.5 - 5 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையைக்கொண்டிருக்கும். குறைவான விலைக்கு 7 சீட்கொண்ட கார் என்பது வெற்றிக்கான ஃபார்முலாவாகத் தெரிந்தாலும், இதே பாணியைக்கொண்ட டட்ஸன் கோ ப்ளஸ் பின்தங்கியது ஏனோ? க்விட்டுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிகப்பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கும் ரெனோவுக்கு, இந்த காம்பேக்ட் எம்பிவி அதை ஈட்டித்தரும் என நம்பலாம்.