Published:Updated:

"பத்தோடு பதினொன்றாக இருக்காதே!" காமன்வெல்த் சாம்பியன் நிலாவின் ரகசியம்

"பத்தோடு பதினொன்றாக இருக்காதே!" காமன்வெல்த் சாம்பியன் நிலாவின் ரகசியம்
"பத்தோடு பதினொன்றாக இருக்காதே!" காமன்வெல்த் சாம்பியன் நிலாவின் ரகசியம்

டந்த ஆண்டு, லண்டனில் நடந்த காமன்வெல்த் போட்டியில், ஃபென்சிங் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், வெண்கலம் பதக்கம் வென்றவர் நாமக்கலைச் சேர்ந்த நிலா. எளிமையான குடும்பத்திலிருந்து பெரும் வெற்றியைப் பெற்ற நிலாவுக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. அவர், சமீபத்தில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழிற்நுட்ப கல்லூரியில் பெண்கள் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவரின் பேச்சு, கல்லூரி மாணவர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிப்பதாக இருந்தது. எப்போதும் நம்பிக்கை வார்த்தைகளைப் பேசும் வீராங்கனை நிலாவிடம் பேசினோம். 

``எனக்குச் சொந்த ஊரு கிருஷ்ணகிரி. படிச்சதெல்லாம் அங்கதான். ஐந்தாவது படிக்கும்போது கோ-கோ, வாலிபால், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகள்தான் எல்லோரும் ஆர்வமாக விளையாடினாங்க. ஆனா, அப்போ எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபென்சிங் விளையாட்டு எனக்குப் பிடிச்சிருந்தது. ட்ரை பண்ணி பார்ப்போம் என்றுதான் ஆட ஆரம்பிச்சேன். இப்போ, அதுவே வாழ்க்கையாக மாறிடுச்சு. ஆறாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே ஃபென்சிங் பயிற்சி எடுத்துட்டு வரேன். சாதாரணமான குடும்பம்தான் எங்களுடையது. வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் என் தன்னம்பிக்கை மட்டும் விட்டுவிடக் கூடாது என்ற உறுதியில் இருந்தேன். அப்பா, மாதேஷ் வொர்க் ஷாப்ல வெல்டரா இருக்கிறார். அம்மா வீட்டிலதான் இருக்காங்க. ஒரு அக்கா. இதுதான் எனக்கான உலகம். இவங்களோட ஊக்குவிப்பும் உதவியும்தான் என்னோட எல்லா வெற்றிக்கும் அடித்தளமாக இருக்கு. இதுவரை 20 தேசிய விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துகிட்டு, அதில் 16 வெற்றிகளைப் பெற்றிருக்கேன்’’ என்றவர் முகத்தில் பெருமிதம். சிறு இடைவெளி விட்டுத் தொடர்கிறார். 

``என்னிடம் பேசுவர்களிடம் நான் சொல்வது ஒரு விஷயம்தான். சமூகத்தில் எப்போதும் பத்தோடு பதினொன்றாக இருக்காதே. வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் வெற்றிக்கான வழி பிறக்கும் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என் வாழ்வில் வந்த வாய்ப்பைப் புரிந்துகொண்டு, பயன்படுத்தியதால் மட்டுமே, சிறுவயதில் இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடிந்தது. என் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது, பயிற்சியாளார்தான். அவர்தான் ரோல் மாடல். என் மீது அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்புகளைத் தருகிறார். அடுத்தகட்டமாக 23வது ஆசியப் போட்டிக்காகத் தயாராகி வருகிறேன்.

இந்தக் காலத்தில், பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது நேரத்தைச் செலவிடுகிறார்கள். அது சரி, தவறு என்று விவாதத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்துதான். நானும் மொபைல் பயன்படுத்துகிறேன். அதை, என் விளையாட்டு சம்பந்தமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாம் எந்தத் துறையில இருக்கிறமோ அந்தத் துறையிலுள்ள தகவல்களை மேலோட்டமாக இல்லாமல், ஆழமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ரொம்பவும் அடிப்படையான பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்து, நமக்குக் கிடைக்கும் மரியாதைக்கு நாம் உடுத்தியிருக்கும் ஆடைக்கு முக்கியப் பங்குண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு நிகழ்ச்சிக்கு, நாம் ஒரு ஸ்போர்ட்ஸ் டிரஸ்ல போனோம் என்றால், இவங்க இந்தத் துறையில சாதிக்க போகிறாங்க என்ற எண்ணத்தை மத்தவங்களுக்கு உணர்த்திவிடலாம். தேவையே இல்லாமல் அடுத்தவர்களிடம் பேசுவதால் மட்டுமே பல பிரச்னைகள் வருகிறது. அதைத் தவிர்ப்பது நல்லது’’ என்றார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசுகையில், ``பொள்ளாச்சியில் நடந்து வரும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. உண்மைத் தகவல்கள் அறிக்கை வெளிவந்த பிறகு, குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை கொடுக்க வேண்டும்’’ என்று தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.