Published:Updated:

தமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்
தமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்

தமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்

பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்

மதுரை - கழிவு நீர் ஓடையான வைகை நதி!

துரை மாவட்டத்தில் மாடக்குளம் கண்மாய், வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய், திருப்பரங்குன்றம் கண்மாய், நிலையூர் கண்மாய் போன்றவை மிகப்பெரிய கண்மாய்கள். இதுபோலப் சிறிதும் பெரிதுமாகக் கிட்டத்தட்ட 2,500 கண்மாய்கள் உள்ளன. ஆண்டுதோறும் மழைக்காலத்துக்கு முன்பு கண்மாய்களில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு தண்ணீர் தேக்கப்படுகிறது. ஆனாலும் சில வாரங்களுக்குள் தண்ணீர் வற்றி விடுகிறது. இந்த ஆண்டு மிகப்பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது, மதுரை மாவட்டம்.

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம்மூலம் தண்ணீர் கிடைக்கும் பகுதிகளில் தட்டுப்பாடு கட்டுக்குள் இருக்கிறது. வைகை நதிக்கரை ஓரங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. உசிலம்பட்டி பகுதியில் 58-ம் கால்வாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகப் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது.

தமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்

29 அடி ஆழம் கொண்ட சாத்தையாறு அணையில் 10 அடிக்கு வண்டல் மண் மேவிக்கிடக்கிறது. அதனால், ஒரு மழைக்கே அணை நிரம்பி விடும். நிரம்பிய வேகத்திலேயே வற்றி விடும். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையிலிருந்து வரும் தண்ணீர் இந்த அணையில் சேகரமாகிறது. அணையில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அரசு அனுமதித்தாலே அணை தூர்வாரப்பட்டுவிடும். சாத்தையாறு அணைதான் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரம்.

வைகை நதியில் சாக்கடைக் கழிவுகள் கலப்பது தடுக்கப்படவில்லை. கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்துக் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருக்கின்றன.

மதுரையில் ஆரம்ப காலத்திலிருந்தே நீர்நிலை களைப் பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொல்லப்போனால், அரசே பல நீர்நிலைகளை அழித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, உலகத் தமிழ்ச்சங்கம், மாநகராட்சி அலுவலகம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசுக் கட்டடங்கள் கண்மாய் களை அழித்துத்தான் கட்டப்பட்டிருக்கின்றன.

- அருண் சின்னதுரை
படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்

நாகப்பட்டினம் - குடிநீருக்கு ஆப்பு வைக்கும் மணல் குவாரிகள்!

மிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களுக்கும் குடிநீர் வழங்கிவரும் ஜீவ நதியான கொள்ளிடம் ஆறுதான், நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கும் குடிநீர் ஆதாரம். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்மூலம் அனைத்து கிராம மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள்மூலம் தினமும் கிட்டத்தட்ட 2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்

தற்போது, நாகப்பட்டினம் மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றுக்குக் குறுக்கே 4.30 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

கொள்ளிடம் ஆற்றில் வகைதொகை இல்லாமல் மணல் அள்ளப்பட்டு வருகிறது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. உடனடியாக மணல் குவாரிகளை மூட வேண்டியது அவசியம். அதோடு ஒவ்வோர் ஆண்டும் ஆற்றில் ஓடி வரும் வெள்ள நீர் கடலில் கலந்து வீணாகிறது. அதைத்தடுக்கும் வகையில் ஆற்றுக்குக் குறுக்கே பல தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதனால், நீர் சேமிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் செறிவூட்டப்படும்.

 - மு.இராகவன்
படம்: பிரசன்ன வெங்கடேஷ்

கோயம்புத்தூர் - சகதி மேவிய பில்லூர்... தண்ணீர் வற்றிய சிறுவாணி!

கோ
யம்புத்தூர், சிறுவாணி நீரின் சுவை உலகப்புகழ் பெற்றது. ஆனால், தற்போது கோவை மாவட்டமும் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது. ‘தண்ணீர் பஞ்சம் வதந்தி’ என்று சொன்ன அமைச்சர் வேலுமணியின் சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூரிலேயே, தண்ணீர் கேட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. சிறுவாணி, பில்லூர் 1,2, வடவள்ளி – கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆழியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்றவைதான் கோயம்புத்தூருக்கான குடிநீர் ஆதாரங்கள். கோடைக்காலத்தில் சிறுவாணி அணையின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்துவிடும். அந்த நேரத்தில் பில்லூர் அணைமூலம் குடிநீர் விநியோகிக்கப்படும். இதனால் கோயம்புத்தூருக்கு இதுவரை பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு வந்ததில்லை.

தமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்

கடந்த ஆண்டு நான்கு முறை நிறைந்த சிறுவாணி அணையின் நீர் மட்டம், இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துவிட்டது. சிறுவாணியில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். ஆனால், தற்போது 863.81 சதுர மீட்டர் பரப்பில்தான் தண்ணீர் இருக்கிறது. 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை, கடந்த ஆண்டுவரை முழுவதுமாக நிரம்பி வழிந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் 76 அடியாகக் குறைந்துவிட்டது. இதில் சுமார் 40 அடிக்குச் சகதியும், 36 அடிக்கு நீரும் இருக்கின்றன.

கோயம்புத்தூரின் பல பகுதிகளில் 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான குடிநீர் விநியோகம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. அவர்கள், ஆங்காங்கே குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனாலும், குடிநீர் விநியோகம் தடைபட்டு வருகிறது.

‘சிறுவாணியில் தண்ணீர் தீர்ந்தாலும், பில்லூர் அணையை வைத்து ஓட்டிக்கொள்ளலாம் அதற்குள் மழையும் வந்துவிடும்’ என்று அதிகாரிகள் கணக்குப் போட்டனர். ஆனால், தற்போது பில்லூரிலும் தண்ணீரின் அளவு குறைந்துகொண்டிருக்கிறது. எதிர்பார்த்தபடி மழை பெய்யாவிட்டால், கோயம்புத்தூரின் நிலைமை இன்னும் மோசமாகலாம்!

- இரா.குருபிரசாத், படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு