Published:Updated:

தமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி
தமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி

தமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி

பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி

காஞ்சிபுரம் - பாலாற்றைப் பாழாக்கும் தொழிற்சாலைகள்!

கா
ஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் 912 ஏரிகளும் ஊரகவளர்ச்சித் துறையின் பராமரிப்பில் 1,083 ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகளும் பாலாறு, வேகவதி ஆறு, செய்யாறு, அடையாறு ஆகிய ஆறுகளும்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்கள்.

கடந்த 2015-ம் ஆண்டில் பெய்த பெருமழையில் மாவட்டத்தின் அனைத்து ஏரிகளும் நிரம்பின. அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும்பாலான ஏரிகள் நிறைந்தாலும் ஒரு சில ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

குறிப்பாகக் கடந்த ஆண்டு, மாவட்டத்தின் முக்கிய ஏரிகளான தாமல் ஏரி, தென்னேரி, கொண்டங்கி ஏரி, உத்திரமேரூர் ஏரி, பொன்விளைந்த களத்தூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மதுராந்தகம் ஏரி, மணிமங்கலம் ஏரி, காயார் ஏரி, கொளவாய் ஏரி ஆகியவை நிரம்பவில்லை. உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் சரணாலயம் பறவைகளின்றி வெறிச்சோடியது.

தமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி

ஆயக்கட்டு இல்லாததால், செங்கல்பட்டு கொளவாய் ஏரியில் மட்டும் தற்போது தண்ணீர் இருக்கிறது. மதுராந்த கம் ஏரியின் ஆழம் 23 அடி. அதில் பத்து அடிக்குச் சேறுதான் உள்ளது. மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் 30 ஆண்டுகளாகக் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். மதுராந்தகம் ஏரிக்கான நீர் வரத்துக் கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன.

ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்குநாள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றுக்குத் தேவையான நீர் முழுவதும் பாலாற்றில் இருந்தே எடுக்கப்படுகிறது. தற்போதுதான் பாலாற்றில் வல்லிபுரம், வாயலூர் ஆகிய இரண்டு பகுதிகளில் தடுப்பணை கட்டும் பணியைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

செங்கல்பட்டு நகர சாக்கடைக் கழிவுகள் கொளவாய் ஏரியில் விடப்படுகின்றன. இதனால் அந்த நீரை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கொளவாய் ஏரியைத் தூய்மைப்படுத்தினால், சென்னைக்குத் தண்ணீர் வழங்க முடியும்.

பொன்விளைந்த களத்தூர் ஏரியின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மந்தமாகவே இருக்கிறது.

பண்டைய காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்தாலே தண்ணீர் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.

- பா.ஜெயவேல்

கரூர் - தண்ணீரைத் திருடும் அரசு... மணலைத் திருடும் அரசியல்வாதிகள்! - காய்ந்துபோன கரூர்!

கா
விரி, அமராவதி ஆகிய ஆறுகள் இருந்தும் தண்ணீருக்குத் தள்ளாடுகிறது, கரூர் மாவட்டம். காரணம், காவிரி ஆற்றில் கணக்கு வழக்கு இல்லாமல் அரசியல்வாதிகள் நடத்தும் மணல் கொள்ளை. மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை உள்ளிட்ட ஒன்றியங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. காவிரியில் குடிநீர்த் தேவைக்காக 1,000 கன அடிவரை தண்ணீர் திறந்துவிட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால், கரூர் காவிரியில் நடப்பதே வேறு.

தமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி

காவிரி ஆற்றில் குடிநீருக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், புகழூரில் இயங்கிவரும் அரசு நிறுவனமான டி.என்.பி.எல் காகித ஆலை, ராட்சத மோட்டார்களைப் போட்டு 80 சதவிகிதத் தண்ணீரை உறிஞ்சிக்கொள்கிறது. ஏற்கெனவே, காவிரி ஆற்றுக்குள் உறை கிணறு அமைத்து ராட்சத இயந்திரம்மூலம் ஆலைக்கு நீர் எடுக்கப்படுகிறது. ஆற்றுக்குள் வரும் தண்ணீரில் கான்கிரீட், மணல் அணைகளை அமைத்து நீரேற்று நிலையம்மூலம் தினமும் இரண்டு கோடி லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி விடுகிறார்கள். இதனால், மாயனூர் கதவணைக்கு 120 கன அடி தண்ணீர்தான் போகிறது. கரூர் மாவட்டத்திலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

- துரை.வேம்பையன்
படம்: நா.ராஜமுருகன்

கன்னியாகுமரி -  பருவமழை பலமானால் தாகம் தீரும்!

ன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மாம்பழத்துறையாறு, பொய்கை, சிற்றார்-1, சிற்றார்-2 ஆகிய அணைகள் விவசாயத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முக்கடல் அணை நீர் மட்டுமே நாகர்கோவில் மாநகராட்சியின் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள், குடிநீர்த் திட்டங்கள்மூலம் மாவட்டம் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தென்மேற்குப் பருவமழை பரவலாகப் பெய்ததால் குளங்கள், கிணறுகளில் தண்ணீர் கிடைக் கின்றன. அதேநேரம் 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை, இப்போது மைனஸ்-1 அடிக்குக் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதனால் 15 நாள்களுக்கு ஒரு முறைதான் நாகர்கோவில் நகர மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி

முக்கடல் அணையிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கும் கிருஷ்ணன் கோயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் 2,80,000 மக்கள் உள்ளனர். நகரம் முழுவதும் குடிநீர் வழங்கத் தினமும் 21 எம்.எல்.டி தண்ணீர் தேவை. முக்கடல் அணையின் மொத்தக் கொள்ளளவு 3,000 எம்.எல்.டி. அணை முழுவதும் நிரம்பினால் 150 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்க முடியும். பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் அனந்தனார் கால்வாயிலிருந்தும் நாகர்கோவில் மாநகராட்சிக் குடிநீருக்காகத் தண்ணீர் எடுக்கப்படும். இப்போது அனந்தனார் கால்வாயிலும் தண்ணீர் இல்லை. முக்கடல் அணையிலும் தண்ணீர் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதனால், குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த பருவமழைக் காலத்தில் மட்டும் 4,000 எம்.எல்.டி தண்ணீர் அணையிலிருந்து உபரிநீராக வெளியேறிக் கடலில் கலந்துள்ளது. முக்கடல் அணையின் உயரத்தை அதிகரித்து, தூர்வாரினால் மேலும் 2,000 எம்.எல்.டி தண்ணீரைச் சேமிக்க முடியும். தென்மேற்குப் பருவமழை பலமானால் மட்டுமே கன்னியாகுமரியின் தாகம் தீரும்!

- ஆர்.சிந்து, படம்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு