Published:Updated:

தமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்
தமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்

தமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்

பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்

விழுப்புரம் - 60 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத அணை...  விரக்தியில் விழுப்புரம் மக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில், கோமுகி அணை, மணிமுக்தா அணை, வீடூர் அணை ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்கள். தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறு, கோமுகி ஆறு, மலட்டாறு போன்றவை இம்மாவட்டத்தில் ஓடும் முக்கிய ஆறுகள். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாத்தனூர் அணையின் உபரி நீர், விழுப்புரம் கள்ளக்குறிச்சிப் பகுதி மக்களின் தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்தி செய்கிறது.

கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில், 46 அடி ஆழத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது, கோமுகி அணை. கள்ளக்குறிச்சிப் பகுதி மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணையை நம்பி 2,024.29 ஹெக்டேர் விளை நிலங்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக இந்த அணை தூர்வாரப்படாததால், நீர் வரத்துக் காலத்தில் 25 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்க முடிகிறது.

தமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்

கள்ளக்குறிச்சிப் பகுதியில் இருக்கும் இன்னோர் அணை மணி முக்தா அணை. 36 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் 5,893 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. தற்போது சொட்டு நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

விக்கிரவாண்டிக்கு அருகே உள்ள வீடூர் அணையின் உயரம் 32 அடி. இந்த அணை விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், வானூர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு, விழுப்புரம், புதுச்சேரியில் உள்ள சுமார் 3,200 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கும் துணை நின்றது. இந்த அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளாகியும் இதுவரை தூர் வாரப்படவில்லை.

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் நீர் ஆதாரத்துக்காக 80ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது, நந்தன் கால்வாய்த் திட்டம். சாத்தனூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை இடது புறக் கால்வாய் வழியாகத் திருப்பி, நந்தன் கால்வாயை இணைத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 36 ஏரிகளும் நிரம்பும். ஆனால் 1939-ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜி தொடங்கி தற்போதைய முதல்வர் எடப்பாடி வரை இந்தத் திட்டம் குறித்துப் பேசிவிட்டார்கள். ஆனால், வேலைதான் ஆரம்பித்தபாடில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 2,172 ஏரிகளும் 3,873 குளங்களும் இருக்கின்றன. இதில் 600-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்குத் தென்பெண்ணை ஆறுதான் ஆதாரம். தொடர் மணல் கொள்ளையால் இந்த ஆற்றுப் பகுதியிலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

- ஜெ.முருகன்
படம்: எஸ்.தேவராஜன்

வேலூர் - ஊரெல்லாம் ஏரிகள் இருந்தும் நீரில்லை!

வே
லூர் மாவட்டத்தில், பொதுப்பணித் துறையின் கட்டுப் பாட்டில் 519 ஏரிகளும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட் டில் 629 ஏரிகளும் என மொத்தம் 1,148 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் ஒன்றில்கூட தண்ணீர் இல்லாததுதான் வேதனை. ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல், பாளம் பாளமாக வெடித்துப் புதர் மண்டிக்கிடக்கின்றன, ஏரிகள். வேலூர் மாநகருக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஓட்டேரி, சதுப்பேரி ஏரி ஆகியவை புதர் மண்டிக் கிடக்கின்றன. அரக்கோணம் குருவராஜப் பேட்டையில் உள்ள பொதுக்குளத்தில் கழிவுநீர் கலந்துவிடப்படுவதால் பயன்பாடின்றிக் கிடக்கிறது.

தமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்

இங்கு உள்ள மோர்தானா அணை, ராஜா தோப்பு அணை, ஆண்டியப்பனூர் அணை ஆகியவற்றிலும் தரை தெரிய ஆரம்பித்துவிட்டது. 38 அடி உயரம்கொண்ட மோர்தானா அணையில் மூன்று அடி அளவுதான் தண்ணீர் இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்துக்குத்தான் இந்தத் தண்ணீரை விநியோகிக்க முடியும். பாசனக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் வறண்டுவிட்டன. குடிநீருக்கும் விவசாயத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீர் பிரச்னையைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஆர்வம் காட்டவில்லை என்று பரவலாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

- கோ.லோகேஸ்வரன், படம்: ச.வெங்கடேசன்

 திருவாரூர் - தொலைநோக்குப் பார்வையில் திட்டங்கள் வேண்டும்!

தி
ருவாரூர் மாவட்டத்துக்குக் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டமும் உள்ளாட்சி அமைப்பு களால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு களும்தான் குடிநீர் ஆதாரங்கள். கோடை தொடங்குவதற்கு முன் தினமும் இரண்டு வேளைகள் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, மூன்று நாள்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றாலோ, பருவ மழை கிடைக்கவில்லை என்றாலோ இம்மாவட்டத்தில் மோசமான பாதிப்புகள் உருவாகும். காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருப்பதால், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கைகொடுக்கும் என்பது தெரியாது.

தமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்

முறையான சேமிப்பு இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டு காவிரி தண்ணீர், கொள்ளிடம் வழியாகக் கடலில் கலந்தது. தடுப்பணைகள் கட்டியிருந்தால், விவசாயத்துக்கும் குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர் கிடைத்திருக்கும்.

திருவாரூர் மாவட்டத்தில், 17 ஆறுகள், 3,800 முதன்மை வாய்க்கால்கள், 12,000 பி சேனல் வாய்க்கால்கள் ஓடுகின்றன. ஏராளமான ஏரி, குளங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் தூர்வாரி சீரமைக்காத காரணத்தால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழக அரசு, தொலைநோக்குப் பார்வையுடன் நீர் மேலாண்மைத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது அவசியம்!

- கு.ராமகிருஷ்ணன், படம்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு