Published:Updated:

`இயேசுவைப் போன்று துன்பங்களைத் தாங்கினால் விண்ணக வாழ்வு சிறக்கும்’ - தவக்காலச் சிந்தனை! #Lentdays

ஆண்டவர் இயேசுவுக்கு முன்பாக பாடுகள், சிலுவை மரணம் போன்ற சவால்கள் இருந்தன.

`இயேசுவைப் போன்று துன்பங்களைத் தாங்கினால் விண்ணக வாழ்வு சிறக்கும்’ - தவக்காலச் சிந்தனை! #Lentdays
`இயேசுவைப் போன்று துன்பங்களைத் தாங்கினால் விண்ணக வாழ்வு சிறக்கும்’ - தவக்காலச் சிந்தனை! #Lentdays

வாழ்க்கை சவால்கள் நிறைந்தது என்பதால், அதைச் சந்திக்க முடிவெடுத்த ஒருவர் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தார். ஆனாலும் அவர் பல்வேறு கட்ட வளர்ச்சிகளைக் கண்டார். இன்னொரு தொழிலதிபரோ சவால்களைத் தவிர்த்தார். ஆனாலும் அவருக்குச் சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தன.

ஒரு நாள் இரண்டாவது தொழிலதிபர் முதல் நபரைச் சந்தித்து, `போராட்டங்களின் நடுவே நீங்கள் வளர்ந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் போராட்டங்களைத் தவிர்க்கிறேன், என்னால் வளர முடியவில்லையே, ஏன்?’ என்று கேட்டார். அதற்கு முதலாவது தொழிலதிபர் மிகவும் பொறுமையாக, `நான் கழுகுகளோடு போராடுகிறேன்; ஆகாயமே எனக்குச் சொந்தமாகிறது. நீங்களோ கோழிகளோடு சண்டையிடுகிறீர்கள். அதனால்தான் கொஞ்சமாக தானியம் கிடைக்கிறது. அதுவும் கொத்தப்பட்ட பிறகு! இனிமேலாவது நீங்கள் உங்களது வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள். அப்போது என்னைப் போன்று உங்களுக்கும் ஆகாயம் சொந்தமாகும்' என்றார்.
வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால், சவால்களைக் கண்டு பயந்தவருக்கு வெற்றி கிடைப்பதில்லை; அவற்றை எதிர்த்து நின்று போராடியவருக்கே வெற்றி கிடைக்கும். ஆண்டவர் இயேசுவுக்கு முன்பாக பாடுகள், சிலுவை மரணம் போன்ற சவால்கள் இருந்தன. அவற்றைக் கண்டு அவர் பயப்படாமல், துணிவுடன் எதிர்கொண்டார். அதனால் அவர் சரித்திரத்தில் இடம்பிடித்தார். இயேசு கிறிஸ்து சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளத் தயாரானார் என்பதற்கான ஓர் உன்னத நிகழ்வுதான் அவருடைய உருமாற்ற நிகழ்வு. இந் நிகழ்வு நமக்குக் குறித்துக் காட்டும் செய்திகள் என்ன? இயேசுவைப் போன்று மாட்சியடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம். 

இயேசு உருமாற்றம் அடைவதற்கான தேவை என்ன? என்ற இந்தக் கேள்விக்கான விடை லூக். 9: 18 - 27 மற்றும் மத். 16: 21 - 23 ஆகியவற்றில் இருக்கின்றன. அவற்றில் இயேசு, எருசலேமில்தான் அடைய இருந்த பாடுகளையும், சிலுவை மரணம் குறித்தும் பேசுவார். உடனே பேதுரு அவரிடம், `ஆண்டவரே, இது வேண்டாம், இப்படி உமக்கு நடக்கவே கூடாது’ (மத் 16:22) என்பார். 


இந்தச் சொற்கள் பேதுருவின் வாயிலிருந்து வந்த சொற்களாக இருந்தாலும், அவை ஏன் சீடர்கள் மற்றும் யூதர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. யூதர்கள், மெசியா என்பவர் எல்லா நாடுகளையும் தன்னுடைய ஆளுகைக்கு உட்படுத்தி, ஆட்சி செலுத்தும் ஓர் அரசியல்வாதியாக வருவார் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்ததற்கு மாறாக இயேசு நடந்துகொண்டார். மெசியா என்றால் அரசியல் மெசியா அல்ல, அவர் துன்புறும் ஊழியர் என்று காட்ட விழைந்ததால், சீடர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட தருணத்தில்தான் இயேசு, தன்னுடைய உருமாற்றத்தின் வழியாகத் தன்னை மெசியா, இறைமகன் (யோவா 1:14) என்பதை சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார். அந்த வகையில் இயேசுவின் சீடர்களுக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வு.

இயேசுவைப் பொறுத்தவரை இந்நிகழ்வு அவருடைய வாழ்வில் நடந்த மிகவும் முக்கியமான நிகழ்வாக இருக்கிறது. எப்படியென்றால், இயேசு தந்தையாகிய கடவுளின் விருப்பத்துக்கு ஏற்றபடி செயல்பட்டார் என்பதை மேகத்திலிருந்து ஒலித்த, `இவரே என் மைந்தர்; நான் தேர்ந்துகொண்டவர் இவரே' என்ற குரல் உறுதிசெய்வதாக இருக்கிறது. ஏற்கெனவே இயேசுவின் திருமுழுக்கின்போது ஒலித்த இதே குரல் (லூக் 3:22), பின்னாளில் அவர் தந்தையின் திருவுளத்தை நிறைவுசெய்துவிட்டார் என்பதைக் குறிக்கும்வகையில் `மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்’ (யோவா 12: 28) என்று ஒலித்தது. அந்தவகையில் இயேசுவின் இந்த உருமாற்ற நிகழ்வு, அவருக்குத் தந்தையாகிய கடவுளிடமிருந்து உறுதியான வார்த்தைகளைப் பெற்றுத்தந்த நிகழ்வாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இயேசுவின் உருமாற்றத்துக்கான தேவை என்ன என்பதை அறிந்த நாம், இயேசுவின் உருமாற்றம் நமக்கு எடுத்துச் சொல்லும் செய்தி என்ன என்பதுகுறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்குத் தரும் மிக முக்கியமான செய்திகளில் ஒன்று, `துன்பமின்றி இன்பமில்லை’ என்பதாகும். இயேசு உயிர்த்து, விண்ணேற்றமடைந்து, தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்தார். அதற்கு முன்பாக அவர் பாடுகள் பட்டு, மிகக் கொடிய சிலுவை மரணம் அடைந்தார். அப்படியென்றால், அவருடைய சிலுவை மரணமே அவருடைய விண்ணக மாட்சிக்குக் காரணமாகவும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற அவர் அடைந்த துன்பமே அவருடைய இன்பத்துக்குக் காரணமாகவும் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கும் நாம்  ஒவ்வொருவரும் அவரைப் போன்று பாடுகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொள்ளும்போதுதான் அவரைப் போன்று விண்ணக மகிமையை அடைய முடியும்.

இதைத்தான் இயேசுவின் உருமாற்றத்தைக் கண்கூடாகப் பார்த்த பேதுரு, `கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்தனை பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்போது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்' என்கின்றார் (1 4;13). எனவே, இயேசு அடைந்த மாட்சியை நாமும் அடைய வேண்டும் என்றால், அவரைப் போன்று துன்பங்களையும் சவால்களையும் தாங்கிக்கொள்ள வேண்டும்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்குத் தருகின்ற இரண்டாவது செய்தி, மேகம் போன்று மறையும் மாயையைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்காமல், மன உறுதியுடன் இறை வார்த்தையைக் கேட்டு நடக்க வேண்டும் என்பதாகும். இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் நிகழ்ந்த அற்புதக் காட்சியைப் பார்த்துவிட்டு, பேதுரு இயேசுவை நோக்கி, `நாம் இங்கேயே இருப்பது நல்லது’ என்று சொல்லும்போது, மேகத்திலிருந்து வந்த ஒரு குரல், `இவருக்குச் செவி சாயுங்கள்’ என்று ஒலிக்கிறது. இதன்மூலம் இயேசுவின் சீடர்கள் தற்காலிகமாக இருக்கும் அற்புத நிகழ்வைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்காமல், நிலைவாழ்வு தரும் இயேசுவின் வார்த்தைக்குச் (யோவா 6:68) செவிமடுத்து வாழ அழைக்கப்படுகின்றனர். நாமும்கூட பலநேரங்களில் மாய உலகில் சிக்கித் தவிக்கிறோம். இத்தகைய சூழலில் வாழ்வுதரும் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பது சிறந்தது.

`கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்’ (யோவா 12:24) என்பார் இயேசு. நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களை, சிலுவைகளை மன உறுதியுடன் தாங்கிக்கொள்வோம். அதன்வழியாக விண்ணக மகிமையை, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.